பதவியேற்பு விழாவுக்கு பிரதமர் மோடியை அழைக்க இம்ரான் கான் விருப்பம்

58
பதவியேற்பு விழாவுக்கு  பிரதமர் மோடியை அழைக்க இம்ரான் கான் விருப்பம்
பதவியேற்பு விழாவுக்கு பிரதமர் மோடியை அழைக்க இம்ரான் கான் கட்சி விருப்பம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் அவரது கட்சி ஆலோசனை நடத்தி வருகிறது.
பாகிஸ்தானில் கடந்த மாதம் தேர்தல் நடைபெற்றது. இதில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தலைமையிலான பிடிஐ கட்சி, அதிக இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆனால் ஆட்சியமைக்க போதுமான இடங்களை அந்தக் கட்சியால் பெற முடியவில்லை. இந்த நிலையில் மற்ற கட்சிகளுடன் உதவியுடன் ஆட்சியமைக்க இம்ரான் கான் முடிவு செய்துள்ளார்.
மேலும், பாகிஸ்தானின் சுதந்திர தினமான, வரும் 14-ஆம் தேதிக்குள் பதவியேற்பு விழாவை நடத்துவதற்கான முயற்சிகளில் இம்ரானின் கட்சி தீவிரமாக உள்ளது. இதனிடையே, அந்தப் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக, இந்திய கிரிக்கெட் பிரபலங்கள் சுனில் கவாஸ்கர், கபில் தேவ், இந்தி நடிகர் ஆமிர்கான் ஆகியோருக்கு அக்கட்சி அழைப்பு விடுத்து விட்டது. மேலும், அந்த விழாவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட சார்க் கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க வேண்டும் என்று அக்கட்சி விரும்புகிறது. மோடி உள்ளிட்ட தலைவர்களுக்கு அழைப்பு விடுப்பதற்காக, பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சகத்திடம் பிடிபி கட்சி ஆலோசனை கேட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
அதற்கு, பதவியேற்பு விழாவுக்கு வெளிநாட்டுத் தலைவர்களுக்கு அழைப்பு விடுப்பது, மிகவும் முக்கியமான விஷயமாகும். அதில், அனைத்து விஷயங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது; என்று வெளியுறவு அமைச்சகம் பதிலளித்துள்ளது. மேலும், அந்த அழைப்பை பிரதமர் மோடி நிராகரித்துவிட்டால், அது பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய தர்மசங்கடத்தை ஏற்படுத்தி விடும் என்றும் அந்த அமைச்சகம் கூறியதாக, ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
SHARE