மின் துண்டிப்பை கண்டித்து மன்னாரில் பேரணி

98
மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக  ஏற்பட்டு வரும் மின் துண்டிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மன்னாரில் இன்று (3) வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் மாபெரும் கவனயீர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பட்டது.மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் குறித்த பேரணி இடம் பெற்றது.
 மன்னார் மாவட்டத்தில் நீண்ட காலமாக சீரான மின்சாரம் வழங்கப்படாத நிலையில் அடிக்கடி மின் தடங்கள் ஏற்பட்டு வருகின்றது.
குறிப்பாக தினமும் சில மணி நேரம்  அல்லது நாள் முழுவதும்   மின்சாரம் துண்டிக்கப்படுவது வழமையாகிய நிலையில் காணப்படுவதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதனால் தொடர்ச்சியாக பல்வேறு தரப்பினரும் பாதிப்படைந்து வருகின்றனர்.
குறிப்பாக தற்போது உயர்தர பரீட்சைக்கு தோற்றுகின்ற மாணவர்கள் பாதிப்படைவதோடு,தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள  மாணவர்களும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
மேலும் வர்த்தகர்கள், பொது மக்கள் என அனைத்து தரப்பினரும் பாதிப்படைந்து வரும் நிலையில் உரிய தீர்வை பெற்றுக்கொள்ளும் வகையில் குறித்த கவணயீர்ப்பு பேரணி இடம் பெற்றது.
காலை 10.30 மணியளவில் மன்னார் பொது வைத்தியசாலைக்கு முன் ஆரம்பமான குறித்த பேரணி பிரதான வீதியூடாக சென்று மன்னார் மாவட்டச் செயலகத்தை சென்றடந்தது.
குறித்த பேரணியில் கலந்து கொண்டவர்கள் பல்வேறு வசனங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியவாறு கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த பேரணியில் மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார்,சர்வமத தலைவர்கள், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சாள்ஸ் நிர்மலநாதன், வடமாகாண சபை உறுப்பினர்களான சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிறாய்வா,சட்டத்தரணி பா.டெனிஸ்வரன், மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன்,மன்னார் நகர சபை உறுப்பினர் ஜோசப் தர்மன் ரெட்ணசிங்கம் குமரேஷ் ,பிரதேச சபைகளின் உறுப்பினர்கள்,பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள்,வர்த்தகர்கள்,முச்சக்கர வண்டி ஓட்டுனர்கள் என நூற்றுக்கணக்கானவர்கள்  கலந்து கொண்டு குறித்த பேரணிக்கு ஆதரவு தெரிவித்தனர்.
குறித்த பேரணியின் இறுதியில் கோரிக்கை அடங்கிய மகஜர் மன்னார் பிரஜைகள் குழுவினரினால் மன்னார் மேலதிக    அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் மற்றும் மின் பொறியலாளர் ஆகியோருக்கு கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
SHARE