வவுனியாவில் நுண்நிதி நிறுவன ஊழியர்களை திருப்பி அனுப்பிய கிராம மக்கள்!

21

வவுனியா சாந்தசோலை கிராமத்தில் கடனிற்கான அறவீட்டு தொகையை பெற்றுக்கொள்வற்காக வருகை தந்த நுண்நிதி நிறுவன உத்தியோகத்தர்களிடம் கிராம மகளீர் அமைப்பினர் முரண்பட்ட சம்பவம் ஒன்று நேற்று(திங்கட்கிழமை) இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடனை அறவிட வருகை தந்த ஊழியர்களை கிராமத்திற்குள் வரவேண்டாம் என கூறிய பெண்கள் வழமையாக கடன் அறவிடும் வீட்டிற்குள்ளும் அனுமதிக்கவில்லை.

இதனால் ஊழியர்களுக்கும், பெண்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டதுடன் கிராமத்திற்குள் வருகை தந்து இனிமேல் கடன் வழங்க வேண்டாம் எனவும், கடனை அறவிடுவதாயின் கடன் பெற்றவர்களை நிறுவனத்திற்கு அழைத்து அறவிட்டுக் கொள்ளுமாறும் திட்டவட்டமாக தெரிவித்ததுடன் பொலிஸாருக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.

இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் குழப்பம் நீடித்தது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த பெண்கள், நுண்நிதி கடன்களால் பல பிரச்சினைகள் எமது கிராமத்தில் ஏற்பட்டுள்ளது. ஒருவர் ஐந்திற்கும் மேற்பட்ட நிறுவனத்திடம் இருந்து கடன்களை பெற்றுள்ளார்.

கடனை செலுத்துவதற்காகவே சிலர் கடன்களை பெறுகின்றனர். வருமானம் வறுகின்ற வழிமுறையை பார்காமல் சிலருக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. எனவே எதிர்காலத்தில் மரணங்கள் ஏற்படகூடிய வாய்புகள் இருப்பதுடன், சில ஊழியர்கள் மாலை வரை ஊருக்குள் நிற்கின்றார்கள் இதனால் பல பிரச்சினைகள் பெண்களுக்கு ஏற்படுகின்றது.

எனவே பாராதூரமான விளைவுகளை முன்கூட்டியே தவிர்க்கும் விதமாக எமது கிராமத்திற்குள் இனிமேல் எந்த நிறுவனமும் கடன்களை வழங்கும் நோக்குடனோ அல்லது வழங்கிய கடனுக்கான கட்டணத்தை அறவிடும் நோக்குடனோ வருகை தரகூடாது எனவும், கடன்களை அறவிடுவதென்றால் உரிய நிறுவனங்கள் தமது அலுவலகத்திற்கு அழைத்து பெற்றுகொள்முடியும் எனவும் கூறினர்.

அத்துடன் இது தொடர்பாக பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச சபையினருக்கும் தாம் தெரியப்படுத்தி அவர்களுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்தனர். இதேவேளை, ஊழியர்களை கிராமத்திற்குள் வரவேண்டாம் என அப்பகுதி பெண்கள் பிடிவாதமாக நின்றமையால் மூன்று நிதி நிறுவன ஊழியர்கள் திரும்பிசென்றமை குறிப்பிடத்தக்கது.

SHARE