முத்துவேல் கருணாநிதி அவர்களின் வாழ்வும், மறைவும்

388

முத்துவேல் கருணாநிதி (1924 – 2018) திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் முன்னாள் தமிழக முதல்வரும் ஆவார். மே 13, 2006ல் ஐந்தாவது முறையாக தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். கருணாநிதி, தமிழ்த் திரையுலகில் கதை, உரையாடல் பணிகளில் ஈடுபாடு கொண்டவர். ‘தூக்குமேடை’ நாடகத்தின் போது எம். ஆர். ராதா, இவருக்கு ‘கலைஞர்’ என்ற பட்டம் அளித்தார். இன்றும் அப்பெயராலேயே இவரது ஆதரவாளர்களால் அழைக்கப்படுகின்றார். இந்திய அரசியலில் தொடர்ந்து ஒரு பங்கு வகித்த மிக முக்கியமான மூத்த அரசியல் பிரமுகர்களுள் ஒருவர் ஆவார். இவர் 7 ஆம் திகதி ஓகஸ்ட் 2018 ஆம் ஆண்டு தன்னுடைய 94 ஆம் அகவையில் காலமானார்.


5 முறை தமிழகத்தின் முதலமைச்சராக பதவி வகித்தவர். 1969 முதல், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக இருக்கிறார். 13 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வானவர். போட்டியிட்ட அனைத்துத் தேர்தலிலும் வெற்றி பெற்ற பெருமை இவருக்கு உண்டு.

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ஜூன் 3-இல் ஏழை இசை வேளாளர் குடும்பத்தில் முத்துவேலருக்கும் அஞ்சுகம் அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். கருணாநிதி, தனது பள்ளிப் பருவத்தில் நாடகம், கவிதை, இலக்கியம் ஆகியவற்றில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். நீதிக்கட்சியின் தூணாக கருதப்பட்ட பேச்சாளர் அழகிரிசாமியின் பேச்சால் ஈர்க்கப்பட்ட கருணாநிதி, தனது 14ஆவது அகவையில், சமூக இயக்கங்களில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். தனது வளரிளம் பருவத்தில், வட்டார மாணவர்கள் சிலரின் உதவியுடன் இளைஞர் மறுமலர்ச்சி அமைப்பை உருவாக்கினார். இளைஞர்கள் தங்கள் பேச்சாற்றலையும் எழுத்தாற்றலையும் வளர்த்துக்கொள்ள அவ்வமைப்பு உதவியது. சில காலத்துக்குப் பின், அவ்வமைப்பு மாநில அளவிலான “அனைத்து மாணவர்களின் கழகம்” என்ற அமைப்பாக உருபெற்றது. இது திராவிட இயக்கத்தின் முதல் மாணவர் பிரிவாக இருந்தது. கருணாநிதி, மற்ற உறுப்பினர்களுடனான சமூகப் பணியில் மாணவர் சமூகத்தையும் ஈடுபடுத்தினார். தி.மு.க. கட்சியின் உத்தியோகபூர்வ செய்தித்தாளான முரசோலி வளர்ந்து அதன் உறுப்பினர்களுக்காக ஒரு பத்திரிகை ஒன்றை அவர் ஆரம்பித்தார். கருணாநிதி தமிழ் அரசியலில் களமிறங்குவதற்கு உதவிய முதல் பிரதான எதிர்ப்பு, கல்லக்குடி ஆர்ப்பாட்டத்தில் (1953) ஈடுபட்டது. இந்த தொழிற்துறை நகரத்தின் அசல் பெயர் கள்ளகுடி. இது வட இந்தியாவில் இருந்து ஒரு சிமென்ட் ஆலை ஒன்றை உருவாக்கிய சிம்மோகிராம் பிறகு டால்மியாபுரத்தில் மாற்றப்பட்டது. தி.மு.க அந்த பெயரை கள்ளுகுடிக்கு மாற்ற வேண்டுமென விரும்பினார் . கருணாநிதி மற்றும் அவருடைய தோழர்கள் இரயில் நிலையத்திலிருந்து டால்மியாபுரம் என்ற பெயரை அழித்தனர் மற்றும் ரயில்களின் பாதைகளைத் தடுப்பதைத் தடுக்கிறார்கள். ஆர்ப்பாட்டத்தில் இருவர் இறந்தனர், கருணாநிதி கைது செய்யப்பட்டார்.

  

   

கருணாநிதி தன்னுடைய 14 வது வயதில் நீதிக்கட்சித் தலைவர்களில் ஒருவரான அழகிரிசாமியின் பேச்சின்பால் ஈர்க்கப்பட்டு, அரசியலில் ஈடுபடலானார். அதன்பின் இந்தி எதிர்ப்பு போரட்டத்தின் மூலம் தன் அரசியல் தீவிரத்தைக் காட்டினார். அவர் வாழ்ந்த திருவாரூர் பகுதியில் இளைஞர்களை ”மாணவ நேசன் “என்ற துண்டு கையெழுத்துப் பதிப்புகள் மூலம் ஒன்று திரட்டினார். அவ்விளைஞர் அணியை பின் மாணவர் அணியாக “தமிழ்நாடு மாணவர் மன்றம்” என்ற பெயரில் உருவாக்கினார். தமிழ்நாட்டில் உருவான முதல் திராவிட இயக்க மாணவர் அணி என்ற நிலையை ஏற்படுத்தினார். கருணாநிதியும் அவரது மாணவர் அணித் தோழர்களும் பல்வேறு குடிசை வாழ் மக்களிடையே சென்று சமூக பணிகளிலும், விழிப்புணர்வு வேலைகளிலும் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் அவர் துண்டுப் பதிப்பாகத் தொடங்கிய முரசொலி செய்தித்தாளாக,  கட்சிப் பத்திரிகையாக உருவெடுத்தது. முரசொலி ஆரம்பித்த முதலாமாண்டு விழாவை தன் மாணவர் மன்ற அணித்தோழர்களான அன்பழகன், இரா. நெடுஞ்செழியன், மதியழகன் ஆகியோருடன் கொண்டாடினார்.

1957 இல் நடைபெற்ற திமுக இந்தி எதிர்ப்பு மாநாட்டில் தமிழ் நாட்டில் நடுவண் அரசால் இந்தி திணிக்கப்படுவதை வன்மையாக எதிர்ப்பதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அக்டோபர் 13, 1957 அன்றைய நாளை இந்தி எதிர்ப்பு நாளாக பெருந்திரளான மக்களுடன் அமைதியான முறையில் கடைப்பிடிப்பது என முடிவானது. இப்போராட்டத்துக்கு தலைமை தாங்கிய கருணாநிதி நடுவண் அரசின் இந்தி திணிப்பை எதிர்த்து இவ்வாறு முழக்கமிட்டார்: “மொழிப்போராட்டம்.. எங்கள் பண்பாட்டை பாதுகாக்க, இது எமது மக்களின் தன்மானம் மற்றும் எங்களது கட்சியின் அரசியல் கொள்கை.. மேலும் இந்தி என்பது உணவு விடுதியிலிருந்து எடுத்துச் செல்லும் உணவு (எடுப்பு சாப்பாடு), ஆங்கிலம் என்பது ஒருவர் சொல்ல அதன்படி சமைக்கப்பட்ட உணவு, தமிழ் என்பது குடும்பத் தேவையறிந்து, விருப்பமறிந்து, ஊட்டமளிக்கும் தாயிடமிருந்து பெறப்பட்ட உணவு” என்று அவர் கூறினார். அக்டோபர், 1963, இந்தி எதிர்ப்பு மாநாடு சென்னையில் (மதராஸ்) கூட்டப்பட்டது. இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் நடுவண் அரசின் புரிந்துகொள்ளாமையை உணர்த்தும் விதமாக இந்திய அரசியலமைப்பு தேசிய மொழிகள் சட்ட எரிப்பு போராட்டம் நடத்துவெதென மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது. நவம்பர் 16 அன்று அண்ணாதுரையும், நவம்பர் 19 அன்று கருணாநிதியும் கைது செய்யப்பட்டு 25 நவம்பர் அன்று உயர் நீதிமன்ற ஆணையால் விடுவிக்கப்பட்டனர்.

தேர்தல்

1957-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் குளித்தலை தொகுதியிலும், 1962-ல் தஞ்சாவூர் தொகுதியிலும், 1967, 1971-தேர்தல்களில் சைதாப்பேட்டை தொகுதியிலும், 1977, 1980 தேர்தல்களில் அண்ணா நகர் தொகுதியிலும், 1989, 1991 தேர்தல்களில் துறைமுகம் தொகுதியிலும் 1996, 2001, 2006 தேர்தல்களில் சேப்பாக்கம் தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார் கருணாநிதி. 2011, 2016 சட்டமன்றத் தேர்தல்களில் திருவாரூர் தொகுதியிலும் போட்டியிட்டு ஜெயித்தார். 2016 தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த வேட்பாளர் பன்னீர்செல்வத்தை 68,366 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இது மாநிலத்திலேயே அதிக வாக்கு வித்தியாசமாகும்.

1967-ல் நடைபெற்ற மூன்றாவது தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தலில் தி.மு.க. 138 இடங்களைப் பிடித்து முதல்முறையாக ஆட்சியைப் பிடித்தது அக்கட்சிப் பொதுச்செயலர் அண்ணா தமிழ்நாட்டின் முதல்வரானார். அண்ணாவின் அமைச்சரவையில் போக்குவரத்து மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சராக பொறுப்பேற்றார் கருணாநிதி. அதுவரை தனியார் வசம் இருந்த பேருந்துகள் இக்காலக்கட்டத்தில் தான் நாட்டுடைமையாக்கப்பட்டன. இந்தியாவில் முதன்முறையாக பேருந்துகள் நாட்டுடைமையாக்கப்பட்டது தமிழகத்தில்தான்.

1969 பிப்ரவரி 3-ம் தேதி அண்ணா மறைந்தார். அண்ணாவின் மறைவையடுத்து, அடுத்த முதல்வர் யார் என்பதில் கருணாநிதிக்கும் கல்வியமைச்சராக இருந்த நெடுஞ்செழியனுக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. தந்தை பெரியார் தலையிட்டு சமரசம் ஏற்படுத்தி கருணாநிதியை முதல்வராக பொறுப்பேற்க செய்தார். அதே ஆண்டில் கருணாநிதி திராவிட முன்னேற்றக் கழகத்தின். தலைவராகவும், இரா. நெடுஞ்செழியன் பொதுச்செயலராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

1969-1971, 1971-1976, 1989-1991, 1996-2001, 2006-2011 ஆகிய காலக்கட்டங்களில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டு தமிழக முதல்வராக பொறுப்பு வகித்தார் கருணாநிதி. இரண்டு முறை இவரது ஆட்சியை மத்திய அரசு கலைத்துள்ளது. 1972 அக்டோபர் 14-ல் கட்சிப் பொருளாளராக இருந்த நடிகர் எம்.ஜி.ஆர். தி.மு.க.விலிருந்து வெளியேறி அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை உருவாக்கினார். இது, கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய பிளவாகும்.

1983-ல் ஈழத்தமிழர் பிரச்சினையில் இந்திய, தமிழ்நாடு அரசுகளின் நிலைப்பாட்டைக் கண்டித்து கருணாநிதி, பேராசிரியர் அன்பழகன் ஆகியோர் தங்களது சட்டப்பேரவை உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்தனர். இந்தியைத் திணிக்கும் அரசியல் சட்ட நகலை எரித்ததற்காக 1986 டிசம்பரில் கருணாநிதி உள்ளிட்ட 10 தி.மு.க. பேரவை உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.

கருணாநிதி மீது வைக்கப்படும் முக்கிய விமர்சனம், குடும்ப அரசியல் என்பதாகும். அழகிரி, ஸ்டாலின், கனிமொழி, அக்காவின் மகன் முரசொலி மாறன், முரசொலி மாறனின் மகன் தயாநிதி மாறன் என குடும்ப உறுப்பினர்கள் பலரும் அகில இந்திய அளவிலும், மாநில அளவிலும் பல முக்கியப் பதவிகளில் அமர்த்தப்பட்டார்கள்.

தமிழகத்தின் வலுவான அரசியல் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம், பல தருணங்களில் மத்திய அரசைத் தீர்மானிக்கும் சக்தியாக விளங்கியிருக்கிறது. அத்தருணங்களில் மாநில நலனைக் காட்டிலும் தம் குடும்ப நலனையே கருத்தில் கொண்டு செயல்பட்டார் என்ற விமர்சனமும் இவர் மீது உண்டு. திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சிக் காலங்களிலும் இவரது குடும்பத்தாரின் தலையீடும், அதிகாரமும் பெருமளவு இருப்பதாகக் குற்றச்சாட்டு உண்டு.  மத்தியில் தம் பிள்ளைகளுக்கும் உறவுகளுக்கும் பதவிகள் பெறுவதற்காக பல சமரசங்களை செய்து கொள்வதாகவும் இவர் மீது விமர்சனம் உண்டு.

இவரது மகன்களான ஸ்டாலின், அழகிரி இருவருக்கும் இடையில் வெளிப்படையாக நடக்கும் அதிகாரப்போர் பற்றிய விமர்சனங்களும் இவர் மீது இருக்கிறது.

இவரது கட்சியைச் சேர்ந்த அ.ராஜா மத்தியத் தொலைதொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வழக்கில் இவரது மகள் கனிமொழி கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டதும் குறிப்பிடத்தகுந்தது.

ஈழத்தில் இறுதி யுத்தம் நடந்தபோது, அங்கு உயிருக்குப் போராடிய தமிழர்களைக் காப்பாற்ற போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் இவர் மீது உண்டு. யுத்தம் தீவிரமாக நடந்து கொண்டிருந்தபோது மெரினாவில் இவர் இருந்த சிலமணி நேர உண்ணாவிரதமும் விமர்சனத்துக்கு உள்ளாகியது.

கருணாநிதியின் முதல் மனைவி பெயர் பத்மாவதி. இவருக்கு முத்து என்ற மகன் உள்ளார். திருமணமான சில ஆண்டுகளிலேயே பத்மாவதி உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்து விட்டார். இரண்டாவது மனைவி பெயர் தயாளு அம்மாள். இவருக்கு அழகிரி, செல்வி, ஸ்டாலின், தமிழரசு என நான்கு பிள்ளைகள். மூன்றாவது மனைவி பெயர் ராஜாத்தி அம்மாள். இவருக்கு ஒரு மகள், கனிமொழி.

நாடகம், கவிதை, கட்டுரை, சிறுகதை, நாவல், வரலாறு என எல்லா இலக்கியத் தளங்களிலும் இயங்கியிருக்கிறார் கருணாநிதி. `பழனியப்பன்’ என்ற நாடகமே கலைஞர் முதன்முதலில் எழுதிய நாடகமாகும். திருவாரூரில் அந்த நாடகத்தை அறங்கேற்றம் செய்தார். பிற்காலத்தில் இந்த நாடகம் `நச்சுக்கோப்பை’ என்ற பெயரில் தமிழகம் எங்கும் அறங்கேறியது.  `தூக்குமேடை’, `பரபிரம்மம்’, `சிலப்பதிகாரம்’, `மணிமகுடம்’, `ஒரே ரத்தம்’, `காகிதப்பூ’, `நானே அறிவாளி’, `வெள்ளிக்கிழமை’, `உதயசூரியன்’, `திருவாளர் தேசியம்பிள்ளை’, `அனார்கலி’, `சாம்ராட் அசோகன்’, `சேரன் செங்குட்டுவன்’, `நாடகக்காப்பியம்’, `பரதாயணம்’  உள்பட 17 நாடகங்களை எழுதியுள்ளார். `தூக்குமேடை’ நாடகத்தைப் பார்த்து மகிழ்ந்த நடிகவேள் எம்.ஆர்.ராதா, `கலைஞர்’ என்ற அடைமொழியை கருணாநிதிக்கு வழங்கினார். அதன்பிறகே இவர், `கலைஞர் கருணாநிதி’ என்று அழைக்கப்பட்டார்.

`நளாயினி’, `பழக்கூடை’, `பதினாறு கதையினிலே’ உள்பட நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதியுள்ளார். `புதையல்’, `வான்கோழி’. `சுருளிமலை’, `ஒரு மரம் பூத்தது’, `ஒரே ரத்தம்’, `ரோமாபுரிப் பாண்டியன்’, `தென்பாண்டிச் சிங்கம்’, `பாயும்புலி பண்டாரக வன்னியன்’, `பொன்னர் சங்கர்’ ஆகிய நாவல்களையும் எழுதியிருக்கிறார். `தென்பாண்டிச் சிங்கம்’ நாவல், 1989-ம் ஆண்டுக்கான தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் `ராஜராஜன்’ விருதைப் பெற்றது. எளிய நடையில் திருக்குறளை ஆய்ந்து எழுதிய `குறளோவியம்’, கருணாநிதியின் முக்கிய இலக்கியப் பங்களிப்பாகும். `நெஞ்சுக்கு நீதி’ என்ற பெயரில் தன் வாழ்க்கை நிகழ்வுகளை மூன்று தொகுதிகளாகவும் வெளியிட்டிருக்கிறார்.

`சங்கத்தமிழ்’, `தொல்காப்பிய உரை’, `இனியவை இருபது’, `மேடையிலே வீசிய மெல்லியப் பூங்காற்று’, `மலரும் நினைவுகள்’, `கலைஞரின் கவிதை மழை’, `இளைய சமுதாயம் எழுகவே’ உள்பட 178 நூல்களை கருணாநிதி எழுதியிருக்கிறார். உடன்பிறப்புகளுக்கு இவர் எழுதிய கடிதங்கள் தொகுக்கப்பட்டு 12 தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளன.

1946-ல் `ராஜகுமாரி’ திரைப்படத்தில் இருந்து கருணாநிதியின் திரைப்பயணம் தொடங்குகிறது. அப்படத்திற்கு வசனம் எழுதியிருந்தார். 1952-ல் வெளிவந்த `பராசக்தி’ திரைப்படம் தமிழ்த்திரையுலகை வியந்து பார்க்க வைத்தது. அப்படத்தில் இடம்பெற்ற சமூக நோக்கிலான கூர்மையான வசனங்கள் திரைப்படத்துறையையே புதிய பாதைக்கு இட்டுச்சென்றன. 1950-ல் சேலம் மாடர்ன் தியேட்டரில் 500 ரூபாய் ஊதியத்தில் எழுத்தாளராக பணியில் சேர்ந்து சில திரைப்படங்களுக்கு பணியாற்றினார். `மந்திரி குமாரி’, `மணமகள்’, `பூம்புகார்’, `மனோகரா’, `திரும்பிப்பார்’, `அபிமன்யூ’, `மருதநாட்டு இளவரசி’, `மந்திரி குமாரி’, `தேவகி’, `பணம்’, `நாம்’, `மலைக்கள்ளன்’, `அம்மையப்பன்’, `ராஜாராணி’, `ரங்கோன்ராதா’, `புதையல்’, `புதுமைப்பித்தன்’, `குறவஞ்சி’, `எல்லோரும் இந்நாட்டு மன்னர்’, `அரசிளங்குமரி’, `தாயில்லாப்பிள்ளை’, `இருவர் உள்ளம்’, `காஞ்சித்தலைவன்’, `பூமாலை’, `அவன் பித்தனா?’, `மணிமகுடம்’, `தங்கக்கம்பி’, `வாலிப விருந்து’, `எங்கள் தங்கம்’, `பிள்ளையோ பிள்ளை’, `அணையாவிளக்கு’, `வண்டிக்காரன் மகன்’, `நெஞ்சுக்கு நீதி’, `ஆடுபாம்பே’, `குலக்கொழுந்து’, `மாடிவீட்டு ஏழை’, `தூக்குமேடை’, `புயல்பாடும் பாட்டு’, `ஒரே ரத்தம்’, `வீரன் வேலுத்தம்பி’, `சட்டம் ஒரு விளையாட்டு’, `மக்கள் ஆணையிட்டால்’, `பாசப்பறவைகள்’, `இது எங்கள் நீதி’, `பாடாத தேனீக்கள்’, `தென்றல் சுடும்’, `பொறுத்தது போதும்’, `நியாயத் தராசு’, `பாசமழை’, `காவலுக்குக் கெட்டிக்காரன்’, `மதுரை மீனாட்சி’, `புதிய பராசக்தி’, `இளைஞன்’ என 40க்கும் மேற்பட்ட படங்களில் கதை, வசனம் எழுதியிருக்கிறார். பொன்னர் சங்கர் என்ற கருணாநிதியின் நாவலை அடிப்படையாகக் கொண்டு அதே பெயரில் திரைப்படம் உருவாக்கப்பட்டது.

திரைப்படம் என்னும் வலிமை மிக்க ஊடகத்தை மிகத்திறமையாகப் பயன்படுத்தி வெற்றி கண்ட கருணாநிதி, கதை, திரைக்கதை, உரையாடல், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பல தளங்களிலும் தன் பங்களிப்பை அளித்திருக்கிறார்.

சுதந்திர தினத்தன்று கோட்டையில் தேசியக் கொடியை மாநில ஆளுநர் ஏற்றி வைக்கும் வழக்கத்தை மாற்றி மாநில முதல்வர்களுக்கு அவ்வுரிமையை பெற்றுத் தந்தார். தனியார் பேருந்துகளை நாட்டுடமை ஆக்கி, சேரன், சோழன், பாண்டியன், பல்லவன்,-திருவள்ளுவர் பெயர்களில் போக்குவரத்துக் கழகங்களை உருவாக்கினார். குடிசை மாற்று வாரியத்தை உருவாக்கி ஏழை மக்களும் மாடி வீடுகளில் வசிக்கும் வாய்ப்பை உருவாக்கினார். மாணவர்களுக்கு இலவச பஸ்பாஸ் வழங்கும் திட்டத்தைக் கொண்டு வந்தார். மனிதனை வைத்து மனிதன் இழுக்கும் கை ரிக்ஷாவை ஒழித்து, இலவசமாக சைக்கிள் ரிக்ஷா வழங்கினார். தமிழறிஞர்களின் பிள்ளைகளுக்கு பொறியியல், மருத்துவப் படிப்புகளில் 5% தனி இட ஒதுக்கீடு வழங்கினார். விவசாயிகளுக்கு இலவச மின்சாரத் திட்டத்தைக் கொண்டு வந்தார். பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் சட்டம் கொண்டு வந்தார். மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் ஆகியோருக்காக 20% இட ஒதுக்கீடு அளித்தார். கிழக்கு ஆசியாவிலேயே முதன்முதலாகக் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகம் ஏற்படுத்தினார்.

விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு வழங்கப்படுவது போல் மொழிப்போர் தியாகிகளுக்கும் ஒய்வூதியம் வழங்கினார். ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் உட்பட்ட ஒரு சிற்றூரைத் தேர்ந்தெடுத்து, அதில் அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தைச் செயற்படுத்தினார். அரசு-பொதுமக்கள் பங்களிப்போடு செயல்படுத்தப்படும் நமக்கு நாமே திட்டத்தைக் கொண்டு வந்தார்.

நாடெங்கும் சமத்துவபுரங்களைத் திறந்து அவற்றிற்குப் `பெரியார் நினைவு சமத்துவபுரம்’ எனப் பெயிரிட்டார். பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் நலத்திற்காக தனி அமைச்சகம் ஏற்படுத்தினார்.

இடைத்தரகர்களின் தலையீடு இன்றி உற்பத்தியாளரும், நுகர்வோரும் நேரடித் தொடர்பு கொள்ளும் வகையில் உழவர் சந்தைகள் தொடங்கினார்.  கிராமப்புற ஏழை எளிய மாணவர்களுக்கு, பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளில் 5% தனி இட ஒதுக்கீடு வழங்கினார். உள்ளாட்சி அமைப்புகளில் 33 விழுக்காடு மகளிருக்கு இட ஒதுக்கீடு கொடுக்கும் சட்டத்தைக் கொண்டு வந்தார். நகரங்களை குக்கிராமங்களுடன் இணைத்திட மினிபஸ்களை அறிமுகம் செய்தார். இந்தியாவிலேயே முதன்முதலாக டைடல் பார்க் என்னும் கணினி மென்பொருள் பூங்காவை கொண்டு வந்தார். உலகத் தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தை உருவாக்கினார். தமிழ்விசைப் பலகையை தரப்படுத்துவதற்காக தமிழ் இணைய மாநாட்டை நடத்தினார்.

சட்டமன்ற உறுப்பினர்களுக்குத் தொகுதி மேம்பாடு நிதி ஒதுக்கும் முறையை தொடங்கி வைத்தார். தமிழைச் செம்மொழியாக அறிவிக்கச் செய்தார். தேசிய சித்த மருத்துவ ஆய்வு மையத்தை சென்னைக்கு கொண்டு வந்தார்.

90 வயதுகளைக் கடந்தபிறகும், சிறிதும் உற்சாகம் குறையாமல் தன் அன்றாட அலுவல்களில் தீவிரமாக இருந்தார் கருணாநிதி. அரசியல் சார்ந்த கூட்டங்கள், முடிவுகள், பிரசாரம் என அவரது உழைப்பு இளம் தலைமுறைக்கு பாடமாக அமைந்தது.

2016, அக்டோபரில் கருணாநிதியின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. நுரையீரல் மற்றும் தொண்டை தொற்று காரணமாக , சுவாசக் கோளாறு ஏற்பட்டதால், ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கருணாநிதி எடுத்துக்கொண்ட மாத்திரைகளாலேயே ஒவ்வாமை  ஏற்பட்டு ‘ஸ்டீவன் ஜான்சன் சின்ட்ரோம்’ என்ற நோய்த்தாக்கமும் இருந்துள்ளது. உடம்பில் கொப்புளங்கள் ஏற்பட்டு அவதிப்பட்டார். தீவிர சிகிச்சைக்குப் பிறகு நலம் பெற்று தற்போது ஓய்வில் இருந்தா ர். மன வருத்தமே அவருடைய உடல்நிலை பாதிக்கக் காரணம் என்றும் சொல்லப்பட்டது.

இந்த நிலையில் அவரது உடல் நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து கடந்த 27 (வெள்ளிக்கிழமை) நள்ளிரவில், காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் கருணாநிதி. ரத்த அழுத்த குறைபாடு காரணமாக அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டதாக கூறப்பட்டது. செயலிழந்த உறுப்புகள் கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த கருணாநிதிக்கு, ஆகஸ்ட் 6 காலை அவரது உடல்நிலை பின்னடைவை சந்தித்தார். இதையடுத்து மாலை வெளியான அறிக்கையில் வயது மூப்பு காரணமாக உடல் உறுப்புகளை செயல்பட வைப்பதில் சவால் நிறைந்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்துக்கு மருத்துவ உதவிகளுக்கு உடல்தரும் ஒத்துழைப்பை வைத்தே உடல்நிலை குறித்து கூற முடியும் என்று காவேரி மருத்துவமனை கூறியிருந்தது. இந்த நிலையில், அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததாக  மாலை 4.30 மணிக்கு காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. மாலை 6.10 மணிக்கு அவர் உயிர் பிரிந்தது. இதை காவேரி மருத்துவமனை அறிவித்துள்ளது. கருணாநிதியின் மறைவால் திமுகவினர் பெரும் சோகமும், அதிர்ச்சியும் அடைந்துள்ளனர். தமிழகமே பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளது.

 

SHARE