ஈரானுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் எவருக்கும் அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்ய முடியாது- டிரம்ப் கடும் எச்சரிக்கை.

 

‘அமெரிக்காவுடன் வர்த்தகம் இல்லை’

ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை அமுலுக்கு வந்திருக்கும் நிலையில், ஈரானுடன் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

“ஈரானுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் எவருக்கும் அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்ய முடியாது” என்று டிரம்ப் நேற்று ட்விட்டர் ஊடே குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் மீதான அமெரிக்காவின் முதல் கட்ட தடைகள் நேற்று அமுலுக்கு வந்ததோடு அந்த நாட்டின் மீதான தீர்க்கமான எண்ணெய் தடை நவம்பரில் அமுல்படுத்தப்படவுள்ளது.

இந்த செயல் “உளவியல் போர்” என்று குறிப்பிட்டிருக்கும் ஈரான் ஜனாதிபதி ஹசன் ரூஹானி, “ஈரானியர்களிடையே பிளவை ஏற்படுத்தும் முயற்சி” என்றும் தெரிவித்தார்.

இந்த தடையை எதிர்த்து பேசியிருக்கும் ஐரோப்பிய ஒன்றியம், ஈரானுடனான வர்த்தகத்தில் தமது நிறுவனங்களை பாதுகாப்பதாகவும் உறுதி அளித்துள்ளது.

ஈரானுடனான அணுசக்தி உடன்படிக்கையில் இருந்து அமெரிக்கா விலகியதை அடுத்தே இந்த தடைகள் அமுலுக்கு வந்துள்ளன. எனினும் 2015 ஆம் ஆண்டு அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா காலத்தில் செய்து கொள்ளப்பட்ட இந்த உடன்படிக்கையில் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா மற்றும் சீனா நாடுகள் தொடர்ந்து நீடிக்கிறது.

இந்நிலையில் டிரம்ப் நேற்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, “நவம்பரில் அவர்கள் மேலும் நசுக்கப்படுவார்கள். ஈரானுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் எவருக்கும் அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்ய முடியாது. நான் உலகில் அமைதியை விட வேறு எதனையும் கோரவில்லை” என்றார்.

ஐரோப்பிய நிறுவனங்களின் ஈரானுடனான வர்த்தகத்தை பாதுகாக்க ஐரோப்பிய ஒன்றியம் உறுதி அளித்திருக்கும் நிலையிலேயே டிரம்பின் இந்த எச்சரிக்கை வந்துள்ளது. எவ்வாறாயினும் ஐரோப்பாவின் பல முன்னணி நிறுவனங்களும் ஈரானுடனான வர்த்தகத்தை ஏற்கனவே துண்டித்துள்ளன.

அமெரிக்க டாலரைப் பயன்படுத்தும் பரிவர்த்தனைகள், தங்கம் உள்ளிட்ட அரிய உலோகங்களின் வர்த்தகம், ஈரானில் தயாராகும் வாகனங்களின் இறக்குமதி ஆகியவற்றுக்கு அமெரிக்கா தற்போது தடை விதித்துள்ளது.

எண்ணெய் விற்பனை தொடர்பான புதிய தடைகள் வரும் நவம்பர் மாதம் நடைமுறைக்கு வருமென்று கூறப்பட்டுள்ளது.

About Thinappuyal News