சம்பள உயர்வு குறித்து யாரும் என்னிடமோ அமைச்சரவையிலோ வேண்டுகோள் விடுக்கவில்லையென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசிய முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் குழுக் கூட்ட சந்திப்பில் தெரிவித்தார்.

100

பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பள உயர்வு தொடர்பாக எவ்வித யோசனைகளும் தமக்கோ அல்லது அமைச்சரவைக்கோ முன்வைக்கப்படவில்லையென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று முன்தினம் (06) ஐக்கிய தேசிய முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் குழுக் கூட்ட சந்திப்பில் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர்களின் காரியாலய செலவு அதிகரித்துள்ளதால் அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சில மாதங்களுக்கு முன்னர் கட்சித் தலைவர்கள் சந்தித்த வேளையில் வேண்டுகோளொன்று முன்வைக்கப்பட்டதாகவும் அது தொடர்பாக நியாயமான வேண்டுகோள் முன்வைக்கப்பட்டால் அது குறித்து திறைசேரியிடமும் கேட்டறிந்து எதிர்கால நடவடிக்கை தொடர்பான முடிவொன்றை எடுக்கக் கூடியதாக இருக்குமெனவும் அங்கு அறிவித்ததாகவும் தெரிவித்த பிரதமர், அதற்குப் பின்னர் பல சந்தர்ப்பங்களில் கட்சித் தலைவர்கள் சந்தித்திருந்தாலும் இது தொடர்பாக எவ்வித கருத்துகளோ யோசனைகளோ முன்வைக்கப்படவில்லையெனவும் தெரிவித்தார்.

அலரிமாளிகையில் நேற்று முன்தினம் (06) மாலை நடைபெற்ற ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்: பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை அதிகரிப்பதாகக் கூறப்பட்ட செய்தி தொடர்பாக அறிக்ைகயொன்றை வெளியிடுமாறு பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு என்னிடம் வேண்டுகோள் விடுத்திருந்தது. சம்பள உயர்வு குறித்து யாரும் என்னிடமோ அமைச்சரவையிலோ வேண்டுகோள் விடுக்கவில்லையென்றும் இது தொடர்பாக பத்திரிகைகள் மாத்திரமே தெரிவித்துள்ளன எனவும் அவர் கூறினார்.

பத்திரிகைகளில் பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் அதிகரிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அவ்வாறு சம்பள உயர்வு மேற்கொள்ள அமைச்சரவையின் யோசனைகள் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டு அதிகாரம் பெறப்பட வேண்டும். ஆனால் அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை.

இவ்வாறான யோசனைகள் ஏதாவது முன்வைக்கப்பட்டுள்ளதா என சபாநாயகரிடமும் கேட்ட போது இது தொடர்பாக கட்சித் தலைவர்களிடையே கலந்துரையாடல் நடைபெற்றிருந்தாலும் இறுதித் தீர்வு எதுவும் எடுக்கப்படவில்லையென அவர் கூறினார். அதன்படி பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பாக எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லையென அவர் தெரிவித்தார்.

இந்நிலைமையில் நான் பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பள உயர்வு குறித்து அறிக்கையொன்றை சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை.

அது தொடர்பான முறையான யோசனைகள் முன் வைக்கப்பட்டிருந்தால் மாத்திரமே நான் விசேட செய்தியை தெரிவிக்க வேண்டும். ஆனால் ஊடகங்களில் வெளியாகியுள்ள அறிக்கைகள் குறித்து நான் எதுவும் தெரிவிக்கத் தேவையில்லை எனத் தெரிவித்தார்.

SHARE