வவுனியாவில் விபத்தை தடுப்பதற்கான கவனயீர்ப்பு பேரணி

‘விபத்தை தடுப்போம் இன்னுயிர்களை காப்போம்’ எனும் தொனிப்பொருளில் கவனயீர்ப்பு பேரணி ஒன்று இன்று  காலை 10.00 மணியளவில் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டது.

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் வவுனியா மாவட்ட செயலாளர் குலசிங்கம் திலீபன் தலைமையில் கவனயீர்ப்பு பேரணி நடைபெற்றது.

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் முன்னால் ஆரம்பமான கவனயீர்ப்பு பேரணியானது மணிக்கூட்டு சந்தி வழியாக பசார் வீதியூடாக பயணித்து அங்கிருந்து மாவட்ட செயலகத்தை வந்தடைந்தது.

பேரணியில் கலந்துகொண்டவர்கள், உங்களது வேக போக்கினால் பறிபோவது எமது தலைமுறையினரே!”, வேகமாய் போவது வாகனங்கள் மட்டுமல்ல மனித உயிர்களும்தான்! ஒன்றையொன்று முந்திச் செல்வதுதான் உங்கள் திறமையா!, உங்கள் முந்துதல்களால் மாண்டது எமது பிள்ளைகளே!, சாரதிகளே உயிர்களோடு விளையாட வேண்டாம் போன்ற பதாதைகளை தாங்கி நின்றனர்.

கவனயீர்ப்பு பேரணியை தொடர்ந்து வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரிடம் பாடசாலை சிறுவன் ஒருவனால் மகஜர் ஒன்றும் கையளிக்கபட்டது.

மகஜரை பெற்றுக்கொண்ட அரசாங்க அதிபர் வவுனியா மாவட்ட போக்குவரத்து தொடர்பாக இ.போ.ச மற்றும் தனியார் பஸ் சாரதிகள், முச்சக்கரவண்டி சாரதிகள், பொலிஸாருடனும் ஒரு சந்திப்பை ஏற்படுத்தி இதற்கான தீர்வை வெகு விரையில் பெற்றுத்தருவதாக உறுதியளித்திருந்தார்.

About Thinappuyal News