1990  வடக்கிலிருந்த முஸ்லிம்கள் விடுதலைப்புலிகளால் 24 மணி நேரத்துள் வெளியேற்றப்பட்டார்கள். அவர்கள் வெளியேற்றப்பட்டு  27 வருடங்கள் கழிந்து 

81

 

1990  வடக்கிலிருந்த முஸ்லிம்கள் விடுதலைப்புலிகளால் 24 மணி நேரத்துள் வெளியேற்றப்பட்டார்கள். அவர்கள் வெளியேற்றப்பட்டு  27 வருடங்கள் கழிந்து

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய பிரதேசங்களில் வாழ்ந்து வந்த இம்மக்கள் மீது காட்டிக் கொடுப்பு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு 24 மணித்தியாலத்துள் தமது இருப்பிடம் மற்றும் உடமைகள் அனைத்தையும் விட்டு உடனடியாகவே வெளியேறுமாறு விடுதலைப் புலிகளால் நிர்ப்பந்திக்கப்பட்டதன் காரணமாக அங்கிருந்து வெளியேறினார்கள்.

முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட விடயத்தை மறக்கலாம் என்று சொல்கிறார்கள். நாங்கள் போட்ட செருப்பில்லையே எங்களுடைய வாழ்க்கை. செருப்பு என்று சொன்னால் கழற்றி விட்டு இன்னொன்று புதிதாக வாங்கிக் கொள்ளலாம். ஆனால் எங்களுடைய உரிமைகள் உடமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டு அனாதைகளாக, இன்று வரைக்கும் பசுமரத்தாணிகளாக அகதி என்ற அந்தஸ்துடன் எந்த சமூகத்திலும் வாழ இயலாத நிலைமையில் தான் நாங்கள் இருக்கிறோம் என்கிறார் ஜனூஷா முஜீப் என்கிற முன்பள்ளி ஆசிரியர். புத்தளத்தில் வசித்து வரும் இவர் இவர் தற்போது முன்பள்ளி ஆசிரியராக இருக்கிறார்.

ஓரே இரவில் ஏறத்தாழ எண்பதாயிரம் முஸ்லிம்கள் மேற்குறித்த ஐந்து மாவட்டங்களிலிருந்தும் அகதிகளாக வெளியேற்றப்பட்டார்கள். அங்கிருந்து வெளியேற்றப்பட்டு வந்த இம்மக்களில் பெரும்பன்மையானவர்கள் புத்தளத்தில் முகாம்கள் அமைக்கப்பட்டு அங்கு குடியேற்றப்பட்டார்கள். இது தவிர கொழும்பு, குருநாகல், மாத்தளை ஆகிய இடங்களிலும் குடியேறினார்கள்.

பெரும்பான்மையான இடம் பெயர்ந்த மக்கள் புத்தளத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட முகாம்களிலேயே இன்று வரை வாழ்ந்து வருகிறார்கள். அறுபதாயிரம் முஸ்லிம்கள் 141 இடம் பெயர்ந்தோர் தங்கியிருக்கும் முகாம்களில் வாழ்ந்து வருகிறார்கள் என்று அரசாங்கப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது ஒரு இலட்சத்து 25 ஆயிரம் முஸ்லிம்கள் இடம் பெயர்ந்த நிலையில் வாழ்ந்து வருவதாக முஸ்லிம் கவுன்ஸில்; தெரிவித்துள்ளது.

2002ஆம் ஆண்டில் இலங்கை அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையே செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கை தமது மீள் குடியேற்றத்திற்கு வழிகோலும் என்று இடம் பெயர்ந்த முஸ்லிம்கள் நம்பினார்கள். இக்காலகட்டத்தின் போது சில முஸ்லிம்கள் தமது சொந்த ஊர்களுக்குச் சென்று குடியேற ஆரம்பித்தார்கள்.

2006இல் போர் மீள ஆரம்பித்ததோடு அவர்களுடைய மீள் குடியேற்றமும் ஆபத்துக்குள்ளானது. எனினும் 2009இல் போர் முடிவடைந்த பிற்பாடு தாம் மீளவும் தமது சொந்த இடங்களில் குடியேறலாம் என்ற நம்பிக்கை அவர்களிடம் துளிர்விட ஆரம்பித்துள்ளது. நாங்கள் அரசாங்கத்திடமும் அமைச்சர்களிடமும் சர்வதேச உதவி நிறுவனங்களிடமும் கேட்டுக் கொள்வது என்னவென்றால் நாம் எமது சொந்த இடங்களுக்குச் சென்று குடியேறவும் நாம் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பவும் எமக்கு உதவி செய்யுங்கள் என்று கல்பிட்டி அகதி முகாமிலிருக்கும் எம் ரெய்சுடீன் வலியுறுத்துகிறார்.

முஸ்லிம் கவுன்ஸில் இந்த மக்கள் மீளவும் தமது இருப்பிடங்களுக்குத் திரும்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மீள்குடியேற்றத்துக்குத் தயாரானவர்கள் குறித்த தகவல்களைச் சேகரிப்பதற்காக அச்சிடப்பட்ட விண்ணப்பங்களைக் கொடுத்து அவற்றை பூர்த்தி செய்து பெற்று வருகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அவ்வமைப்பால் மீள்குடியேற்ற அமைச்சர் ரிசாட் பதியுதீனிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழ் மக்களுடன் சேர்ந்து அப்பகுதிகளில் வாழ்ந்து வந்த மக்கள் மீளவும் தத்தமது வீடுகளுக்குச் சென்று குடியேறுவதற்கான அவர்களுடைய வாழ்வுரிமை உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும் என்பதற்காகவே நாம் இவ்விடயத்தில் அதிக சிரத்தை எடுத்து வருகிறோம் என்று முஸ்லிம் கவுன்ஸிலின் தலைவர் என்.எம்.அமீன் தெரிவித்துள்ளார்.

இவ்விண்ணப்பப்படிவங்களை ஒன்றாக ஆராய்ந்து காணி உள்ளவர்கள் வேறாக காணியற்றவர்கள் வேறாகப் பிரித்து அதற்கேற்ற நடவடிக்கைகளை முன்னெடுப்பதோடு, அவர்கள் அங்கு மீள் குடியேறுவதற்கு ஏதுவான அடிப்படை வசதிகளை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதோடு, தொழில் ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்பவர்களுக்கு வேண்டிய வசதிகளையும் செய்வதற்கான திட்டங்களையும் மேற்கொண்டு வருகிறோம் என்றார் மீள் குடியேற்ற அமைச்சர் ரிசாட் பதியுதீன்.

கொழும்புக்கு அண்மித்தாக உள்ள மட்டக்குளியில் இடம் பெயர்ந்த 125 முஸ்லிம் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. 1990ஆம் ஆண்டு இடம் பெயர்ந்ததிலிருந்து இங்குள்ள முகாம் ஒன்றிலேயே வாழ்ந்து வருகிறோம். எமது மீள் குடியேற்றம் பற்றி எம்முடன் வந்து பேசினார்கள். எனினும் நாம் உடனடியாகவே எமது பிரதேசங்களில் குடியேறுவதற்கு சில பிரச்சினைகள் இருக்கின்றன. குறிப்பாக அங்கு எமக்கு தற்போது வீடுவாசல் எதுவும் இல்லை. அவை எல்லாம் அழிந்து கிடக்கின்றன. தமிழர்களை மீள் குடியேற்றம் என்ற பெயரில் தற்போது கொண்டு வைத்து அவர்கள் சீரழிவதைப் போல நாம் சீரழிய விரும்பவில்லை. எங்களுக்கென்று வீடுவாசல் ஏதாவது அமைத்துத் தந்து போய் இருங்கள் என்று சொன்னால் நாம் போகத் தயார். வீடுவாசல் இல்லாமல் அங்கு போய் எங்கே இருப்பது தான் எம்முடைய கேள்வி என்கிறார் மட்டக்குளி முகாமில் இருக்கும் சக்காரியா.

வீடுகட்டித் தந்து அங்கு போய் இருங்கள் என்று சொன்னால் நாம் நாளைக்கும் போகத் தயாராக இருக்கிறோம். இல்லாவிட்டால் நாம் தொழில் ரீதியாக மிகவும் பாதிக்கப்படுவோம். 19 வருடங்களாக இங்கு தொழில் செய்து பழகிய எங்களுக்கு அங்கு போய் தொழில் செய்வது சாத்தியமில்லை. அங்கு போய் தொழிலை ஆரம்பிப்பது என்றால் முதலிலிருந்தே ஆரம்பிக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் எமது பிள்ளைகளுக்கு அங்கு போக விருப்பமில்லை. வடக்கில் தொழிற்சாலைகள் ஏதாவது இருக்கும் என்றால் கூட நாம் அங்கு போய் தொழில் செய்யலாம். அப்படி எதுவும் அங்கில்லை. இடம் பெயர்ந்து இங்கு வந்த நாங்கள் தொழில் தான் செய்து வருகிறோம். யாரும் களவெடுக்கவில்லை. பிச்சை எடுக்கவில்லை. ஆனால் எமக்கு சொந்த வீடுவாசல் கட்டித் தருவீர்களானால் எமது பிள்ளைகள் வராவிட்டாலும் நாங்கள் அங்கு போகத் தயாராக உள்ளோம் என்கிறார் மட்டக்குளி முகாமிலிருக்கும் என்.எம்.ஹனீபா.

தனக்கோ அங்கு மீண்டும் போக விருப்பமில்லை என்கிறார் இன்னொரு முகாம்வாசியான முஹமட் ஜாஹிர். எங்களுக்கு ஏதாவது நஷ்டஈடு கிடைச்சால் எங்களுடைய பிரச்சினையை நாங்களே பார்த்துக் கொள்வோம் என்கிறர் அவர்.

இரண்டு மூன்று பிள்ளைகளுடன் அங்கிருந்து வந்தோம். இப்போது அவர்களும் மணம் முடித்து அவர்களுக்கும் பிள்ளைகள் இருக்கிறார்கள். எல்லோரும் ஒரு வீட்டுக்குள் வாழ முடியாது. அப்படிப் பார்த்தால் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் இரண்டு அல்லது மூன்று வீடுகள் தேவைப்படுகின்றன. அரசாங்கம் அவ்வாறு கட்டித் தருமா? அப்படி இல்லாமல் அங்கு போய் வாழ முடியாது. அதற்கு முடியாவிட்டால் நஷ்ட ஈடு ஏதாவது தந்தால் நாங்கள் எங்காவது காணி பார்த்து வாங்கிக் குடியேறுவோம் என்கிறார் என்.எம்.ஹனீபா.

முஸ்லிம் சமாதான பேரவையின் புத்தளம் கிளை ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் மாநாடு புத்தளம் முஸ்லிம் சமாதான செயலக கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்றது.

வடமாகாணத்திலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு நேற்றுடன் (2009.10.30) பத்தொன்பது வருடங்கள் பூர்த்தியடைந்தன. 1990ஆம்ஆண்டு இம்மக்கள் வடமாகாணத்தில், மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய மாவட்டங்களிலிருந்து வெளியேறி தற்போது புத்தளம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் தமது வெளியேற்றம் குறித்தும், இத்தினத்தை நினைவு கூரும் வகையிலும் முஸ்லிம் சமாதான பேரவையின் புத்தளம் கிளை ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் மாநாடு புத்தளம் முஸ்லிம் சமாதான செயலக கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்றது.

சமாதான செயலகத்தின் பிராந்திய பணிப்பாளர் எஸ்.என்.எல்.எம்.சுஹைர் தலைமையில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் பதினொரு தீர்மானங்கள் அடங்கிய கோரிக்கை வெளியிடப்பட்டது.

அவை வருமாறு :

1) இரண்டு மணித்தியால அவகாசத்தில் முஸ்லிம்கள் வடக்கிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டமை தொடர்பாக விசாரித்து, ஆராய்ந்து, தேவையான பரிந்துரைகளுடன், அறிக்கை சமர்ப்பிக்க ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று உடனடியாக நியமிக்கப்பட வேண்டும்.

2) பலவந்த வெளியேற்றத்தினால் படுமோசமாக பாதிக்கப்பட்டு, இன்னமும் அகதிவாழ்வு நடத்திவரும், வடக்கு முஸ்லிம்களுக்கு உரிய நஷ்டஈடுகள் துரித கதியில் வழங்கப்பட வேண்டும்.

3) மீள்குடியேற்ற நிகழ்வில் முஸ்லிம்களின் விவகாரம், தெரிவிக்கப்பட்டு அது அவர்களுக்கு பகிரங்கப்படுத்தப்படல் வேண்டும்.

4) மீள்குடியேற்றத்தின் போது 1990 ஆம் ஆண்டு பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

5) பலவந்தமாக வெளியேற்றப்படடுள்ள முஸ்லிம்களின்,வடக்கிலுள்ள பூர்வீக சொத்துக்களுக்கு PசுநுளுஊசுஐPவுஐழுN ழுசுனுஐNயுNஊநு எக்காரணம் கொண்டும் பிரயோகிக்கப்படக் கூடாது.

6) பலவந்தமாக வெளியேற்றப்பட்டுள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான வடக்கிலுள்ள காணிகள் அவர்களுக்கே மீண்டும் கையளிக்கப்பட வேண்டும்.

7) 1990இல் முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட போது இருந்த குடும்பங்களின் எண்ணிக்கை கடந்த 19 ஆண்டுகளில் வெகுவாக அதிகரித்துள்ளது. எனவே அதிகரித்துள்ள குடும்பங்களுக்கு மீள்குடியேற்றத்தின் போது புதிதாகக் காணிகள் வழங்கப்பட வேண்டும்.

8) பலவந்தமாக வெளியேற்றப்பட்டுள்ள முஸ்லிம்களுக்கு 1990 ஆம் ஆண்டு முதல் கொடுக்கப்பட்டு வரும், நிவாரணத் தொகை ஆரம்பம் முதல் அதே தொகையாகவே இருந்து வருகின்றது. சுமார் 19 வருடகாலப் பகுதியில், ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வு, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பை கவனத்திற் கொண்டு தற்போதைய நிவாரணத் தொகை அதிகரிக்கப்பட வேண்டும்.

9) அரச நியமனங்கள், வளப்பகிர்வுகளின் போது பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு உரிய பங்குகள் சரியாக, நிறைவாக வழங்கப்பட வேண்டும்.

10) யுத்த காலத்தில் கடத்தப்பட்டு இதுவரை காலமும் தகவல் இல்லாத முஸ்லிம் குடும்பங்களுக்குத் துரிதமாக நஷ்டஈடு வழங்கப்படுவதுடன், மரண அத்தாட்சி பத்திரங்கள் வழங்கப்பட வேண்டும்.

11) பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் சுமார் இரு தசாப்தங்களாக புத்தளம் பிரதேசத்தில் வாழ்ந்து வருகின்றனர். இதன் நிமித்தம் புத்தளம் பிரதேச பூர்வீக மக்களுக்கு ஏற்பட்டுள்ள காணிப் பங்கீடு, கல்வி, அரச நியமனங்கள், தொழில்வாய்ப்பு, சுகாதாரம், பல்கலைக்கழக அனுமதி உட்பட எல்லா வகைகளிலுமான, இழப்புகளும் அவசரமாக உரிய முறையில் ஈடு செய்யப்பட வேண்டும்.

இக்கோரிக்கைகள் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக செய்தியாளர் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.

 

SHARE