தேர்தலின் போது முறைகேடுகள் இடம்பெற வாய்ப்பு இல்லை! டம்மி வேட்பாளர்கள் பெரும் தொல்லை!: தேசப்பிரிய

119
தேர்தலின் போது முறைகேடுகள் இடம்பெற வாய்ப்பு இல்லை என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தல் செயலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வாக்களிப்பு நடைபெறுவது முதல் இறுதித் தேர்தல் முடிவு அறிவிக்கப்படும் வரையில் முறைகேடுகள் ஊழல்கள் நடைபெற எவ்வித வாய்ப்பும் கிடையாது.

தேர்தல் பொறிமுறைமை மிகவும் வலுவானது.

தேர்தல் அதிகாரிகள் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றனர்.

வாக்களித்தல், வாக்கு பெட்டிகளை எடுத்துச்செல்லல் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் கண்காணிக்கப்பட உள்ளது.

வேட்பாளர்களின் பிரதிநிதிகளும் கண்காணிப்பு செய்ய இம்முறை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

வாக்குச் சீட்டு அச்சிடும் போதும் இரகசிய இலக்க முறைமையொன்று பின்பற்றப்பட்டுள்ளது.

தேர்தல் எவ்வளவு நேர்மையாக நடத்தப்பட்டாலும் தோல்வியடையும் வேட்பாளர் தேர்தல் முறைகேடுகள் இடம்பெற்றதாக குற்றம் சுமத்துவது வழமையானது என மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

டம்மி வேட்பாளர்கள் பெரும் தொல்லை! தேர்தல் ஆணையாளர் கவலை

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது களமிறக்கப்பட்டுள்ள டம்மி வேட்பாளர்கள் காரணமாக தமது திணைக்களத்துக்கு பெரும் தொந்தரவு ஏற்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

தேர்தலொன்றின் போது பிரதான வேட்பாளருக்கு ஆதரவு வழங்கும் வகையில் போட்டியிடும் டம்மி வேட்பாளர்கள் காரணமாக தேர்தல் திணைக்களம் பெரும் தொகைப் பணத்தை அநாவசியமாக செலவிட வேண்டியிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அனைத்து வேட்பாளர்களுக்கும் சமமான வாய்ப்புகளை அளிக்கும் வகையில் இவர்களுக்கான பாதுகாப்பு உள்ளிட்ட பெருமளவான விடயங்களில் பெருந்தொகைப் பணம் வீணாக செலவிடப்படுவதாக மஹிந்த தேசப்பிரிய தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே பலத்த மழை மற்றும் வெள்ளம் காரணமாக வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கை உரிய முறையில் பூர்த்தியடையவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனை சீர் செய்யும் வகையில் எதிர்வரும் நான்காம் திகதி , தபால் திணைக்கள ஒத்தாசையுடன் விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கவுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

 

SHARE