சீரற்ற காலநிலையினால் போக்குவரத்து பாதிப்பு

16

நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளிலும் கடும் காற்றுடன் தொடர்ச்சியாக அடை மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

நேற்றிரவு முதல் தலவாக்கலை, லிந்துல, டயகம, கொட்டகலை போன்ற பகுதிகளில் கடும் காற்றுடன் கூடிய தொடர்ச்சியாக அடை மழை பெய்து வருகிறது.

இதனால் இன்று காலை 8 மணியளவில் ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் தலவாக்கலை சென் கிளாயர் பகுதியில் பாரிய மண்சரிவினால் குறித்த வீதியூடான போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தற்போது இப்பிரதான வீதியினூடாக சிறிய வாகனங்கள் மாத்திரமே ஒருவழியாக பயணிக்கின்றன. குறித்த மண்மேட்டை அகற்றும் பணிகளை தலவாக்கலை லிந்துல நகர சபையினால் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றமையால் இன்னும் ஒருமணிநேரத்தில் ஹட்டன் – நுவரெலியா ஊடான போக்குவரத்து வழமைக்கு திரும்பிவிடும் என தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

அதே வேளை மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் நீர் மட்டமானது தொடர்ந்தும் உயர்ந்து வருவதால் அதன் வான்கதவு ஒன்று திறக்கப்பட்டுள்ளமையால் தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு வேண்டு கோள் விடுக்கப்படுகிறது.

SHARE