அஜீரணக் கோளாறுகளை சரி செய்யும் ஓமம்

49

ஓமத்தில், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கரோட்டின், தையாமின், ரிபோபுளேவின் மற்றும் நியாசின் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.

பசியை தூண்டவும், நாம் சாப்பிடும் உணவு எளிதில் செரிமானம் ஆகவும், வயிறு சம்மந்தமான கோளாறுகள் நீங்கவும், ஆஸ்துமா, ஜலதோஷம் நீங்கவும் ஓமம் பெரிதும் உதவுகிறது.

ஓமத்தை நீரில் கொதிக்க வைத்து அதனுடன் பனை வெல்லம் சேர்த்து காலை வேளையில் அருந்தி வந்தால் உடல் பலம்பெறும்.

ஓமத்தின் மருத்துவ பயன்கள்
மூட்டு வலியை போக்க

மூட்டு வலிக்கு நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் ஓம எண்ணெய் வாங்கி தடவினால் நாளடைவில் மூட்டுவலி குணமாகும். ஆஸ்துமாவை குணப்படுத்த அரை டீஸ்பூன் ஓமத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்துக் குடிக்க வேண்டும்.

மேலும் ஓமத்தை தேவையான அளவு நீர்விட்டு நன்கு அரைத்து சிறிதளவு மஞ்சள்தூள் சேர்த்துக் கலந்து, வாணலியில் வைத்துச் சூடாக்கி களிம்புபோலச் செய்து, வீக்கத்தின் மீது வைத்துக்கட்ட வீக்கம் கரையும்.

வயிற்று வலியை குணப்படுத்த

வயிற்று வலி ஏற்படும் பொழுது 5 கிராம் ஓமத்துடன் சிறிது உப்பு, பெருங்காயம் சேர்த்துப் பொடித்து தேனில் குழைத்துச் சாப்பிட்டால் சிறிது நேரத்தில் வயிறு லேசாகி வலி குணமாகி விடும்.

மந்தத்திற்கு ஓமம் பெரிதும் உதவுகின்றது. மந்தத்தைப் போக்க ஓமம், சுக்கு, சித்திரமூல வேர்ப்பட்டை, இம்மூன்றும் சமபங்கு எடுத்து ஒன்றாக சேர்த்து பொடித்து அதனுடன் கடுக்காய் பொடி சேர்த்து அதில் சிறிதளவு எடுத்து மோரில் கலந்து கொடுத்தால் மந்தம் நீங்கும்.

மார்ச்சளி மற்றும் பல்வலி குணப்படுத்த

மார்ச்சளியை குணப்படுத்த ஓம எண்ணெயை மிகவும் சிறந்தது. சிறிதளவு ஓமப் பொடி மற்றும் உப்பு ஆகியவற்றை மோரில் கலந்து குடித்தால், நெஞ்சில் பிடித்துள்ள சளி வெளியேறும்.

பல்வலி ஏற்படும் போது இந்த எண்ணெயைப் பஞ்சில் தோய்த்து பல் மீது வைத்து அழுத்திக் கொண்டால் பல் வலி மறையும். மேலும் வயிற்று போக்கை குணப்படுத்தவும் உதவும்.

இருமல் நீங்க

ஓமம், கடுக்காய் தோல், முக்கடுகு, சித்தரத்தை, அக்கிரகாரம், திப்பிலி வேர் இவைகளின் பொடியை சம அளவு எடுத்து அதனுடன் சரிபாதி பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை கொடுத்து வந்தால் இருமல் நீங்கும்.

இடுப்பு வலி நீங்க

சிறிது தண்ணீரில் ஒரு கரண்டி ஓமம் போட்டு கொதிக்க வைத்து, அதில் 100 மில்லி தேங்காய் எண்ணெயை விட்டு மீண்டும் கொதிக்க விட்டு வடிகட்டி கொள்ளுங்கள். வடிகட்டியதோடு கற்பூரப் பொடியைக் கலந்து இளஞ்சூட்டுடன் இடுப்பில் நன்றாகத் தேய்த்து வர இடுப்பு வலி நீங்கும்.

SHARE