ஆண்டர்சனின் அதிவேக பந்துவீச்சு: விக்கெட் கீப்பரை தாக்கியதில் எலும்பு முறிவு

34

இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் வீசிய பந்தை பிடித்தபோது, விக்கெட் கீப்பர் ஜானி பேர்ஸ்டோவுக்கு விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

இங்கிலாந்து-இந்தியா அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் நடைபெற்று வருகிறது. போட்டியின் 3வது நாளான நேற்று இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 352 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

இதன்மூலம் இங்கிலாந்து அணிக்கு 521 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி, நேற்றைய ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 23 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

முன்னதாக, இங்கிலாந்து அணி பீல்டிங் செய்துகொண்டிருந்தபோது அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 44வது ஓவரை வீசினார். அப்போது அவர் வீசிய பந்தை விக்கெட் கீப்பர் ஜானி பேர்ஸ்டோ பிடித்தபோது, அவரது இடதுகை நடுவிரலை பந்து பலமாக தாக்கியது.

இதனால் வலியால் அவர் தரையில் விழுந்து துடித்தார். அதன் பின்னர் உடனடியாக பேர்ஸ்டோ வெளியேற்றப்பட்டு, அவருக்கு பதிலாக ஜோஸ் பட்லர் விக்கெட் கீப்பிங்கை கவனித்தார்.

இந்நிலையில், பேர்ஸ்டோவுக்கு ஸ்கேன் எடுத்து பார்த்தபோது லேசான எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது தெரிய வந்தது. இதன் காரணமாக அவர் தொடர்ந்து ஆடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

SHARE