ஆசிய விளையாட்டு போட்டியில் சாதனை படைத்த விவசாயியின் மகன்

39
ஆசிய விளையாட்டு போட்டியில் சாதனை படைத்த விவசாயியின் மகன்
ஆசிய விளையாட்டில் தங்கப்பதக்கத்தை மகசூல் செய்து சாதனை படைத்த 16 வயதான சவுரப் சவுத்ரி ஒரு விவசாயியின் மகன் ஆவார். உத்தரபிரதேச மாநிலம் மீரட் அருகே உள்ள கலினா என்ற கிராமத்தில் பிறந்தவர். 3 ஆண்டுகளுக்கு முன்பு தான் துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் ஈடுபட்டார். சில மாதங்களுக்கு முன்பு உலக ஜூனியர் துப்பாக்கி சுடுதலில் சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்ற சவுரப் சவுத்ரிக்கு இந்த ஆசிய விளையாட்டு தான், முதல் சீனியர் அளவிலான போட்டியாகும்.

11-ம் வகுப்பு படித்து வரும் அவர் கூறுகையில், ‘ஒலிம்பிக், உலக சாம்பியன்கள் களம் இறங்கினாலும் நான் எந்த நெருக்கடியையும் உணரவில்லை. எனக்கு விவசாய தொழில் மிகவும் பிடிக்கும். ஆனால் விளையாட்டு, பயிற்சி என்று அதில் தீவிரமாக இருப்பதால் போதிய நேரம் கிடைப்பதில்லை. ஆனால் பயிற்சி இல்லாத காலத்தில் சொந்த ஊருக்கு சென்று எனது தந்தைக்கு உதவிகரமாக இருப்பேன்’ என்றார்.

அவரது தாயார் கூறுகையில், ‘எனது மகனின் சாதனையை நினைத்து மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறோம். விளையாட்டால் படிப்பு பாதிக்கக்கூடும் என்று அவரது தந்தை அடிக்கடி சொல்வார். ஆனால் சவுரப் சவுத்ரி, துப்பாக்கி சுடுதலில் பதக்கம் வென்று சாதிப்பதில் மனஉறுதியுடன் இருந்தார். அதை அவர் செய்து காட்டியிருக்கிறார்’ என்றார்.

‘தங்கமகன்’ சவுரப் சவுத்ரிக்கு ரூ.50 லட்சமும், முதல் நாளில் வெண்கலப்பதக்கம் வென்ற மற்றொரு துப்பாக்கி சுடுதல் வீரர் ரவிகுமாருக்கு ரூ.20 லட்சமும் ஊக்கத்தொகையாக அளிக்கப்படும் என்று உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். அத்துடன் அவர்களுக்கு ‘கெசட்டெட்’ அந்தஸ்தில் அரசு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

SHARE