“ எட்கா” ஒப்பந்தத்தை தயாரிக்க தன்னிச்சையான முயற்சி : வைத்திய அதிகாரிகள் சங்கம்

25

சர்வதேச வர்த்தக அமைச்சில் எதிர் வரும் வெள்ளிக்கிழமை இடம்பெறவிருக்கும் இந்தியாவுடனான பொருளாதார மற்றும் தொழிநுட்ப கூட்டு ஒப்பந்த தயாரிப்பு நடவடிக்கை தன்னிச்சையானது என்றும் இச் செயற்பாட்டை நிறுத்துமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதியிடம் கோரியுள்ளது.

இது குறித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,

“சிங்கப்பூர் உடனான வர்த்தக ஒப்பந்தம் நாட்டை பாரிய அளவில் காட்டிக்கொடுக்கும் என்பதை மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர். அந்த ஒப்பந்தம் தயாரிக்கப்பட்ட விதமானது முற்றிலும் தவரானதாகும். இலங்கைக்கு தேசிய பொருளாதார கொள்கையென்று ஒன்றில்லை. மாறாக மோசடியான வர்த்தக கொள்கைகள் அவ்வப்போது வெளிப்படுத்தப்படுகின்றன. சிங்கப்பூர் ஒப்பந்தத்தின் உள்ளடக்கம் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் எந்தளவு பாதிப்பை ஏற்படுத்த கூடும் என்பதை அதனை ஆராய்ந்தவர்கள் அறிவார்கள்.

இதனால்தான் பலதுறைசார் தொழில் நிபுணர்கள் சிங்கப்பூருடனான ஒப்பந்தத்தை கடுமையாக எதிர்த்தனர். இந்த ஒப்பந்தத்தை தயாரிப்பதற்கு முக்கிய செயற்பாட்டாளராக காணப்பட்ட சர்வதேச வர்த்தக அமைச்சின் செயலாளரின் நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதியிடம் தெளிவுப்படுத்தியிருந்தோம். இதன் அடிப்படயிலேயே ஜனாதிபதி ஆணைக்குழுவும் ஸ்தாபிக்கப்பட்டது.

நிலைமை இவ்வாறு இருக்க மீண்டும் இந்தியாவுடனான “எட்கா” ஒப்பந்தத்தை தயாரிப்பதற்கு குறித்த செயலாளர் நடவடிக்கை எடுத்து வருகின்றார்.  வெள்ளிக்கிழமை இதற்கான விசேட கூட்டமொன்றும் சர்வதேச வர்த்தக அமைச்சின் செயலாளரின் தலைமையில் இடம்பெறவுள்ளது.

தன்னிச்சியாக செயற்பட்டு நாட்டின் பொருளாதார நிலைகளை சர்வதேச நாடுகளுக்கு காட்டிக்கொடுக்கும் இவ்வாறான நடவடிக்கைகளை ஜனாதிபதி தலையிட்டு நிறுத்த வேண்டும்.” என  குறிப்பிடப்பட்டள்ளது.

SHARE