மகிந்தவின் நாளைய பிரசாரக் கூட்டங்களுக்கு மக்களை அழைத்து வர 450 இ.போ.ச. பஸ்கள் யாழ். வருகை

214

 

ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரப் பணிகளுக்காக நாளைய தினம் யாழ்.குடாநாட்டுக்கு ஜனாதிபதி வருகைதரவுள்ள நிலையில் ஜனாதிபதி கலந்து கொள்ளும் நிகழ்வுக்கு மக்களை அழைத்து வருவதற்காக இலங்கை போக்குவரத்துச் சபையின் 450 பேருந்துகள் யாழ்.குடாநாட்டுக்கு கொண்டுவரப்பட்டிருக்கின்றன.

நாளைய தினம் யாழ்.குடாநாட்டுக்கு வருகை தரும் ஜனாதிபதி யாழ்.துரையப்பா விளையாட்டரங்களில் நடைபெறவுள்ள பிரச்சாரக் கூட்டத்திலும் கலந்து கொள்ளவுள்ளார்.

இந்நிலையில் குறித்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மக்களை குடாநாட்டின் பல பகுதிகளிலிருந்தும் அழைத்து வருவதற்காக, குறித்த பேருந்துகள் யாழ்.குடாநாட்டுக்கு கொண்டுவரப்பட்டிருக்கின்றன.

jaffna-2

அனுராதபுரம், கிளிநொச்சி, மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் நடைபெற்ற ஜனாதிபதியின் பிரச்சாரக் கூட்டங்களுக்கு மிக முறைகேடான முறையில் அரசாங்க சொத்துக்களான பேருந்துகள் பயன்படுத்தப்பட்டமை தொடர்பில் தேர்தல் கண்காணிப்பு, அமைப்புக்கள் பல சுட்டிக்காட்டியிருந்த நிலையில், தற்போது யாழ்.குடாநாட்டிலும் பிரச்சாரத்திற்காக அரச சொத்தான போக்குவரத்துப் பேருந்துக ளை பாவிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றமை இங்கே குறிப்பிடத்தக்கது.

இதேவேளை சமுர்த்தி திட்டத்தின் கீழ் ‘செழிப்பான வீடு;’ என்னும் செயற்றிட்டம் கடந்த பல மாதங்களுக்கு முன்னர் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது.  இந்நிலையில் குறித்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10ஆயிரம் ரூபா வழங்கப்படும்,

இந்நிலையில் மேற்படி திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்தாமல் தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் நடைமுறைப்படுத்தி அதன் மூலம் யாழ்.குடாநாட்டில் ஈ.பி.டி.பியினர் தேர்தல் பிரச்சாரத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக இன்றைய தினம் யாழ்.குடாநாட்டில் பல சமுர்த்தி வங்கிகளில் பணம் பெறச்சென்ற மக்களுக்கு 2500 ரூபா நிதியினை மட்டும் வழங்கிவிட்டு மீதம் உள்ள 7500ரூபா நிதியை நாளைய தினம் ஜனாதிபதியின் கூட்டத்தில் பெறுமாறு ஈ.பி.டி.பியினால் கூறப்பட்டுள்ளமையும் இங்கே குறிப்பிடத்தக்கது.

 

SHARE