நாடாளுமன்றம் மூலம் ஈரான் பொருளாதார மந்திரி பதவி நீக்கம்

24
ஈரான் நாட்டின் பொருளாதார மந்திரியாக மசூத் கர்பாசியன் பதவி வகித்து வந்தார். அங்கு கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது.
விலைவாசி கடுமையாக உயர்ந்து விட்டது. உள்நாட்டு நாணய மதிப்பும் கடுமையான சரிவை சந்தித்து உள்ளது.

இந்த நிலையில் நாட்டின் பொருளாதார நிலை குறித்து அவரிடம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். அவரது துறையில் செயல்பாடுகள் சரியில்லை என புகார் கூறினர்.

மேலும், அவருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நேற்று கண்டன தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதன் மீதான விவாதம், அந்த நாட்டின் வானொலியில் நேரடியாக ஒலிபரப்பானது.

முடிவில் தீர்மானத்துக்கு ஆதரவாக 137 ஓட்டுகள் விழுந்தன. எதிராக 121 ஓட்டுகள் பதிவாகின. 2 எம்.பி.க்கள் ஓட்டெடுப்பில் பங்கேற்கவில்லை. இதனால் தீர்மானம் நிறைவேறியது.

அதைத் தொடர்ந்து பொருளாதார மந்திரி மசூத் கர்பாசியன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். ஈரானில் அதிபர் ஹசன் ரூஹானியின் மந்திரிசபையில் ஒரே மாதத்தில் நாடாளுமன்றத்தின் மூலம் பதவி பறிக்கப்பட்ட 2–வது மந்திரி என்ற பெயரை இவர் பெற்றார்.

SHARE