ஊழிப்பெருவெள்ளத்தில் அடித்துச்செல்லப்படும் உறவுகளை கருணைப்பேழையாக மிதந்து காப்பாற்றிக்கரை சேர்ப்போம் வாருங்கள்! – வடமாகாண பிரஜைகள் குழுக்கள் அழைப்பு 

131

நிழல் தரப்போகும் ஈழ விருட்சங்களுக்கு, நீர் பாய்ச்சுக்கொண்டிருக்கும் புலம்பெயர் மேகங்களுக்கு பேருவகையுடன் வடமாகாண பிரஜைகள் குழுக்கள் விடுக்கும் அழைப்பு!

தமது பூர்வீக நிலபுலங்களிலிருந்து 2009ம் வருடம் முழுதாக பெயர்த்தெறியப்பட்ட எமது மக்கள், எத்தகைய உள்கட்டுமான வசதிகளும் முழுமைப்படுத்தப்படாதநிலையில் மீளக்குடியேற்றப்பட்டு தங்களின் பொருளாதார, வாழ்வாதார உதவிகளினால் மெல்ல மெல்ல மேலெழுந்து வந்துகொண்டிருக்கும் நிலையில், சிறீலங்கா அரசின் வஞ்சிப்பு போதாதென்று இயற்கையும் எமது மக்களை மோசமாக வஞ்சித்துள்ளது.

வடக்கு கிழக்கு தமிழர் தாயகப்பிரதேசங்களில் கடந்த சில வாரங்களாக பெய்ந்துவரும் கனமழை காரணமாக ஆறுகள், வாய்க்கால்கள் பெருக்கெடுத்தும், குளங்கள் உடைப்பெடுத்தும் வான் பாய்ந்தும் ஊர்களுக்குள் வெள்ளம் புகுந்ததால் “ஆறு மாதங்களுக்கு மட்டும்” என்று கூறி வழங்கப்பட்ட தற்காலிக கூடாரங்களில் மூன்று வருடங்களுக்கு மேலாக எமது மக்கள் வசித்துவந்த நிலையில், அக்கூடாரங்களையும் வெள்ளநீர் அள்ளிச்சென்று விட்டது.

இந்த வெள்ள அனர்த்தம் காரணமாக எமது மக்கள் தமது தற்காலிக கூடாரங்களை இழந்து, உடைமைகளை இழந்து சனசமுக நிலையங்கள், முன்பள்ளி கட்டடங்கள், பாடசாலைகள், தேவாலயங்கள், பொதுநோக்கு மண்டபங்களில் தஞ்சமடைந்துள்ளனர். 21 ஆயிரத்து 917 பேர் வெள்ள அனர்த்தத்துக்கு உள்ளாகாத பகுதிகளுக்கு கையில் கிடைத்த பொருள்களுடன் இடம்பெயர்ந்துள்ளனர்.

தொடர்ந்தும் கனமழை பெய்துகொண்டிருக்கும் சூழலில் அகப்புற காரணிகளால் இடம்பெயர முடியாவிட்டாலும், பலபகுதிகளிலும் வானம் பார்த்து கிடக்கும் கூரைகளின் பொத்தல்கள் வழியே மழைநீர் கொட்டி சேறும் சகதியுமாக மக்களின் இருப்பிடங்கள் காட்சி தருகின்றன.

 

வவுனியா மாவட்டத்தில் 31,536 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 10,896 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 9,715 பேரும், மன்னார் மாவட்டத்தில் 6,495 பேரும், மொத்தமாக 58,642 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

இடம்பெயர்ந்துள்ள மக்கள் பொதுப்பாவனைக்குரிய கட்டடங்களில் தங்கியுள்ளநிலையில், அங்கு இடவசதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாலும், மலசலகூடங்கள் நிரம்பி வழிவதாலும், குழந்தைகள், சிறுவர்கள், முதியவர்கள் சகிதம் பல்வேறு அசௌகரியங்களுடனும், சுகாதார பிரச்சினைகளுடனும் பல ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன. கூலி வேலை செய்து தமது அன்றாட சீவியத்தை கவனித்து வந்த குடும்பங்கள் பலவும் தமது வாழ்வாதாரத்தொழிலை இழந்து பசி, பட்டினிக்குள் அகப்பட்டுள்ளன.

இலங்கையின் சமகால அரசியல் சூழமைகளில் அனைத்து அரசியல் கட்சிகளும் சிறீலங்காவின் எட்டாவது ஜனாதிபதியை தெரிவுசெய்யும் தேர்தலில் கவனம் செலுத்தி, தமது நடவடிக்கைகளை முன்னிறுத்துவதால் இந்த மனிதப்பேரவலம் மறைக்கப்பட்டு விட்டது மிகப்பெரிய சோகமே!

வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு கூரை-தரை விரிப்புகள், நுளம்பு வலைகள், பாய்கள், போர்வைகள் இன்னோரன்ன பாதுகாப்பு-பராமரிப்பு பொருள்களும், குழந்தைகள், கர்ப்பிணித்தாய்மார்கள், முதியோர்களுக்கான பால்மா வகைகள், சத்துணவுகளும் அவசர அவசியமாக தேவைப்படுகின்றன.

தமிழ் பேசும் மக்களின் இடர் களையும் எமது நல்லெண்ண அழைப்பை ஏற்று தாயகம், தமிழகம், புலம்பெயர் நாடுகளில் வாழும் உறவுகளும், சமுக ஆர்வலர்களும், மக்கள் நலன் விரும்பிகளும் தங்களின் வலுவுக்குள்பட்ட உதவிகளை வழங்கி மனிதாபிமானப்பணியில் பங்காளர்களாக இணைந்துகொள்ளுமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

 

தொடர்புகளுக்கு:

அருள்தந்தை செபமாலை அடிகளார் (தலைவர், வடமாகாண பிரஜைகள் குழு)

0094 774384 882

அருள்தந்தை ஜோய் பெர்ணான்டோ அடிகளார் (உபதலைவர், வடமாகாண பிரஜைகள் குழு) 0094 779345 725

திரு. கி.தேவராசா (செயலாளர், வடமாகாண பிரஜைகள் குழு)

0094 772774 018

திரு. அ.சகாயம் (பொருளாளர், வடமாகாண பிரஜைகள் குழு)

0094 773584 870

mncitcom1@gmail.comvavuniyacitizen@gmail.com

sjoeomi@gmail.com

 

வங்கி கணக்கு இலக்கம்:

Hatton National Bank (020020026378)

HOLDER NAME: Citizen committee mannar

Swift Code: HBLILKLX

பேரன்புடையீர்! 

ஒரு மாத காலத்துக்குப்பின்னர் (31.01.2015க்குப்பின்னர்) குறித்த வங்கி கணக்கு இலக்கத்துக்கு எத்தகைய பணவைப்புகளையும் இடவேண்டாம் எனவும், விருப்பமெனில் அதற்கு முன்னதாக உங்கள் பணவைப்புகளை செய்து ஒத்துழைப்பு நல்குமாறும், தங்கள் பணவைப்பு விவரங்களையும், கருத்துகள் ஆலோசனைகளையும் குறித்த மின்னஞ்சல் முகவரிகள் ஊடாக அவசியம் பகிர்ந்துகொள்ளுமாறும், வினயமாக கேட்டுக்கொள்கின்றோம்.

கிடைக்கப்பெற்ற தங்களின் பொருள் உதவிகளும், பெறப்பட்ட பணத்துக்கு கொள்வனவு செய்யப்பட்ட அத்தியாவசிய பொருள்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 01.02.2015இல் இருந்து 15.02.2015 வரை வழங்கப்பட்டு, நிதி மற்றும் பொருள் உதவி அளித்த அன்பர்களின் பெயர் விவரங்களும் (விருப்பத்துக்கு அமைவாக), கணக்கறிக்கை விவரங்களும் தாயக மற்றும் சர்வதேச ஊடகங்களில் 18.02.2015 அன்று மக்களின் பார்வைக்காக வெளிப்படுத்தப்படும்.

 

unnamed (4)

SHARE