எங்களை கேவலமாக நினைத்தவர்களுக்கு வெற்றியால் பதிலடி கொடுத்தோம்: ஜெயசூர்யா பெருமிதம்

32

1996 உலகக் கிண்ணத்தை வென்று இலங்கை அணி, உலக அணிகளுக்குச் சவால் விடுத்துக் கொண்டிருந்த தருணம் அது.

மேலும், இலங்கை அணியைக் கண்டாலே அனைவருக்கும் ஒரு பயம் கலந்த எரிச்சலும், தேவையற்ற ஏளனமும் இருந்த காலகட்டம். ஜெயசூர்யா, ரொமேஷ் கலுவிதரன, அரவிந்த டிசில்வா ஆகியோர் எதிரணியை கதிகலங்கச் செய்து கொண்டிருந்தனர்,

அப்போது உலகக் கிண்ணத்தை வென்று 2 ஆண்டுகள் ஆனபின்பு கூட இலங்கையை இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு அழைக்கவில்லை, பின்னர் ஒரேயொரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடருக்கு அழைத்தது.

இப்போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 445 ஓட்டங்கள் எடுக்க இலங்கை அணி 591 ஓட்டங்கள் குவித்து அதிர்ச்சியளித்தது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து 2வது இன்னிங்சில் 181 ஓட்டங்களுக்கு சுருண்டது, முத்தையா முரளிதரன் 65 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுகளைச் சாய்த்தார். வெற்றிக்குத் தேவையான 37 ஓட்டங்களை 5 ஓவர்களில் ஜெயசூர்யா முடித்தார்.

இப்போட்டி குறித்து நினைவுக்கூர்ந்த சனத் ஜெயசூர்யா கூறுகையில், அப்போது எங்களுக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியில் ஆடுவதைக் கூட நேர விரயம் என்று இங்கிலாந்து நினைத்தது.

நாங்கள் ஏதோ பித்துப் பிடித்த நபர்கள் என்றும் அனாயாச மட்டை சுழற்றிகள், கன்னாபின்னாவென்று அடிப்பவர்கள் என்ற பெயர் இருந்தது.

இந்தப் போட்டிக்கு முன்பாக நான் சரியாக ஆடவில்லை.

ஆனால் அணித்தலைவர் பக்கபலமாக இருந்தார்.

இங்கிலாந்து அணியினரும் என்னை வெறும் அனாயாச மட்டைச் சுழற்றி, டெஸ்ட் போட்டிகளில் தாங்க மாட்டார் என்றெல்லாம் கருத்து கூறிவந்ததும் எனக்கு உத்வேகமூட்ட இந்த டெஸ்ட்டில் நிரூபிக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன்.

நல்ல கிரிக்கெட்டை ஆடினோம், உண்மையான கிரிக்கெட் ஷாட்களை ஆடினோம். இதனால் எங்களுக்கு வெற்றி சுலபமானது என நினைவுகூர்ந்துள்ளார்.

SHARE