மட்டக்களப்பில் அமைக்கப்பட்டுவரும் குடிநீர்ப் போத்தல் தொழிற்சாலையை தடைசெய்யுமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.

26

மட்டக்களப்பு பெரிய புல்லுமலையில் அமைக்கப்பட்டுவரும் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர்த் தொழிற்சாலையை தடைசெய்யுமாறு வலியுறுத்தி எதிர்வரும் செப்டம்பர் மாதம் 07ஆம் திகதி  மாவட்டம் தழுவிய ஹர்த்தால் போராட்டத்துக்கு தமிழ் உணர்வாளர்கள் அமைப்பு அழைப்புவிடுத்துள்ளது.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அந்த அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மேகான்,

புல்லுமலை தண்ணீர் தொழிற்ச்சாலைக்கு எதிரான போராட்டமானது ஒரு இனத்திற்கோ அல்லது மதத்திற்கோ எதிரானது அல்ல. புல்லுமலை கிராமமானது குடி தண்ணீர் இல்லாத மிகவும் வறட்சியான வானத்தை நம்பி வாழும் கிராமமாகும். இந்த நிலையில் நாளொன்றிற்கு 20 ஆயிரம் லீட்டருக்கு மேலான நீர் உறிஞ்சப்படுமானால் சிறு குளங்களும் வற்றி வரண்ட நிலமாக மாறி விடும் நிலை ஏற்படும்.

இந்த நடவடிக்கையை நிறுத்துமாறு ஜனாதிபதிக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் பல முறை எடுத்துக் கூறியும் அவர்கள் கவனத்திற் இதனை கொள்ளவில்லை.

ஆகவே இவ்வாறான  செயற்பாடுகளை கண்டித்தே எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 7 ஆம் திகதி மாவட்டம் தழுவிய ரீதியில் ஹர்த்தால் போராட்டம் ஒன்றை நடத்த ஏற்பாடு செய்துள்ளோம்.

அத்துடன் அரசாங்க உத்தியோகஸ்தர்கள் வர்த்தக வணிக வியாபாரிகள் அன்றைய தினம் போராட்டத்தில் கலந்து கொண்டு ஒத்துழைப்பு வழங்குமாறும்,  பொது மக்கள் போக்குவரத்து நடவடிக்கைகளை தவிர்த்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கின்றோம் என்றும் தெரிவித்தார்

SHARE