தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முஸ்லிம்கள் ஆற்றிய பங்கு மிகவும் காத்திரமானது-நாகபடை தலைமை தாங்கியவர் ஒட்டமாவடியைச் சேர்ந்த ஜுனைதீன்

81

 

 

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முஸ்லிம்கள் ஆற்றிய பங்கு மிகவும் காத்திரமானது. தென் தமிழீழத்தில் உருவாகிய இயக்கங்களுள் “தமிழீழ விடுதலை நாகங்கள் ” (நாகபடை) சிலகாலம் பரபரப்பை உருவாக்கியது . இதற்கு தலைமை தாங்கியவர் ஒட்டமாவடியைச் சேர்ந்த ஜுனைதீன்.

அரசுக்குத் துணைபோன ஐ .தே. க . பிரமுகர் மாலா இராமச்சந்திரனை சுட்டுக் கொன்றமை, நாகேந்திரம், டொட்டி பிரான்சிஸ் , ஆகிய பிரமுகர்கள் மீது தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டமை என நாகபடை மேற்கொண்ட சகல நடவடிக்கைகளிலும் பங்கு பற்றியவர் இவர் .

இக்குழுவுக்கு எதிராக பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக தொடர்ந்து இயங்க முடியாமல் போயிற்று . இந்நிலையில் தனது எதிர்காலப் பங்களிப்பைத் தமிழீழ விடுதலைப் புலிகள் மூலமாக வழங்க முடிவெடுத்தார்.</ஜுனைதீன் . இந்தியாவில் புலிகளின் மூன்றாவது பயிற்சி முகாமில் பொன்னம்மான் , புலேந்திரன் ஆகியோரிடம் பயிற்சி பெற்றார் . இக்காலத்தில் ஜோன்சன் எனும் பெயர் இவருக்கு சூட்டப்பட்டது.

முகாமில் தனது தனித் திறமைகளை அடிக்கடி வெளிப்படுத்தினார் இவர். ஓவியத்துறையிலும் இவருக்கு ஈடுபாடு இருந்தது . அவர் வரைந்திருந்த ஓவியங்களில் உப இயந்திரத் துப்பாக்கி எனும் படம் தேசியத்தலைவரின் கவனத்தை ஈர்த்தது.ஒரு ஆயுதப் போராட்டக் குழுவை ஆரம்பித்து இன விடுதலைக்காகப் போராடியவர் என்ற வகையில் இவர் மீது தனிப்பற்று அவருக்கு இருந்தது. பிரபாகரனே தனது தலைவர் என்று ஏற்றுக்கொண்ட ஜோன்சனுக்கு அவருடனான சந்திப்புக்கள் மன நிறைவைக் கொடுத்தன.

இச்சந்திப்புக்களில் விடுதலைப் போராட்ட வழிமுறைகள் பற்றியே அதிகம் கலந்துரையாடப்பட்டன. அதில் தமிழ் -முஸ்லீம் இனங்களின் உறவை பலப்படுத்த ஆற்ற வேண்டிய பணிகள் முக்கியத்துவம் பெற்றன.பயிற்சி முகாமிலிருந்து வெளிவந்ததும் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பப்பட்டார் ஜுனைதீன். கிட்டு தலைமையில் 1985 நடைபெற்ற யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத் தாக்குதலில் பங்கு பற்றி தனது ஆற்றலை நிரூபித்தார்.

அன்று நடைபெற்ற கொக்குளாய் இராணுவ முகாம் மீதான தாக்குதலிலும் பங்குபற்றினர். அதன் பின்னர் மட்டக்களப்புக்குச் சென்றார். அங்கே புதிய பலத்துடன் களமாடும் கனவுகளோடு இருந்தார்.அக்காலத்தில் மட்டக்களப்பில் முஸ்லிம் கிராமங்களில் போராட்டத்தின் தேவை பற்றி எடுத்துரைத்தார். மன்னார் முருங்கனில் ஈரோஸ் இயக்கத்தினரால் இரு முஸ்லிம்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதனைச் சந்தர்ப்பமாகப் பயன்படுத்த அரசு தீர்மானித்தது . அக்கரைப்பற்றில் இச் சம்பவத்தைக் கண்டித்து முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தொடர்ந்து தமிழ் முஸ்லீம் உறவைச் சீர்குலைக்க அவசரஅவசரமாக அரசு சில நடவடிக்கைகளை மேற்கொண்டது. விசேட அதிரடிப் படையினர் காரைதீவு கிராமத்தைக் சுற்றி வளைத்தனர். முஸ்லிம் தொப்பி அணிந்த காடையர்கள் பல்வேறு வன்முறைகளில் ஈடுபட்டனர்.அதனைத் தொடர்ந்து கிழக்கின் பல்வேறு இடங்களிலும் தமிழ் – முஸ்லீம் மக்களிடையே பரஸ்பரம் அவநம்பிக்கை மேலோங்கியது. குறிப்பாக எல்லைப்பகுதிகளில் இதன் தாக்கம் அதிகமாக இருந்தது.முன்னாள் அமைச்சர் இராஜதுரை ” கிழக்கில் குழல் புட்டுப்போல தமிழரும் முஸ்லிமும் வாழ்ந்து வருகிறோம் தேங்காய்ப் பூ அடுத்து மா என மாறி மாறி இருப்பதுபோல் நாங்கள் இருக்கிறோம்” என ஒரு கூட்டம் ஒன்றில் சொன்னார்.அவ்வாறு அடுத்தடுத்து இருந்த கிராமங்களில் வன்முறைகள் வெடித்தன. படுவான்கரையில் இருந்த ஒரே ஒரு முஸ்லிம் கிராமமான பாவற் கொடிச்சேனையில் ஈ .பி . ஆர் .எல் .எப் இயக்கம் மிக மோசமான வன்முறையில் ஈடுபட்டது. சில பெண்கள் பாலியல் வன் முறைக்குள்ளாக்கப்பட்டனர்.

பல்வேறு இயக்கங்கள் இருந்ததால் ஒன்றையொன்று கட்டுப்படுத்த முடியாத நிலை. ஒவ்வொரு இயக்கமும் தத்தம் வளர்ப்புக்கு ஏற்ற வகையில் நடந்துகொண்டன. புலிகள் , ஈரோஸ் , தமிழீழப் பாதுகாப்பு பேரவை தவிர்ந்த ஏனைய இயக்கங்கள் தறிகெட்டு நடந்து கொண்டன.காரைதீவில் முஸ்லிம் தொப்பி அணிந்து வன்முறையில் ஈடுபட்டது சிங்களக் காடையரும் படையினருமே என்ற உண்மை மிக விரைவிலேயே தெரிந்துவிட்டது.இஸ்ரேலிய உளவுப்படையான மொஸாட்டின் வழிநடத்தலிலேயே இந்த வன்முறை மேற்கொள்ளப்பட்டது எனத் தெரிந்ததும் தமிழர் தரப்புச் சற்றுத் தணிந்தது.</p><p>எனினும் பாதிக்கப்பட்ட காத்தான்குடி மக்கள் (பாவற்கொடிச்சேனையில் இருந்து விரட்டப்பட்டோர் பெரும்பாலும் காத்தான்குடியைப் பூர்வீகமாகக் கொண்டவர்களே.)

எல்லைப் புறக்கிராமமான மஞ்சந் தொடுவாய் மீது தாக்குதல் மேற்கொள்ள வந்தனர். அதிரடிப் படையினர் இவர்களுக்கு காவலாக இருந்தனர். அச்சமயம் தமிழர்கள் ” நீங்கள் வேண்டுமானால் எங்களைக் கொல்லுங்கள் இவர்களுக்கு ஏன்ஆதரவு கொடுக்கிறீர்கள்?“ எனக் கேட்டனர்.அதற்கு “நீங்கள் வேண்டுமானால் புலிகளைக் கொண்டுவந்து இவர்களை அடித்து விரட்டுங்கள் ” எனப் பதிலளித்தனர் விசேட அதிரடிப் படையினர். அப்போதுதான் தங்கள் இரு இனத்தவரையும் மோதவைக்க படைத்தரப்பு முயற்சிப்பதை அனைவரும் உணர்ந்தனர்.மஞ்சந்தொடுவாய் பக்கம் வரும் முஸ்லிம்கள் மீது தமிழர்கள் சிலர் வன்முறையில் ஈடுபடுவதாக புலிகளுக்குச் செய்திகள் கிடைத்தன. சம்பந்தப்பட்டவர்களை உடன் கொண்டு வருமாறு யாழ் பல்கலைக் கழக மருத்துவப்பீட மாணவனும் மருத்துவப் பிரிவில் அங்கம் வகித்தவருமான லெப் .சுதர்சனுக்கு ( பூபாலபிள்ளை சிவகுருநாதன் , ஆரையம்பதி ) கூறப்பட்டது அவரும் அவ்வாறே செய்தார்.தோணிகளில் கொண்டுவரப்பட்டோர் மீது விசாரணை நடந்தது. மறுதரப்பால் இவர்களும் பாதிப்புக்குள்ளானது தெரியவந்தது. இந்த விசாரணைகளை ஜோன்சனும் பார்த்துக்கொண்டிருந்தார்.விசாரித்துக் கொண்டிருந்த அப்போதைய மட்டக்களப்பு தலைமையை தனியே அழைத்தார். அவர்களும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் நாங்கள் ஒரு தரப்புக்குச் சாதகமாக நடந்து கொள்ளக்கூடாது பாதிப்பின் வலியும் , வேதனையும் எல்லோருக்கும் ஒரே மாதிரித்தான் வேணுமெண்டா கடுமையா எச்சரிச்சுப் போட்டு அனுப்புங்கோ வேறு ஒன்றும் செய்யவேண்டாம்.” என வலியுறுத்தினார்.இந்த நிதானமான வார்த்தைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. ஒரு பதட்டமான சூழ்நிலையிலும் இரு இனங்களின் ஐக்கியத்தையே முதன்மைப் படுத்தினார் அவர்.07 /05 /1985 அன்று கரடியனாற்றில் பொலிஸாருடன் மோத வேண்டிய வேண்டிய சூழல் ஏற்பட்டது . G3 துப்பாக்கியால் சுட்டுக்கொண்டே தப்பி வந்தார்.இதே போல் ஈரளக்குளப்பகுதியில் அமைக்கப்படட பயிற்சி முகாமில் புதிதாக இயக்கத்தில் இணைந்து கொண்டோர் இருந்தனர். அந்தப்பகுதியை வட்டமிட்டு தாக்குதல் நடாத்திய உலங்கு வானுர்தியை கீழே இறங்கவிடாமல் G3. துப்பாக்கியால் சுட்டு விரட்டினார்.இந்நிலையில் இந்திய அரசின் ஏற்பாட்டில் பேச்சு வார்த்தைகள் நடைபெற்றன. பூட்டான் தலைநகர் திம்புவில் நடந்த இப்பேச்சு வார்த்தைகளில் அரசதரப்பும் போராளிகள் குழுக்களும் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கின . எனினும் இந்த உடன் பாட்டில் ஒரு தரப்பு மட்டுமே நேர்மையாக நடந்து கொண்டது.வவுனியாவில் நடந்த முற்றுகையில் ஒரு போராளி வீரச்சாவடைந்தார். யுத்த நிறுத்தம் தானே என்ற நம்பிக்கையில் ஜுனைதீனும், ஜோசெப்பும் கரடியனாற்றில் இருந்து ஆயித்தியமலைக்குச் சென்றனர்.மோட்டார் சைக்கிளில் சென்ற இவர்களை ஒரு பார ஊர்தியின் பின்னால் மறைந்திருந்த பொலிஸார் உதைத்து வீழ்த்தினார் .மிகக்குறுகலான வழியில் நிதானமாக பார ஊர்தியை விலத்தி சென்றதைப் பயன்படுத்தி பொலிஸார் யுத்த நிறுத்தத்திற்கு மாறாக இவர்களைக் வீழ்த்தி கைது செய்தனர்.இந்நடவடிக்கைக்கு ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தியோபிளஸ் தலைமை தாங்கினார். அவருக்கு ஏற்கனேவே ஜுனைதீனைத் தெரியும். ஏனெனில் ஜுனைதீன் ஏறாவூர் அலிகார் மகா வித்தியாலயத்தில் படித்தவர். மாணவ தலைவராகவும் இருந்தவர். ஒரு முஸ்லிம் போராளி குழுவை ஆரம்பித்துள்ளார் என்ற செய்தி கிடைத்த காலம் முதல் அவரைத் தேடித் திரிந்தவர் தியோபிளஸ். கைதான இருவரும் பனாகொடை இராணுவ முகாமுக்கு அனுப்பப்பட்டனர். இந்த முகாமில் இருந்து தான் ஏற்கனவே பனாகொடை மகேஸ்வரன் என்றழைக்கப்படும் ஒருவர் தப்பியிருந்தார்.( இவரே தமிழீழ இராணுவம் என்ற ஆயுதக் குழுவின் தலைவர் ) ஜுனைதீனும், ஜோசெப்பும் அங்கிருந்து தப்பிச் செல்ல வேண்டிய தேவை இருந்தது. சித்திரவதைகள் தொடர்ந்தால் பாதகமான நிலைமைகள் ஏற்படும் என உணந்தனர்.30/11/1985 அன்று படையினரைத் தாக்கிவிட்டு தப்பிச் செல்கையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இரையாகினர். தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் முஸ்லிம் மாவீரன் என வரலாற்றில் தனது பெயரைப் பதித்துக் கொண்டார் ஜுனைதீன் .இவர் மூலம் முஸ்லிம் கிராமங்களில் ஏற்பட்ட தொடர்புகளை புலிகள் மேலும் விஸ்தரித்தனர். அதுவரை புலிகளுக்கு உணவும் பாதுகாப்பும் மட்டுமே கிடைத்து வந்தது. குமரப்பா மட்டக்களப்புக்குத் தலைமை தாங்கிய பின்னர் ஆயுதப்போராட்ட நடவடிக்கைகளிலும் பங்களிப்புக் கிடைத்தது .குறிப்பாக வடகிழக்குக்கு வெளியே நடைபெற்ற தாக்குதல்கள் அரசை அதிரவைத்தன. இதனைத் தொடர்ந்து சில முஸ்லிம்கள் கைதாக வேண்டிய சூழ்நிலையையும் ஏற்பட்டது.போராட்டத்தைப் பொறுத்தவரை இந்திய இராணுவத்தின் காலத்தில் கிழக்கில் முஸ்லிம்களின் பங்களிப்பு காத்திரமானதாக இருந்தது.யுத்த நிறுத்தத்தை வலியுறுத்தி ஏறாவூர் முஸ்லிம்கள் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது முஸ்லிம் காங்கிரசில் அங்கம் வகிக்கும் பசீர் சேகு தாவுத் என்பவரே இதற்கான ஏற்பாடுகளைச் செய்தார்.அவர் அப்போது ஈரோஸ் இயக்கத்தில் அங்கம் வகித்தார்.இப்போராட்டத்தில் ஈடுபட்டவர்களை இந்திய இராணுவத்தின் துணையுடன் வந்த ராசிக் குழுவினர் அடித்துத் துரத்தினர்.மிக இறுக்கமான சூழ்நிலையை இந்திய இராணுவம் ஏற்படுத்தி இருந்தது. போராளிகளுக்கான உணவு கிடைப்பது மிகச் சிரமமாக இருந்தது . முஸ்லிம்களே இவற்றைச் சுமந்து வந்தனர் ஒட்டமாவடி , ஏறாவூர் ,காத்தான்குடி மக்களின் பங்களிப்பு மிக்க காத்திரமாக இருந்தது .இந்திய இராணுவம் வந்த புதிதில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் ” இலங்கை இந்திய ஒப்பந்தமும் முஸ்லிம்களின் எதிர்காலமும்” என்ற தலைப்பில் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத் தலைவராக இருந்த வணசிங்கா ஆசிரியர் தலைமையில் கலந்துரையாடல் ஒன்று 1/9/1987 அன்று மட்டுநகரில் உள்ள சாள்ஸ் மண்டபத்தில் இடம்பெற்றது.முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஆரம்பிக்கப்பட்ட அக்காலத்தில் அதன் பிரதிநிதியாக ஹிஸ்புல்லாவை அஸ்ரப் அனுப்பி வைத்தார். (அப்போது அவர் ஒரு மாணவனாக இருந்தார்.) மற்றும் பேராசிரியர் சித்திக் உட்பட இன்னும் பல முஸ்லிம் பிரமுகர்கள் கலந்து கொண்டனர் .தமிழர் தரப்பில் பேராசிரியர் சிவத்தம்பி , அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ , சட்டத்தரணி பொன். வேணுதாஸ் அன்றைய மட்டக்களப்பு முக்கிய பத்திரிகையாளர் நித்தியானந்தன் போன்ற பலர் கலந்து கொண்டனர்.இவர்களில் வணசிங்கா ஆசிரியர் , அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ ஆகிய இருவரையும் பின்னாளில் இரா.துரை ரத்தினம் தலைமையிலான E.P.R.L.F. குழுவினர் சுட்டுக் கொன்றனர் .காத்தான்குடியில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய பொட்டம்மான் ” இந்த ஊரை காத்தவர் குடியென்றே கூறுவேன் போராட்டத்தின் நெருக்கடியான காலங்களில் எம்மைப் பாதுகாத்து உணவளித்தவர்கள் நீங்களே ” எனக் குறிப்பிட்டார்.அக்காலத்தில் குறிப்பிடப்பட்டளவு முஸ்லிம் போராளிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டனர் .இதற்கு முன்னதாக ஒரு முஸ்லிம் போராளியான லத்தீப் முகமது அலியார் (முகமது லத்தீப் ) ஒல்லிக்குளத்தில் வைத்து 24/12/1986 அன்று E.P.R.L.F. வினராலும், பின்னர் காத்தான்குடியில் முகமட் நசீர் என்னும் முஸ்லிம் போராளி 30/12/1987 அன்று முஸ்லிம் ஊர்க்காவல் படையினராலும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இந்திய இராணுவம் இம் மண்ணை விட்டுச் சென்றதும் நல்ல சூழல் நிலவியது, முஸ்லிம் பிரதேசங்களில் புலிகள் கோலாட்டத்துடன் வரவேற்கப்பட்டனர் .மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மைதானத்தில் 23 /3 /1990. அன்று விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி சார்பாக நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய ஏறாவூரைச் சேர்ந்த ஆசிரியர் காதர் “தமிழரும் முஸ்லிம்களும் கடித உறையும், முத்திரையும் போன்றவர்கள்.ஒன்றில்லாவிட்டால் ஒன்று போய்ச் சேராது . ஆகவே இரு இனமும் ஒன்றிணைந்தால்தான் எதையும் செய்யமுடியும். தனித்து எந்த இனமும் எதையும் சாதிக்க முடியாது“ எனக் குறிப்பிட்டார். அதனை வரலாறு நிரூபித்தது

SHARE