வடக்கு – கிழக்கு மாகாணங்களில் 40 ஆயிரம் வீடுகளை அமைக்கும் பணிகள் சீன நிறுவனத்திடமிருந்து மீளப் பெறப்பட்டு, இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கொழும்பில் நேற்று இடம்பெற்ற உயர்மட்ட கலந்துரையாடலிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இது தொடர்பில் இந்திய அரசுடன் விரைவில் பேச்சு இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 40 ஆயிரம் வீடுகளை அமைக்கும் பணிகளை சீன நிறுவனம் முன்னெடுப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
எனினும் இது தொடர்பில் இந்திய அரசு தனது ஆட்சேபனையை இலங்கை அரசிடம் வெளிப்படுத்தியிருந்தது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், இந்த வீட்டுத் திட்டத்தை இந்தியாவிடம் ஒப்படைக்க வலியுறுத்தியிருந்தது.
இதனால் இந்தியாவா? சீனாவா? வடக்கு, கிழக்கில் வீடமைப்பு என்ற இழுபறி நிலை நீடித்திருந்தது.
ஆனால் நேற்றைய கூட்டத்தில், வீட்டுத் திட்டத்தை முன்னெடுக்கும் பணியை இந்தியாவிடம் ஒப்படைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வீட்டுத் திட்டத்துக்கான நிதி தொடர்பில் இந்திய அரசுடன் இலங்கை அரசு விரைவில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. இதன் பின்னர் வீட்டுத் திட்டம் ஆரம்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.