மன்னார் மனித புதைகுழி தொடர்பான விசேட கலந்துரையாடல்  

9

மன்னார் நகர் நிருபர்

மன்னார் புதைக்குழியில் இருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்களை அமெரிக்காவின் புளோரிடா பல்கலைகழகத்திற்கு அனுப்பி ஆய்வு செய்வது தொடர்பான இறுதித் தீர்மானம் மேற்கொள்வது பிற்போடப்பட்டுள்ளது.

மனித புதைகுழி தொடர்பில் நடத்தப்பட்ட விசேட கூட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையின் பிரகாரம், இது குறித்த தீர்மானம் அடுத்த கூட்டத்தில் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மனித புதைகுழி தொடர்பான விசேட கூட்டம் மன்னார் மாவட்ட நீதிமன்ற புதிய நீதிபதி ரி.சரவணராஜா தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் அப்புறப்படுத்தப்பட்ட மனித எச்சங்கள், எந்தக்காலத்திற்குரியவை என்பதை உறுதிப்படுத்துவதற்காக அவற்றை புளோரிடா பல்கலைகழகத்திற்கு அனுப்புவது தொடர்பில் சட்டவைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்சவால் முன்மொழிவுவொன்று சமர்ப்பிக்கப்பட்டது.

எனினும் இது குறித்து மேலதிக கலந்துரையாடலை மேற்கொள்ள வேண்டியுள்ளதால் இது குறித்த தீர்மானத்தை அடுத்த கூட்டத்திற்கு பிற்போடுமாறு காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணிகள் கோரிக்கை முன்வைத்தனர்.

இதனடிப்படையில் இது தொடர்பான இறுதித் தீர்மானம் நேற்றைய கூட்டத்தில் மேற்கொள்ளப்படவில்லை என்பதுடன், அகழ்வு செய்யப்படும் மாதிரிகள் எவ்வாறு பேணப்படுகின்றன மற்றும் அதன் நம்பகத்தன்மை தொடர்பிலும் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணிகள் கேள்விகளை எழுப்பியிருந்தனர்.

அந்தப் பொருட்களை சட்ட வைத்திய அதிகாரி, சோக்கோ பொலிஸாரின் கையொப்பத்துடன், முத்துரைகுத்தப்பட்டு நீதிமன்றப் பதிவாளிடம் கையளிக்கப்பட்டு பதிவுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த அகழ்வுப் பணிகள் வெளிப்படைத் தன்மையுடன் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதன் அடிப்படையில், வாராந்தம் புதன்கிழமை அகழ்வுப் பணிகளின் முன்னேற்றங்கள் மற்றும் பொருட்கள் தொடர்பில் சட்டவைத்திய அதிகாரி ஊடகங்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும் எனவும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

ஏற்கனவே அகழப்பட்ட மண்ணை, மற்றுமொரு இடத்திற்கு மாற்றுவதற்கு நீதிமன்ற பதிவாளர் மூலம் நீதிமன்றத்திற்கு சொந்தமான இடத்தில் நகர சபை வாகனங்கள் மூலம்.

மன்னார் மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் கடந்த மூன்றரை மாதங்களாக முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், இன்று 70 ஆவது வேலைநாளாக இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இதுவரை 126 முழுமையான தனி மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் 120  மனித எச்சங்கள் அப்புறப்படுத்தப்பட்டு, பொதிசெய்யப்பட்டு, நீதிமன்ற கட்டத்தொகுதியில் வைக்கப்பட்டுள்ளன.

இதுவரை நடைபெற்ற அகழ்வுப் பணிகள் தொடர்பான சிறுகுறிப்பை சட்டவைத்திய அதிகாரி நீதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்ததுடன், இந்த நடவடிக்கைகளுக்கான இணைப்பாளர்களாக பொலிஸ் சிரேஷ்ட அதிகாரிகள் இருவர் பெயரிடப்பட்டுள்ளனர்.

அகழ்வு செய்யப்பட்டு, துப்புரவு செய்யப்பட்ட இடங்களையாவது கட்டட நிர்மாணத்திற்காக பெற்றுத் தர முடியுமா என சதொச நிறுவன அதிகாரி வினவியிருந்தார்.

எனினும் சட்டவைத்திய அதிகாரியுடன் கலந்துரையாடிய நீதிபதி, இந்த அகழ்வுப் பணிகள் நிறைவுபெறும் காலப்பகுதியை உறுதியாக கூற முடியாது என்பதால், மாற்று இடத்தை  தெரிவுசெய்யுமாறு சதொச கட்டட நிறுவன அதிகாரிக்கு நீதிபதி ஆலோசனை வழங்கினார்.

மன்னார் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மன்னார் சட்டவைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ச, களனி பல்கலைகழக தொல்பொருள் துறை பேராசிரியர் உள்ளிட்ட குழுவினர், காணாமல் போனோர் தொடர்பான நிரந்தர அலுவலகத்தின் தலைவர் சட்டத்தரணி சாலிய பிரீஸ், ஆணையாளர் கணபதிப்பிள்ளை வேந்தன், மன்னார் மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர், காணி அலுவலர், சதொச நிறுவன பொறுப்பதிகாரி, கட்டட ஒப்பந்தகாரர், சட்டத்தரணிகள், பொலிஸார், நீதிமன்றப் பதிவாளர் மற்றும் அழைக்கப்பட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

SHARE