தொழிற்சங்க சேவையினை பாராட்டி கௌரவிப்பு

அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ்.லோகநாதனின் தொழிற்சங்க சேவையினை பாராட்டி கௌரவித்தார் முன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.இராஜேஸ்வரன்
தொழிலாளர் உரிமைக்காக போராடுகின்றோம் என்று கூறுபவர்களுள் ஒரு சில அரசியல்வாதிகளின் கைப்பொம்மைகளாக உலா வருகின்றனர் இவர்கள் எம்மத்தியில் வாழ்கின்ற பச்சோந்திகளாவர். இதே வேளை தமது உயிரையும் பொருப்படுத்தாது உண்மைக்காக உரத்துக் குரல் கொடுக்கின்ற நீர்மயமான தொழிற்சங்கவாதிகளும் எம்மத்தியில் உள்ளனர். இவர்களுள் ஒருவராகத்தான் அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவராக விளங்கும் எஸ்.லோகநாதனைக் காண முடியும்.
இவ்வாறு முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.இராஜேஸ்வரன் குறிப்பிட்டார்.
அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ்.லோகநாதனின் தொழிற்சங்க சேவையினைப் பாராட்டும் “வாழ்துவோம் வாரீர்” கௌரவிப்பு நிகழ்வு இலங்கை தமிழரசுக்கட்சியின் கல்முனைத் தொகுதிக்கான உபதலைவர் க.கனகராஜா தலைமையில் எம்.ஆர்.சி நிறுவன அனுசரணையில் கல்முனையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.இராஜேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு மேலும் பேசுகையில்,
நான் அரசியலுக்கு வருவதற்கு முன்னர் கல்முனைப் பிரதேசத்திலுள்ள கிராம அபிவிருத்தி சங்கங்களின் ஒன்றியத்தின் உபதலைவராக செயற்பட்ட வேளையில் கல்முனை வாழ் தமிழ் மக்களின் நலன் கருதி குறிப்பாக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை முழு நிறைவான பிரதேச செயலகமாக தரமுயர்த்த வேண்டும் என்று சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை இருபது வருடங்களுக்கு முன்னர் கல்முனையில் நடாத்திய போது எம்முடன் இணைந்து அந்தப் போராட்டத்திற்கு வலுச்சேர்த்தவர்களுள் தொழிற்சங்கவாதி எஸ்.லோகநாதன் இருந்துள்ளார். அன்றும், இன்றும், என்றும் அடக்கப்படுகின்ற மக்களின் நலனுக்காக துணிந்து குரல் கொடுக்கின்ற இவரின் துணிச்சலை பாராட்டாமல் இருக்க முடியாது.
கல்முனை மாநகரில் பணியாற்றும் சுகாதார தொழிலாளர்களுக்கு திட்டமிட்ட முறையில் அநீதி இளைக்கப்பட்டால் அதனை துணிந்து நின்று போராடி அவர்களுக்காக குரல் கொடுத்து பல வெற்றிகளைக் கண்ணடவர். இதற்கும் அப்பால் தமிழ்த் தேசியத்தின் நலனுக்காக போர்ச்சூழல் நிலவிய காலத்தில் இருந்து துணிந்து குரல் கொடுக்கின்ற தமிழ்த் தேசியப் பற்றாளர் எஸ்.லோகநாதன் என்றால் மிகையாகாது.
அம்பாறை  நகரில் அருள்பாலிக்கின்ற அம்பாறை ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் அறங்காவல் சபையில் முக்கிய உறுப்பினராகச் செயற்பட்டு சிறந்த சமயப் பணியை மேற்கொண்டு வருகின்றார். அத்துடன் ஜீவோதையம் அமைப்பைத் தோற்றுவித்து தொழிலாளர்களுக்கு கடன் திட்டங்களை வழங்கி அவர்களின் நலனுக்காக உழைத்தவர்களுள் ஒருவராவார். இவ்வாறான ஒருவரை வாழும் போதே வாழ்த்தாமல் விட்டால் அது மாபெரும் குறையாகும் என்பதற்காகவே இந்நிகழ்வை நடாத்துகின்றோம் என்றார்.
இந்நிகழ்வில் சமுக சேவையாளர் க.கனகராஜா, மணல்சேனை சுவாமி விபுலானந்த வித்தியாலய அதிபர் ந.வரதராஜன், துரைவந்தியமேடு அ.த.க. பாடசாலை அதிபர் செல்லையா பேரின்பராசா மற்றும் இந்நிகழ்வில் கௌரவிக்கப்பட்ட தொழிற்சங்கவாதி எஸ்.லோகநாதன் ஆகியோரும் உரையாற்றினர்.

About Thinappuyal News