நிலைபேறான எதிர்காலத்திற்கு வல்லமைபெற்ற பெண்கள்

78

இன்று பெண்கள் கல்வியில் மேம்பட்டுள்ளனர், பெண்கள் வௌ;வேறு வகையான தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். பெண்கள் பல தளங்களிலும் தமது ஆற்றல்களையும் திறன்களையும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இது வடக்குக் கிழக்கில் தமிழ் மக்கள் வாழும் பகுதி எல்லாவற்றிலும் நடந்துள்ளது. யுத்தகாலத்தில் பெண்கள் ஏற்கனவே செய்யாத பல பங்குபாத்திரங்களை வகித்திருக்கின்றனர். இவ்வளவும் நடந்திருந்தாலும் இன்னமும் பல பெண்கள் வன்முறைக்கு உட்படுத்தப்படுபவர்களாகவும், இலகுவில் பாதிக்கப்படக் கூடியவர்களாகவும், நிவாரணங்களுக்காக அலைகின்றவர்களாகவும், ஏமாற்றப்படுபவர்களாகவும் இருக்கின்றனர்.
சுனாமிக்குப் பின்னரும், யுத்தத்துக்குப் பின்னரும் எத்தனையோ அபிவிருத்தித் திட்டங்கள் வடமாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கின்றன. பெண்களை இலக்காகக் கொண்ட பெண்களை ‘வலுப்படுத்தும்’ இந்த அபிவிருத்தித் திட்டங்களுக்காகப் பல கோடிக்காணக்கான நிதி செலவிடப்பட்டுள்ளன. சமத்துவத்துக்கான விழிப்புணர்வுகள், தலைமைத்துவப் பயிற்சிகள் என ஏராளமான நிதியும், மனிதவளமும் செலவழிக்கப்பட்டும் அங்குமிங்குமாக சில பெண்களே வல்லமைப்பட்டிருக்கின்றார்களே ஒழிய பெண்கள் உரிமைகள் சார்ந்த ஒரு நிலையான பாரிய மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை. சமூக கலாச்சார பண்பாடு, பொருளாதார, அரசியல்ரீதியாக பாதிப்புக்குள்ளாக்கப்பட்ட நிலையிலேயே இன்னமும் நிறையப் பெண்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். தனிநபர்களாகப் பெண்கள் அதிகமான சவால்களையும் வன்முறைகளையும் எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றனர். எனவே, பெண்கள் முழுமையாகத் தமது ஆளுமைகளை வெளிப்படுத்தி வல்லமை பெற்றவர்களாக வாழக்கூடிய மாற்றங்களை நோக்கி நகர்வதில் பல சவால்களும் தடைகளும் உள்ளன என்பதும் உறுதியாகின்றது.
இந்த வகையிலேயே வடக்கு மாகாணசபையின் சுகாதார சுதேச மருத்துவ சமூக சேவைகளும் புனர்வாழ்வும், நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் மற்றும் மகளீர் விவகார அமைச்சானது இந்தக் கலந்தாலோசனைச் செயற்பாட்டை முன்னெடுத்துள்ளது. பாதிப்புக்குள்ளாக்கப்பட்டவர்களாகவோ, இலகுவில் பாதிப்புக்குள்ளாக்கப்படக்கூடியவர்களாகவோ இல்லாம், தங்கிவாழும் தன்மையற்ற, உரிமைகள் உறுதிப்படுத்தப்பட்ட பெண்களாக வாழ்வதற்குத் தடையாகவுள்ள எங்களது சமூகவிழுமியங்கள், மனப்பாங்குகள், வழக்காறுகள் சார்ந்த சவால்கள், அரச, அரசசார்பற்ற அபிவிருத்தித்திட்டங்களின் அணுகுமுறைகளில் இருக்கக் கூடிய பிரச்சனைகள், சேவை இடைவெளிகள் போன்றவற்றை அடையாளப்படுத்துவதே இந்தக் கலந்தாலோசனையின் நோக்கமாக அமைந்தது.

ஐந்து மாவட்டங்களிலும் பாதிப்புக்குள்ளாக்கப்பட்ட அல்லது இலகுவில் பாதிப்புக்குள்ளாக்கப் படக்கூடிய நிலையிலுள்ள பெண்கள், அவர்களது வல்லமைப்படலுக்குத் தடையாக அல்லது சவாலாக உள்ள விடயங்கள் இந்தச்சவால்களைக்களைய சமூக மட்டத்தில், மாகாண மட்டத்தில் மற்றும் தேசியமட்டத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்பன அடையாளம் காணப்பட்டன.

வெற்வேறு மாவட்டங்களுக்கும் போரினால் ஏற்பட்ட தாக்கங்கள் சார்ந்து வேறுபாடுகளையும், சமூக கலாச்சார பண்பாடு, பொருளாதார ரீதியான மற்றும் வளங்கள் சார்ந்த வேறுபாடுகள் இருப்பினும் பாதிப்புக்குள்ளாக்கப்பட்ட அல்லது இலகுவில் பாதிப்புக்குள்ளாக்கப்படக்கூடிய நிலையிலுள்ள பெண்களின் வகைப்பாட்டிலோ அவர்களுக்குள்ள சவால்களிலோ பாரிய வேறுபாடுகள் இருக்கவில்லை.

இந்த அறிக்கையானது ஒரு முறைமைசார் ஆய்வின் தொகுப்பல்ல. இது பாதிப்புக்குள்ளாக்கப்பட்ட பெண்களும் அவர்களுடன் வேலை செய்யும் அரச, அரசசார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகளுமாக இணைந்து வளவாளர்களின் உதவியுடன் தயாரித்த கலந்தாலோசனை அறிக்கையாகும்.
2. பாதிப்புக்குள்ளாக்கப்பட்ட அல்லது இலகுவில் பாதிப்புக்கு உள்ளாக்கப்படக் கூடிய நிலையிலுள்ள பெண்கள்

• தனியாக குடும்பத்தலைமைத்துவத்தைத் தாங்கும் பெண்கள்

கணவன் இறந்த, கணவன் காணாமல் ஆக்கப்பட்ட, கணவன் கைது செய்யப்பட்டுத் தடுப்பிலோ, அல்லது சிறையிலோ உள்ள, கணவன் கைவிட்டுப்போன, நோயுற்ற நிலையிலுள்ள, திருமணமாகாத பெண்கள் (திருமணத்தால் சமூகம் வழங்கும் அந்தஸ்து இல்லாத பெண்கள்), தனித்து வாழும் பெண்கள்- தனித்து வாழும் வயோதிபப் பெண்கள்.

கணவன் வெளிநாட்டில் இருக்கும் பெண்கள் சிலரும் இந்த வகைப்பாட்டில் வருவர் எனவும் அபிப்பிராயங்கள் தெரிவிக்கப்பட்டன.
• வன்முறைக்குட்படுத்தப்பட்ட வன்முறைக்குட்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் பெண்கள்

குடும்பத்தில் ஆரம்பித்து, வெளியில் போக்குவரத்தில், வேலைத்தளங்களில் என வௌ;வேறு தளங்களிலும் உடல் உள பாலியல், பொருளாதார ரீதியில் என வௌ;வேறு வடிவங்களிலும் நிகழ்த்தப்படும் வன்முறைகளால் பாதிக்கப்பட்டு மற்றும் இந்த வன்முறைகள் நிகழக்கூடிய பாதுகாப்பற்ற நிலைமைகளில் உள்ள பெண்கள்.
• உடல் உளரீதியாக விசேட தேவையுள்ள பெண்கள்.

பிறப்பிலோ பின்னர் வேறு காரணங்களாலோ, யுத்தத்திலோ உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் பாதிப்புக்குள்ளாக்கப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கும் பெண்கள். இதில் உடல் அங்கங்கள் இழந்தோர், அங்கங்களின் செயற்பாடுகளில் குறையுள்ளோர் அல்லது செயற்பாடுகளை இழந்தோர், உடலுள் குண்டுகளின் பாகங்கள் உள்ளோர் போன்றோர் அடங்குவர். இவர்களில் பலர் சில விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டால் தாமாகவே சுயாதீனமாக வாழக் கூடியவர்கள். இன்னும் சிலர் விசேட ஏற்பாடுகளுடன் ஏனையோரின் பராமரிப்பு உதவிகள் தேவைப்படுவோர். இன்னும் சிலர் வாழ் நாள் முழுவதும் முழுமையான உதவியும் பராமரிப்பும் தேவைப்படுவோர்.
• முன்னாள் போராளிகள்

நேரடியாக போராளிகளாகவோ வேறு வகையில் பங்களித்தவர்களாகவோ இருந்தவர்கள். இவர்கள் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருக்கலாம் அல்லது புனர்வாழ்வு முகாம்களுக்கு அனுப்பப்பட்டோ சிறைத்தண்டனை அனுபவித்தோ திரும்பியவர்களாக இருக்கலாம். இன்னமும் கண்காணிப்பின் கீழ் வாழ்ந்து கொண்டிருப்பவர்களாகவும் இருக்கலாம்.
• பாதுகாப்பற்ற இளவயதுப் பெண்கள்

பெற்றோரை இழந்த சிறுமிகள், இளம் பெண்கள், இளவயதுக் கர்ப்பத்துக்குள்ளான பெண்கள்.
• பணிப்பெண்களாக வெளிநாடுகளுக்குச் செல்லும் பெண்கள்.
• இராணுவத்தால் கைப்பற்றி மீள வழங்கப்பட்ட காணிகளில் குடியேறும் பெண்கள்.
• திருமண அந்தஸ்து இல்லாத பெண்கள்.
போர் மற்றும் பல்வேறு காரணங்களால் இளவயதுத் திருமணத்துக்குட்பட்டவர்கள்.
கட்டாயத் திருமணத்துக்குள்ளானவர்கள், சட்டரீதியாகத் திருமணமாகாதவர்கள்.

குறிப்பு:- ஒரே பெண் மேற்கூறப்பட்ட ஒன்றுக்கு மேற்பட்ட வகைப்பாட்டுக்குள் வரக்கூடும். மேலும் பாதிக்கப்பட்ட அல்லது பாதிக்கப்படக்கூடிய நிலையிலிருந்தல் என்பது முழுமையாகப் போரால் மட்டும் நிகழ்த்ததல்ல. அதற்குப் பின்னரும் பெண்கள் வல்லமைப்பட முடியாதிருப்பதற்கு சமூக மனப்பாங்குகள், அரச தனியார் சேவை வழங்குனர்களால் அவரவருக்குரிய விடயங்கள் தனித்துவமாக கையாளப்படாமை, ஏதுவான சூழலின்மை என்பன காரணமாகின்றன.

3. அடையாளம் காணப்பட்ட பிரச்சனைகள் சவால்கள்
பாதிப்புக்குள்ளாக்கப்பட்ட அல்லது இலகுவில் பாதிப்புக்குள்ளாக்கப்படக்கூடிய நிலையிலுள்ள பெண்கள் எதிர்கொள்ளும் பிரதான பிரச்சினைகளும், அவர்களது வல்லமைப்படலுக்குத் தடையாக அல்லது சவாலாக உள்ள விடயங்களும் அடையாளம் காணப்பட்டன. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள அநேகமான பிரச்சனைகள் பொதுவாக வட மாகாணத்திலுள்ள பெண்கள் அனைவரதும் உரிமைகளுக்கும் சவாலாக இருக்கின்ற் போதிலும் அவர்களுக்குள்ள வேறு சாதகமான நிலைமைகள் காரணமாக அவர்களது பாதிக்கப்படும் தன்மையும் பாதிப்பும் குறைவாக உள்ளது.

3.1 பெண்கள் மீதான வன்முறை
குடும்ப வன்முறைகள், பாலியல் வன்முறைகள், பாலியல் சுரண்டல்கள், பாலியல் லஞ்சம், பாலியல் சேட்டைகள், தகாத உறவு, தற்கொலைக்குத் தூண்டுதல், தொலைபேசி, இன்ரநெட் ஊடான வன்முறைகள், அச்சுறுத்தல், களவு, கொலை என்பன பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் பிரதான வன்முறைகளாக அடையாளம் காணப்பட்டன.

அடையாளம் காணப்பட்ட சாவல்களுள் பெண்களின் உடல் உளம் சரி சுயமரியாதையை மோசமாகப் பாதிக்கும் விடயமாகவும் பெண்களது வல்லமைப்படலுக்குப் பிரதானமான சவாலாகவும் அவர்களுக்கெதிரான வன்முறைகள் அடையாளம் காணப்பட்டன.

அதிலும் போரால் பாதிக்கப்பட்ட பெண்கள் சமூக பொருளாதார அரசியல் ரீதியான மேம்பாட்டுக்குத் தடையாக அவர்கள் மீதான குடும்ப வன்முறைகள் ஐந்து மாவட்டங்களிலும் அடையாளப்படுத்தப்பட்டன.

மேலும், அதிகரித்துவரும் பெண்கள் சிறுமிகள் மீதான பாலியல் வன்முறைகள் தொழில் இடங்களிலான பாலியல் சுரண்டல்கள், பாலியல் லஞ்சம், போக்குவரத்தில் இடம்பெறும் பாலியல் சேட்டைகள், சிறுமிகள் மீதான தகாத உறவு, களவு கொலை சார்ந்த அச்சுறுத்தல்கள் போன்றனவும் குறிப்பிடப்பட்டன.

வன்முறைகள் காரணமாக உடல் உளப்பாதிப்புக்களுடன் பின்வரும் பாதிப்புக்கள் சுட்டிக்காட்டப்பட்டன.

வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்குச் சட்ட ரீதியான நீதி கிடைப்பதில் உள்ள தாமதங்கள், மற்றும் நீதி கிடைக்காமை – அதனால் அவர்கள் நீதி தேடி அலைபவரும் அவர்களது மேம்பாடு சார்ந்த கல்வி பொருளாதார நடவடிக்கைகள் குழம்புவரும் தமக்குரிய இடங்களை விட்டு வேறு இடங்களில் சென்று வாழ வேண்டியிருப்பதும்.
ழ வன்முறையாளர்கள் அடையாளம் காணப்பாட்டு சரியான தண்டனை வழங்கப்படாமையால் பெண்கள் மத்தியில் நிலவும் அச்சம் அவர்களது வளர்ச்சிக்குத் தடையாக இருத்தல். உதாரணமாகக் குடும்பத் தலைமைத்துவத்தைத் தனித்துத் தாங்கும் பெண்கள் தமதும் தமது பெண் பிள்ளைகளினதும் பாதுகாப்புக் கருதித் தூர இடங்களுக்கு வேலைக்குப் போகாதிருத்தல்.

இளவயதுத் திருமணம், பலதார மணம், மது இலகுவில் கிடைத்தலும் அதிக மதுபாவனையும், சட்டவிரோத மதுபாவனை விற்பனையும் – உற்பத்தியும், போதைப்பொருள் பாவனை – விற்பனை போன்றன வன்முறைகளைத் தூண்டக்கூடிய சில காரணிகளாக அடையாளப்படுத்தப்பட்டன.

3.2 பொருளாதார அழுத்தங்கள்
வள இழப்பு, இழப்புக்களுக்குச் சரியான இழப்பீடுகள் வழங்கப்படாமை, நிலையான போதுமான வருமானமின்மை, வாழ்வாதாரத்தில் ஈடுபட முடியாத குடும்பப் பராமரிப்புப் பொறுப்புக்கள், பொருளாதாரச்சுரண்டல்கள். தொழில் சுரண்டல் போன்றன பிரதானமான பொருளாதாரம் சார்ந்த சவால்களாக அடையாளம் காணப்பட்டன.

பாதிப்புக்குள்ளாக்கப்பட்ட அல்லது இலகுவில் பாதிப்புக்குள்ளாக்கப்படக் கூடிய நிலையிலுள்ள பெண்களை மேலும் பாதிப்புக்குள்ளாக்கும் ஒரு முக்கிய விடயமாகவும், அவர்களது மேம்பாட்டுக்குத் தடையாகவுள்ள ஒரு விடயமாகவும் பொருளாதாரப் பிரச்சனைகள் குறிப்பிடப்பட்டன.
இவர்கள் அநேகர் யுத்தத்தின் காரணமாக வருமானமீட்டும் அங்கத்தவர்களை, மூலதனங்களை, வளங்களை முழுமையாகவோ, பகுதியாகவோ இழந்தவர்கள். இந்த இழப்புகளுக்கான சரியான இழப்பீடுகள் இல்லாமலேயே போருக்குப் பின்னரான வாழ்வைக் கட்டியெழுப்ப வேண்டிய நிர்ப்பந்தத்திலுள்ளனர். அத்துடன் நாட்டில் வாழ்க்கைச் செலவும், அதிகரித்துச் செல்வதால் தமதும் தமது குடுத்பத்தினரதும் நாளாந்த வாழ்க்கைச் செலவுகளையே கொண்டு செல்ல முடியாதகவர்களாகவும் உள்ளனர். இவர்களது இழப்புக்களை ஈடு செய்யக் கூடிய சரியான நிவாரணங்கள் பெரும்பாலும் இன்னமும் வழங்கப்படவில்லை.
மேலும், இந்தப் பெண்கள் தமக்குத் தெரிந்த வாழ்வாதாரச் செயற்பாட்டை முன்னேற்றக் கூடியதான அல்லது புதிய நிலையான வாழ்வாதாரங்களைத் தொடங்கக் கூடியதாகப் பெரும்பாலான வாழ்வாதார அணுகுமுறைகள் இருப்பதில்லை. ஒருவரது குடும்பத்துக்கு மாத வருமானமாக எவ்வளவு தேவை என்பதைக் கணக்கிட்டு அதனைப் பெறக்கூடிய வகையில் வாழ்வாதாரத் திட்டங்கள் தயாரிக்கப்படுவதில்லை. அதனால் இந்தப் பெண்கள் வாழ்வாதாரத் திட்டங்களில் உள்வாங்கப்பட்டபோதும் போதுமான நிலையான வருமானமின்றியே காணப்படுகின்றனர்.

அத்துடன் பால்நிலை காரணமாகப் பெண்கள் மீது எதிர்பார்க்கப்படும் பாரம்பரிய பங்கு பாத்திரிங்களின் சுமையும் பெண்கள் நிலையான வருமானத்துக்குரிய வாழ்வாதாரச் செயற்பாடுகளைத் தெரிவு செய்வதில் சவாலாகின்றது. அதிலும் தனித்துக்குடும்பப் பொறுப்புக்களை வகிக்கும் பெண்களும், விசேட தேவையுள்ள அல்லது நோயுள்ள குடும்ப அங்கத்தவர்கள் உள்ள குடும்பங்களில் அதிக பராமரிப்பு வேலைகளைச் செய்ய வேண்டியுள்ள பெண்களுக்கும் இந்தப் பங்கு பாத்திரங்கள் அதீத சவால்களாகின்றன.
வருமானப் பற்றாக்குறை காரணமாகப் பெண்கள் தம்மை சுரண்டலுக்குட்படுத்தக் கூடிய சம்பளப்பாகுபாடு, தொழிலாளர் நலநிதியம் போன்ற உரிமைகளற்ற, கூடிய நேர உடலுழைப்பைச் சுரண்டும் தனியார் கடைகள், தொழிற்சாலைகள் போன்றவற்றிலும் வெளிநாட்டுப் பணிப்பெண் வேலைகளையும் தெரிவு செய்கின்றனர்.

மேற்கூறப்பட்ட சுரண்டலின் இன்னுமொரு மோசமான வடிவமாக கிராமியப் பெண்களைக் குறி வைத்து நடாத்தப்படும் இலாப நோக்கிலான நிதிநிறுவனங்களின் நுண்கடன் திட்டங்களும் நியாயமற்ற வட்டிகளும் குறிப்பிடப்பட்டன. அநேகமாக வாழ்வாதாரத்துக்கென வழங்கப்படுவதாகக் கூறப்படும் இந்த கடன் திட்டங்கள் உண்மையில் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் தொடர் அனுசரனை எதையும் கொண்டிருப்பதில்லை. ஏற்கனவே பாதிப்புக்குள்ளாக்கப்பட்ட பெண்களை மேலும் பாதிப்புக்குள்ளாக்கும் வகையில் அவர்களிடம் மீதமுள்ள வளங்களையும் வட்டியாக அறவிடுவதுடன் அவர்களை மேலும் கடனாளிகளாகவும் வலுவற்றவர்களாகவும் ஆக்குகின்றன.

3.3 பால்நிலை சமத்துவமின்மை
பெண்கள் மீதான முழுச்சுமை, பாரபட்சமான சமூக விழுமியங்கள் நியமங்கள், தேசவழமை, சீதனம் போன்றன பால்நிலை சமத்துவமின்மையின் காரணமான பிரதானமான சவால்களாக அடையாளம் காணப்பட்டன.

எமது சமூகங்கள் கொண்டிருக்கும் பால்நிலைப்பாரபட்சங்களும் பெண்களது குறிப்பாக பாதிப்புக்குள்ளான பெண்களது முன்னேற்றத்துக்கு பாரிய சவாலாக அடையாளம் காணப்பட்டன.

பெண்கள் எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த வேலைகளில் இருந்தாலும் வாழ்வாதாரங்களில் ஈடுபட்டாலும் எமது சமூக நிலைப்பாடு காரணமாக வீடு குடும்பப்பராமரிப்பு சார்ந்த ஊதியற்ற வேலை அவர்களது கடமையாகவே பார்க்கப்படுகின்றது. இந்த இரட்டைச் சுமைகளுடன் போரால் பாதிப்புக்குள்ளாக்கப்பட்ட பெண்களையும் கிராமியப் பெண்களையும் இலக்கு வைத்து நடாத்தப்படும் சமூக மட்ட அணிதிரட்டல்கள், குழுக்கள், கூட்டங்கள் போன்றவற்றில் பங்கு கொள்ளல் என்பது பெண்களுக்கு முழுச்சுமையாக அமைக்கின்றது. இதனால் இவர்களது முழுமையான சுயாதீனமான முன்னேற்றத்துக்காக அவர்கள் செலவிடக்கூடிய நேரமும், உழைப்பும் வருமானமும் இழக்கப்படுகின்றன.

பெண்களை ஒட்டுமொத்தமாக இரண்டாம் பட்சமாகவும், பாகுபாட்டுடனும் நடாத்தும் சமூக விழுமியங்களுடன் அவளுடைய அந்தஸ்தை ஒரு ஆணுடன் இணைத்தே பார்க்கும் நிலைப்பாடானது பெண்களுக்குள்ளேயே ஏற்றத்தாழ்வை ஏற்படுத்துகின்றது. கணவன் உள்ள பெண்களை விட கணவன் இறந்த கணவன் விட்டுவிட்டுப் போன, திருமணமேயாகாத என்ற அடிப்படையில் அவர்கள் பாரபட்சப்படுத்த்பபடுவதுடன் அவர்களுக்கான சமூக அங்கீகாரமும் பல சந்தர்ப்பங்களில் மறுக்கப்படுகின்றன. கலாசார சமய ரீதியாகப்பல சந்தர்ப்பங்களில் இவர்கள் ஒதுக்கப்படுகின்றார்கள். அவர்களது கருத்துக்களுக்கும், தீர்மானங்களுக்கும் முக்கியத்துவமளிக்கப்படுவதில்லை.

இதே அடிப்படையிலேயே வடமாகாணத்துக்குரிய வழக்காறுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட தேசவழமைச் சட்டமும் பெண்களது சொத்துரிமையைப் பாதிக்கின்றது. இது திருமணமான பெண் கணவனது அனுமதியின்றித் தனது சொத்துக்களை விற்கவோ கையாளவோ முடியாத நிலையைத் தோற்றுவித்துள்ளது. இத்தகைய நேரடியான பெண்கள் உரிமை மீறலானது இன்றைய யதார்த்த நிலையில் பெண்களுக்கு பல்வேறு வகையான சிக்கல்களைத் தோற்றுவித்துள்ளது. கணவன் இறந்ததை உறுதிப்படுத்த முடியாத பெண்கள், கணவன் காணாமல் போன பெண்கள் தமது சொத்துக்களை விற்கவோ, அதனை பிணையாக வைத்து கடன் எடுக்கவோ முடியாத நிலை காணப்படுகின்றது.

இத்தகைய வழக்காறுகளில் ஒன்றாகத்தான் சீதன நடைமுறை உள்ளது. இது குடும்ப வன்முறைகளுக்கான ஒரு முக்கிய காரணியாகவும், வயதாகியும் திருமணமாகாது பல பெண்கள் தனித்து வாழ்வதற்கும் காரணியாகின்றது.

3.4 அடிப்படைத்தேவைகள் பூர்த்தியாகாமை
பெண்களினதும் அவர்களது குடும்பத்தவர்களதும் அடிப்படைத்தேவைகள் பூர்த்தியாகாததும் அவர்களை இலகுவில் பாதிப்புக்குள்ளாக்கக் கூடியவர்களாக ஆக்குகின்றது. பாதுகாப்பான வீடு, மலசலகூட வசதிகளின்மை, பாதுகாப்பான தூரத்துக்குள் நீர் வசதியின்மை போன்றன பெண்களது பாதுகாப்புக்கு சவாலாக அமைகின்றன. குடும்பத்துக்கான போதுமான உணவு கிடைக்காத சந்தர்பங்களில் பெண்கள் பாதிப்புக்குள்ளாகக்கூடிய விடயங்களில் ஈடுபடவும் தங்கி வாழவும் வேண்டியேற்படுகின்றது. விசேட தேவையுள்ள பெண்கள் இந்த அடிப்படைத் தேவைகள் சேவைகள் சரியாகக் கிடைக்காதவிடத்து வேரொருவரைத் தங்கி வாழ நேர்கின்றது.

3.5 வாழ்க்கைத் தேர்ச்சியறிவு போதாமை.
பாலியல் கல்வியின்மை மற்றும் ஈர்ப்பு, காதல், இணைந்து வாழ்தல், திருமணம் போன்றவற்றைப் பற்றிச் சரியாகப் புரிந்து கொள்ளாமை பெண்கள் குறிப்பாக இளம் பெண்கள் சிறிது காலமே அறிமுகமான யாரையாவது காதல் என்று நினைத்து உறவு கொள்வதும் அவர் முதலே திருமணமானவரா? இல்லையா? என்பதை அறியாதிருப்பதும், திருமணச்சட்டங்கள், குடும்ப வன்முறை சார்ந்த சட்டங்கள் பற்றிய அறிவு இல்லாதிருப்பதும் அவர்களைப் பாதிப்புக்குள்ளாக்குகின்றன.

3.6 அரச கொள்கைகள்- சேவை வழக்குவதில் உள்ள இடைவெளிகள்
ழ பால் நிலையை விளங்கிக் கொள்ளாமை, தேவையான இடங்களில் பெண் அலுவலகர்கள், இல்லாமை.

அரச திட்டங்கள் சேவைகள் பெண்களினது பிரச்சனைகளைச் சரியாகக் கருத்திற் கொண்டிருப்பதில்லை. வீட்டுத் திட்டங்கள் பாதிப்புக்குள்ளான பெண்களுக்கேற்றவை இல்லை. தனித்து குடும்பத்தை நடாத்தும் பெண்ணுக்கும் கணவன் மனைவியாக இணைந்து குடும்பத்தை நடாத்துவோருக்கும் பகுதி நிதியுதவியுடனான வீட்டுத் திட்டம் வழங்கும்போது பாதிப்புக்குள்ளான பெண்ணின் பல்சுமை கருத்திற்கெடுக்கப்படுவதில்லை. பெண்கள் உதவி நாடிப் போகும் இடங்கள் சேவைகள் பெண்களுக்கு நட்புரீதியானதாக இல்லை. அரச அலுவலகங்களில் பாதுகாப்பாகத் தமது பிரச்சனைகளைக் கதைக்கக் கூடிய இடங்கள் இன்மை. தமிழ்மொழி தெரிந்த பெண் பொலிசார் இன்மை. பெண் உளவள ஆலோசகர்கள் இன்மை போன்றன.

அரசு கொள்கை சட்ட – சட்ட நடைமுறை சார் சாவால்கள்
வன்முறைகளுக்குள்ளாக்கப்பட்ட பெண்களுக்கான நீதி கிடைப்பதில் பொலிஸ் நடவடிக்கைகளில் தொடங்கி நீதியான தீர்ப்புப் பெறுவது வரையான சவால்களையும் பாலதாமதங்கள் பற்றியும் குறிப்பிடப்பட்டன.
ழ அத்துடன் அரச கொள்கைகள் சார்ந்த பெண்களின் சொத்துரிமை மீறல் பற்றியும் பேசப்பட்டது. அதாவது, ஒப்பந்தக் காணிகள் ஆண்களின் பெயரில் வழங்கப்பட்டு அதன் வழியுரிமை ஆண்வழியாக நியமப்படுத்தப்பட்டிருப்பதன் காரணமான பாரபட்சங்கள், மற்றும் இராணுவம் கைப்பற்றி வைத்துள்ள பெண்களின் காணிகள் பற்றியும் குறிப்பிடப்பட்டது.

உடல் – உள் ரீதியான தேவைகள் உள்ளவர்களுக்கான சேவைகளிலுள்ள இடைவெளி

விசேட தேவையுடையோரின் தேவைகள் ஒரேவிதமானவையல்ல, வௌ;வேறு பட்ட தேவையுடையவர்களும் தமது வாழ்வை முழுமையாக அல்லது இயலுமானவரை மற்றவர்களில் தங்கி வாழாது வாழ்வதற்குத் தேவையான சேவைகள் மேற்கட்டுமான வசதிகள் சார்ந்து பல இடைவெளிகள் அடையாளம் காணப்பட்டன. உதாரணமாக விசேட தேவையுடையோர் பிரதானமான உத்தியோகத்தர்களை அணுகும் வகையில் அலுவலகங்கள் அமைப்பப்படாமை, வௌ;வேறு விசேட தேவையுடையோர் போக்குவரத்து செய்யக்கூடியதாக வீதிகள் போக்குவரத்துத் துறையில் ஏற்பாடுகள் இன்மை, செவிப்புலனற்றோர், விழிப்புலனற்றோர் அகவலைப் பெறவும் தொடர் பாடம் கூடிய வசதிகள் இன்மை, நட்பு ரீதியற்ற சேவையாளர்கள், நடமாட முடியாத நிலையிள்ள பெண்கள் அணுகாத சேவைகள் போன்றன உதாரணங்களாகக் காட்டப்பட்டன.

4. சமூக, கலாசார, பொருளாதார அரசியல் ரீதியாகப் பெண்கள் வல்லமைப்படச் செய்யவேண்டியவை

4.1 நிலை பேறான வாழ்வாதாரம் – தங்கி வாழும் தன்மையை மாற்றுதல்
பெண்களும் அர்வகளது குடும்பத்தவர்களும் அடிப்படைத் தேவைகளைப்பூர்த்தி செய்து வாழக்கூடியதான பொருளாதார நிறைவைக் காண்பதற்குரிய, போதிய வருவாயைத் தரக்கூடிய பெண்களை மேலும் பாதிப்புக்குள்ளாக்காத, சுரண்டாத வாழ்வாதாரங்களை அடையாளம் காண், அறிமுகப்படுத்தல், மேம்படுத்தல், மற்றும் பெண்களது வாழ்வாதார செயற்பாடுகளுக்கும் தொழிலுரிமைகளுக்கும் பொருளாதார மேம்பாட்டுக்கும் சவாலாக உள்ள ஏனைய விடயங்களில் மாற்றங்கள் ஏற்படுத்தல், பெண்களது வாழ்வாதார செயற்பாடுகளுக்கு ஊக்கமாளிக்கக்கூடிய ஏதுவான சூழ் கட்டமைப்பு மாற்றங்களை உருவாக்குதல்.

பெண்களைப் பொருளாதார ரீதியிலும் ஏனைய தளங்களிலும் வல்லமைப்படுத்தக்கூடிய நிலையான, போதிய வருவாய் தரக்கூடிய நீண்ட காலதிட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்தல். உதாரணமாக கூட்டான சிறுகைத்தொழில் நிலையங்கள், கூட்டுப்பண்ணைகள் உருவாக்கப்படல். பெண்களே பல்வேறு பங்கு பாத்திரங்களை வகிக்கக் கூடியதான (மூலதனம் தேடுவோர், உற்பத்தியாளர், சந்தைப்படுத்துனர், சேமிப்பாளர் போன்ற பாத்திரங்கள்) வாழ்வாதாரக் கூட்டமைப்புக்களை உருவாக்கல் இவற்றின் மீதான சமூக பொறுப்புடைய பங்களிப்பை உறுதிப்படுத்தல்.

பெண்களின் கூட்டு பொருளாதார நடவடிக்கைகளுக்காக ஏற்கனவே அரச, அரச சார்பற்ற நிறுவனங்களால் அமைக்கப்பட்டு கைவிடப்பட்டுள்ள கட்டடங்களையும், பொருட்களையும் வட மாகாணசபை கவனத்தில் எடுத்து மீளமைத்தல், மீளச் செயற்படுதலை உறுதிப்படுத்தல்.

பெண்கள் வாழ்வாதாரச் செயற்பாடுகளிலிருந்து இடைவிலகுவதற்கான காரணங்களை அடையாளங் கண்டு அவற்றை நீக்குதல், தொழில்நுட்ப அறிவையும் நீண்ட காலத் தொடர் அனுசரணையும் வழங்கல்.

பெண்களை சுரண்டாத பாதிக்காத சந்தைப்படுத்தல் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல், உள்ளுர் சந்தைகள், பெண்கள் சந்தைகள், ஒருங்கிணைந்த சந்தை வலையமைப்புக்கள், விவசாய விளைபொருட்களுக்கான விலை நிர்ணயம் (நெல், மரக்கறி) போன்றவை
குறைந்தளவு மூலதனத்துடன் மாவட்டத்தில் காணப்படும் உள்ளீடுகளைப் பயன்படுத்தி உருவாக்கக்கூடிய உற்பத்திகளை ஊக்குவித்தல், சந்தைவாய்ப்பு ஏற்படுத்தல்.

இறக்குமதியாகும் பொருட்களுக்கு மாற்றாகப் பெண்களின் உற்பத்திப் பொருட்களின் உள்ளுர்ப் பயன்பாட்டை ஊக்குவித்தல்.
வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கும் தொழில் நிறுவனங்களுக்கான அனுபவச் சுற்றுலா ஏற்பாடு செய்தல்.

பெண் போராளிகளுக்கு என்ன ஆற்றல், திறன் உள்ளது என்பதை அடையாளப்படுத்தி (சிறுவயதிலிருந்தும், பின்னர் போராளிகளாக இருந்த பொழுதும் பெற்ற திறன்கள்) அதனை வலுப்படுத்தி அவரவருக்குரிய நிலையான வாழ்வாதாரத்தைப் பெற வகை செய்தல்.

விசேட தேவையுள்ளோரின் ஆற்றல் திறன் அடையாளங் காணப்பட்டு அவரவரது வேலைகளையும் உள்வாங்கக் கூடியதாக வடிவமைக்கப்பட்ட கூட்டு அல்லது தனியான வாழ்வாதார செயற்பாடுகளை அறிமுகப்படுத்தல்.

சுய உதவிக் குழுக்களை அமைத்து சேமிப்புத் திட்டங்கள், சுழற்சி முறையிலான கடன் திட்டங்களை வலுப்படுத்தல்.

பெண்களுக்கான நிதி மூலங்கள் உருவாக்கப்படல் வேண்டும்.

திறன்கள் இருந்தும் முதலீடு செய்வதற்கு போதிய பணமில்லாத ஊக்கமாக உள்ள தனிநபர், குழுக்களை அடையாளம் கண்டு மானியமாகவோ, குறைந்தளவிலான வட்டி வீதத்துடனனோ நிதி பெற வழி செய்தல்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழ்வாதாரத்தை ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் வழங்குவதிலுள்ள தடையைக் கவனத்தில் எடுத்தல். தேவைக்கேற்ற வகையில் மாற்றுதல்.

பெண்களது பால்நிலை சார் பங்கு பாத்திரங்கள் காரணமாக முழுநேரத் தொழிலில் ஈடுபட முடியாத பெண்களுக்குப் பகுதிநேர வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்தல், வழங்குதல்.

குழந்தைகளுள்ள பெண்கள் வாழ்வாதார செயற்பாடுகளிலும் தொழில்களிலும் ஈடுபடுவதை இலகுபடுத்தவும் அவர்கள் முழுமனதுடன் தமது ஆற்றல்களை வெளிப்படுத்தவும் ஏதுவாகப் பாதுகாப்பான குழந்தைப் பாராமரிப்பு நிலையங்களை (சமூகமட்டங்களிலும், அரச, தனியார் திணைக்களங்களிலும் ஏற்படுத்தல்)

தொகுப்பாளர்களின் கருத்து:- வாழ்வாதாரத்திட்டங்களை அமுல்படுத்தும் போது பெண்களுக்கு முழுமையான வருமானமாக, குறை நிரப்பு வருமானமாக தேவை என்பதைத் தெளிவாக அறிதல். அறிமுகப்படுத்தும் திட்டம் அத்தகைய வருமானத்தை தரக்கூடிய திட்டம் என்பதை உறுதிப்படுத்தல். அந்த வாழ்வாதாரத்திட்டத்தில் ஈடுபடுவதன் மூலம் பெண்ணினது தங்கி வாழும் தன்மை குறைக்கப்படுவதையும், குடும்பத்தவராலோ அல்லது வாழ்வாதார செயற்பாட்டில் சம்பந்தப்பட்டவர்களாலோ வன்முறைகளுக்குட்படுத்தப்படாத நிலைமையையும் உறுதிப்படுத்தல்.

தொடரும்…

SHARE