சந்திரனுக்கு செல்லும் உலகின் முதல் சுற்றுலாப் பயணி

80

ஜப்பானைச் சேர்ந்த மில்லியனர் ஒருவரை நிலவிற்கு முதன் முறையாக அழைத்துச் செல்ல இருப்பதாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஸ்பேஸ் எக்ஸ் எனும் தனியார் நிறுவனம் முதன் முறையாக சந்திரனுக்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்ல இருப்பதாக அறிவித்தது. இதற்காக ‘Big Falcon’ எனும் மிகப் பெரிய ராக்கெட்டை அந்நிறுவனம் தயாரிக்கிறது.

இந்நிலையில், ’Big Falcon Heavy’ எனும் ராக்கெட் மூலமாக மனிதர் ஒருவரை சந்திரனுக்கு அனுப்ப உள்ளதாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமான அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது.

அந்நபர் ஜப்பனைச் சேர்ந்த மில்லியனரான யுசாகு மேசாவா ஆவார். இவர் ஜப்பான் நாட்டில் மிகப் பெரிய ஒன்லைன் வர்த்தக நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அத்துடன் பல்வேறு தொழில்களையும் செய்து வருகிறார்.

ஸ்பேஸ் எக்ஸின் இந்த அறிவிப்பால் யுசாகு மேசாவா, உலகிலேயே முதல் முறையாக சந்திரனுக்கு சுற்றுலா செல்லும் நபர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இவர் வரும் 2023ஆம் ஆண்டு சந்திரனுக்கு அனுப்பப்பட உள்ளார். இந்நிலையில், யுசாகு மேசாவா ‘Dear Moon’ எனும் இணைய பக்கத்தை தொடங்கியுள்ளார். அதில் சில அதிரடி திட்டங்களையும், சந்திரனுக்கு பயணம் செய்வது குறித்தும் தகவல்களை வெளியிடுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

SHARE