மட்டக்களப்பில் உடைக்கப்பட்டுள்ள 11 இற்கும் மேற்பட்ட சைவ ஆலயங்கள்! வியாளேந்திரன்

26

நல்லாட்சி அரசாங்கம் ஏற்படுத்தப்பட்ட மூன்று ஆண்டுகளில் மட்டக்களப்பில் 11 இற்கும் மேற்பட்ட இந்து ஆலயங்கள் உடைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஆரையம்பதியில் அமைந்துள்ள நரசிம்மர் ஆலயத்தில் விக்கிரகங்கள் விஷமிகளால் சேதமாக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் குறித்த இடத்திற்கு விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர் இது தொடர்பில் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியுடன் கலந்துரையாடியுள்ளார்.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறித்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

நல்லாட்சி ஏற்படுத்தப்பட்டு மூன்று ஆண்டுகளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 11 இற்கும் மேற்பட்ட சைவ ஆலயங்கள் உடைக்கப்பட்டுள்ளன. மற்றைய சமூகங்களுடன் இணைந்து காணப்படும் எல்லை சார்ந்த பகுதியிலேயே அதிகளவான ஆலயங்கள் உடைக்கப்பட்டுள்ளன.

ஆலயத்திற்குள் அத்துமீறி வந்து நாசகாரிகள் இவ்வாறான மோசமான செயலை செய்துள்ளனர். பொலிஸார் உடனடியாக இது தொடர்பில் கூடுதல் கவனத்தினை செலுத்த வேண்டும்.

இந்த விடயத்தில் பொலிஸார் சரியாக செயற்பட வேண்டும். குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.

இந்த நாட்டில் நல்லிணக்கம் என்று பேசிக்கொண்டு அதனை குழப்பும் வகையில் சிலர் செயற்பட்டு வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.

 

SHARE