எங்கள் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன வேறு, ஆர். ஏ. சிறிசேன என்ற வேட்பாளர் வேறு:-

191

 

மோசடிகாரர்களின் திட்டமிட்ட சதிக்கு பலியாக வேண்டாம் என்கிறார் மனோ கணேசன்:-

22 (1)

எங்கள் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன வேறு, ஆர். ஏ. சிறிசேன என்ற வேட்பாளர் வேறு:-

எங்கள் பொது எதிரணியின் சின்னம், அன்னப்பறவை சின்னம். எங்கள் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன போட்டியிடும் சின்னம், அன்னப்பறவை சின்னம். இதை நாடு முழுக்க வாழும் தமிழ் மக்கள் மனதில் கொண்டு வாக்களிக்க வேண்டும்.

ஆர். ஏ. சிறிசேன என்ற ஒரு வேட்பாளரை தேடிப்பிடித்து, அவரை போட்டியிட வைத்து, அவருக்கு மைத்திரிபாலவை போல் ஆடை உடுத்தி, மூக்கு கண்ணாடி அணிவித்து,  பவுடர் பூசி, அலங்கரித்து, படம் பிடித்து, அந்த படத்தை தமிழ் ஊடகங்களில் விளம்பரமாக போட்டு,  அப்பாவி தமிழ் மக்களை குறி வைத்து ஏமாற்றும் ஒரு தில்லாலங்கடி வேலையை மகிந்த  அரசின் முகவர்கள் சிலர் செய்கிறார்கள் என கட்சி ஊடக செயலகம் மூலம் விடுத்துள்ள விசேட செய்தி அறிவித்தலில் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இச்செய்தி அறிவித்தலில் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,

இந்த ஆர். ஏ. சிறிசேன என்ற வேட்பாளரின் சின்னம், கொடி சின்னமாகும். எங்கள் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் சின்னம், அன்னப்பறவை சின்னமாகும். ஊடகங்களில் விளம்பரம் செய்து மக்களை குழப்ப முயலும் அரசாங்கம் இன்னொன்றையும் செய்கிறது. மாதிரி வாக்குசீட்டு ஒன்றை அச்சடித்து தமிழ் மக்கள் மத்தியில் விநியோகம் செய்துள்ளது. இந்த மாதிரி வாக்குசீட்டில், எங்கள் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் சின்னமாக, கொடி  சின்னம் காட்டப்பட்டுள்ளது. இது திட்டமிட்டு மக்களை குழப்பும் ஒரு வெட்கங்கெட்ட மோசடி நடவடிக்கையாகும்.

இத்தகையை வாக்குசீட்டு குறிப்பாக வட மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலும், மத்திய, சப்ரகமுவ மாகாணங்களிலும் தமிழ் மக்கள் வாழும்  பகுதிகளில் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக எனது கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. தோல்வியின் விளிம்பில் நின்றுக்கொண்டு மகிந்த ராஜபக்ச அணி செய்யும் இந்த மோசடி வேலையை தமிழ் மக்கள் கவனத்தில் எடுக்க வேண்டும்.

உண்மையான வாக்குசீட்டில், எமது பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் பெயர் தமிழ், சிங்கள மொழிகளில் குறிப்பிடப்பட்டிருக்கும். அவரது பெயருக்கு இடதுபுறம் அவரது சின்னமான, அன்னப்பறவை அச்சிடப்பட்டிருக்கும். ஒட்டு மொத்த பத்தொன்பது வேட்பாளர்களின் பெயர் வரிசையில், எங்கள் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் பெயர், பத்தாவதாக இடம்பெற்றுள்ளது.

இவை பற்றிய இந்த உண்மை தகவல்களை விஷயம் தெரிந்த ஒவ்வொரு தமிழரும் தங்கள் உறவினர்களுக்கு, நண்பர்களுக்கு, ஊரவர்களுக்கு நேரடியாகவோ, தொலைபேசி மூமாகவோ எடுத்துகூறி தெளிவு படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

SHARE