கிணறுகள் அமைப்பதற்கும், புனரமைப்பதற்கும் 103 மில்லியன் ரூபா நிதி தேவை

39

கிளிநொச்சி மாவட்டத்தில் 259 புதிய விவசாய கிணறுகளை அமைப்பதற்கும், 202 விவசாய கிணறுகளை புனரமைப்பதற்கும் 103 மில்லியன் ரூபா நிதி தேவைப்படுவதாக மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் வே.ஆயகுலன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் விவசாய செய்கைகளை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதும் பல்வேறு தேவைப்பாடுகள் காணப்படுகின்றன.

குறிப்பாக புதிய விவசாய கிணறுகள், கைவிடப்பட்ட மற்றும் சேதமடைந்த விவசாய கிணறுகளை புனரமைத்தல் போன்ற தேவைகள் உள்ளன.

இது தொடர்பில் விவசாயிகளால் தொடர்ச்சியாக கோரிக்கைகள் முன்வைக்கப்படு வருகின்றதாக தெரியவருகிறது.

இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர்,

கிளிநொச்சி மாவட்டத்தில் 259 வரையான விவசாய கிணறுகளின் தேவைப்பாடுகள் காணப்படுகின்றன. இதற்கான மதிப்பீடாக 77 மில்லியன் ரூபா தேவைப்படுகின்றது.

இதேபோன்று 202 வரையான விவசாய கிணறுகளை புனரமைத்து கொடுக்க வேண்டிய தேவையும் காணப்படுகின்றன. இதற்காக 26 மில்லியன் ரூபா நிதி தேவையென மதிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு புதிய விவசாய கிணறுகளை அமைப்பதற்கும் சேதமடைந்த மற்றும் கைவிடப்பட்ட கிணறுகளை புனரமைப்பதற்கும் 103 மில்லியன் ரூபா நிதி தேவையென மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

SHARE