வவுனியாவில் திடீர் என நடத்தப்படும் புகைப்பரிசோதனை!

15

வவுனியாவில் அண்மைய சில நாட்களாக மோட்டார் சைக்கிளில் செல்லுபவர்களிடம் போக்குவரத்துப் பொலிஸார் புகைப் பரிசோதனை பத்திரத்தை கோரிவருவதுடன், அதனைக் காண்பிக்கத்தவறினால் உடனடியாக தண்டப்பணம் 500 ரூபா அறவிடப்பட்டுள்ளது.

வவுனியாவில் – செட்டிகுளம் பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் பயணித்தவரிடம் மோட்டார் சைக்கிளுக்கு மேற்கொள்ளப்பட்ட புகைப்பரிசோதனை பத்திரத்தை காண்பிக்குமாறு போக்குவரத்துப் பொலிஸார் கோரியுள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் செல்பவர் தமது சாரதி அனுமதிப்பத்திரம், வாகன வரி அனுமதிப்பத்திரம், காப்புறுதிப்பத்திரம் என்பனவற்றையே தம்வசம் எடுத்துச் செல்கின்றார்.

இதனையே பலர் நடைமுறையாக மேற்கொண்டும் வருகின்றனர். தற்போது பொலிஸார் புதிய நடைமுறையினைப் பின்பற்றி வருகின்றதால் பல பிரச்சினைகளுக்கு பொதுமக்கள் முகம் கொடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் பிரதேச செயலகத்தில் பெற்றுக்கொள்ளப்படும் வாகன வரி அனுமதிப்பத்திரத்திற்கு புகை பரிசோதனை பத்திரம் வழங்கப்பட்ட பின்னரே வரி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் பொலிஸார் இவ்வாறு புதிய நடைமுறையினை மேற்கொண்டு வருவதாகவும் இதனால் மோட்டார் சைக்கிள் செலுத்தும் பெண்களே அதிகம் பாதிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு புகைப்பரிசோதனை பத்திரத்தை பொதுமக்கள் காண்பிக்கவேண்டும் என்று பொலிஸார் முன்னறிவிப்புக்கள் எதனையும் விடுக்கவில்லை.

அதற்கான கால அவகாசம் எதனையும் வழங்கவில்லை. மோட்டார் சைக்கிளில் செல்பவர்களை இடை மறித்து புகைப்பரிசோதனை சிட்டையைக் கோரிவருவதால் பொதுமக்களுக்கு அசௌகரியங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் குறித்த தண்டம் அறவிடப்படுவதால் தமக்கு பல பாதிப்புக்கள் ஏற்படுகின்றதாகவும் பொதுமக்கள் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளனர்.

SHARE