வீட்டிற்குள் நுழைந்தது முதலை

44

வவுனியா பூந்தோட்டம் பகுதியில் நேற்று இரவு வீட்டிற்குள் முதலை ஒன்று புகுந்துள்ளது. 

இதையடுத்து பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதுடன் வனஜீவராசிகள் அதிகாரிகள் வரவில் தாமதம் ஏற்பட்டுள்ளது இதையடுத்து இன்று காலை முதலையை அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், நேற்று இரவு 8மணியளவில் பூந்தோட்டம் இந்து மயானத்திற்கு அருகிலுள்ள வீட்டு வளவு ஒன்றிற்குள் பூந்தோட்டம் குளத்திலிருந்த முதலை ஒன்று உணவு, தண்ணீர் தேடிச் சென்று ஒழிந்து கொண்டுள்ளது.

வீட்டு நாயின் சத்தம் கேட்டு வீட்டின் உரிமையாளர் வெளியே சென்று பார்வையிட்டபோது முதலை ஒழிந்து நின்றது தெரியவந்துள்ளது. இதையடுத்து அயலவர்களின் உதவியுடன் முதலையை கயிற்றினால் கட்டி வெளியே செல்லாதவகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு மகாறம்பைக்குளம் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இரவு பொலிசார் சென்று பார்வையிட்டுள்ளதுடன் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கும் தகவல் வழங்கியுள்ளனர். இன்று காலை அவ்விடத்திற்குச் சென்று முதலையை அங்கிருந்து எடுத்துச் செல்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி நிலை காரணமாக குளத்திலுள்ள முதலைகள் உணவிற்கு தண்ணீருக்கு மக்கள் குடியிருப்புக்களை நோக்கிச் செல்கின்றன.எனவே இது தொடர்பில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு பொதுமக்களுக்கு பொலிசார் அறிவுறுத்தல் வழங்கி வருகின்றனர்.

SHARE