முஸ்லிம் இளைஞரோடு ஏன் பழகினாய்”- இளம் பெண்ணை அடித்து உதைத்த போலீஸ்!

64

”முஸ்லிம் இளைஞரோடு ஏன் பழகினாய்”- இளம் பெண்ணை அடித்து உதைத்த போலீஸ்!

இளம் பெண் அடிக்கும் பெண் காவலர்
“முஸ்லிம் இளைஞரோடு ஏன் பழகினாய்” என்று கேட்டு இளம் பெண் ஒருவரை மீரட் போலீஸார் தலையில் அடித்து உதைத்து இழுத்துச் செல்லும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

உத்தர பிரதேசம் மீரட் நகர போலீஸார் ஒரு பெண்ணை அடித்து இழுத்துச் செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஒரு பெண்ணை, மகளிர் காவலர்  உள்பட 3 போலீஸார் அடித்து உதைத்து ஜீப்பில் ஏற்றிச் செல்கின்றனர். அந்தப் பெண்ணிடம் நீ இந்துவாக இருந்துகொண்டு ஒரு முஸ்லிம் இளைஞரோடு ஏன் பழகுகிறாய், நீ பழகுவதற்கு இந்து இளைஞர் இல்லையா என்று ஆண் போலீஸார் கேட்டு அந்த  பெண்ணைத் தாக்குகின்றனர். மேலும், பெண் போலீஸார் ஒருவரும் அந்தப் பெண்ணைக் கன்னத்தில் அறைந்த காட்சியும் பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்துள்ளது. மீரட் மருத்துவக் கல்லூரி அருகே இந்தப் பெண்ணும், முஸ்லிம் இளைஞர் ஒருவரும் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது இதைப் பார்த்த வி.எச்.பி அமைப்பினர் இருவரையும் தாக்கி, போலீஸுக்குத் தகவல் அளித்தனர். போலீஸார் அங்கு இருவரையும் தனித்தனி வாகனங்களில் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் விவாதப்பொருளானது. இதனைத்தொடர்ந்து நெட்டிசன்கள் உத்தரப் பிரதேச போலீஸாருக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட தலைமைக் காவலர் சலேக் சந்த், கான்ஸ்டபிள் நீது சிங், பெண் போலீஸ் பிரியங்கா ஆகியோரை சஸ்பெண்ட் செய்துள்ளதாக உ.பி.போலீஸார் தங்களின் ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளனர்.

SHARE