மட்டக்களப்பில் 37 பெண்கள் தற்கொலை

30

மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த ஆண்டு நுண்கடன் காரணமாக 37 பெண்கள் தற்கொலை செய்துள்ளதாக மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் திருமதி மனோகர் தெரிவித்தார்.

சர்வதேச சிறுவர் தின நிகழ்வு ஏறாவூர்ப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சி.நடராஜா தலைமையில், நேற்று மாலை முறக்கொட்டாஞ்சேனையில் நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“மட்டக்களப்பு மாவட்டத்தில் நுண்கடனின் தாக்கம் என்பது அதிகமான நிலையிலேயே இருந்துவருகின்றது. தமிழ் பெண்களை இலக்குவைத்தே நுண்கடன் நிறுவனங்கள் இயங்குகின்றன.

தமிழ் பெண்கள் ஏமாற்றாமல் எவ்வாறாவது பெரும் கடனை செலுத்துவார்கள் என்ற காரணத்தினால் அவர்கள் இலக்கு வைக்கப்படுகின்றனர்.

இதற்கு நாங்கள் நுண்கடன் நிறுவனங்களை மட்டும் குறைகூறி கொண்டிருப்பதனால் எந்த பிரயோசனமும் ஏற்படப்போவதில்லை.

அதனால் ஏற்படும் பாதிப்புகளை நாங்கள் உணர்ந்து அதில் இருந்து விலகிக்கொள்ள வேண்டும்.

நுண்கடன் காரணமாக இந்த ஆண்டு 37 பெண்கள் இந்த மாவட்டத்தில் தற்கொலை செய்துள்ளனர். 163 இளம் குடும்பங்கள் நீதிமன்றம் சென்று பிரிந்துள்ளது.

300க்கும் அதிகமான தாய்மார் இந்த நுண்கடன் பிரச்சினைகள் காரணமாக தமது பிள்ளைகளை பிரிந்து வெளிநாடுகளுக்கு தொழிலுக்காக சென்றுள்ளனர். இதற்கு எல்லாம் இந்த நுண்கடன் பிரச்சினையே காரணம்.

இதன் காரணமாக எதிர்கால சந்ததியையும் நாங்கள் நொண்டிகளாக்கும் நிலையினையே ஏற்படுத்துகின்றோம். என குறிப்பிட்டுள்ளார்.

 

 

SHARE