செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்கள் பயணம் செய்வதில் உள்ள பெரிய சிக்கல் என்ன?

179

செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்கள் பயணம் செய்வதற்கு மிகப்பெரிய தடையாக உள்ளது எது என, அமெரிக்க விண்வெளி மையமான நாசா தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் நாசா உட்பட பல விண்வெளி ஆய்வு மையங்கள் செவ்வாய் கிரகம் குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக 2039ஆம் ஆண்டுக்குள், விண்வெளி ஆராய்ச்சி வீரர்களை செவ்வாய் கிரகத்தில் தரையிறக்க வைக்க முடியும் என்று நாசா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இதற்கான திட்டத்தில் நாசா நீண்ட நாட்களாக ஈடுபட்டு வருகிறது. ஆனால், விண்வெளி வீரர்கள் செவ்வாய் கிரகத்திற்கு செல்ல சிக்கல் இருக்கிறது. அவை என்னவென்று நாசா தற்போது தெரிவித்துள்ளது.

அதாவது, செவ்வாய் கிரகத்திற்கு செல்லும்போது புற்றுநோய் தாக்குவதற்கான சாத்தியம் இரு மடங்கு காணப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

ஏனெனில், பூமியில் காணப்படும் கதிர்வீச்சுக்களை விட செவ்வாய் கிரகத்தில் ஆயிரம் மடங்கு கதிர்வீச்சு காணப்படுவதாக, கடந்த 2011ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டு வரை நடத்தப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கதிர்வீச்சுக்களால் வயிறு மற்றும் குடல்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தலாம். இதன் விளைவு நீண்டகால பிரச்சனைகளாக இருக்கும். இதன் காரணமாக விண்வெளி வீரர்கள் மரணத்தைக் கூட சந்திக்கலாம் என்றும் நாசா தெரிவித்துள்ளது.

நாசா இவ்வாறு தெரிவித்துள்ள நிலையில், தனியார் நிறுவனமான ‘ஸ்பேஸ் எக்ஸ்’ வரும் 2030ஆம் ஆண்டுக்குள் நிலவிற்கு சுற்றுலாப் பயணிகளை அனுப்ப உள்ளதாக அறிவித்துள்ளது.

செவ்வாய் கிரகத்தை விட நிலவிற்கான பயணம் குறைவானது என்பதுடன், கதிர்வீச்சு பாதிப்புகள் நிலவில் மிகக் குறைந்த அளவே இருக்கும் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

SHARE