விரைவில் மீண்டும் அதிகாரத்திற்கு வருவோம்! மஹிந்த ராஜபக்ச

119

மிக விரைவில் மீள அதிகாரத்திற்கு வருவோம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அத்துடன் அதிகாரத்திற்கு வந்து அடுத்த 2 வருடங்களுக்குள் நாட்டின் தேசியப் பிரச்சினைக்கு அனைவரும் ஏற்று கொள்ள கூடிய இணக்கமான தீர்வு ஒன்றைக் காண்போம் என குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள தமது உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து நேற்று காலை ஊடமொன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“யுத்தத்தை வெற்றிகரமாக முடித்த பின்னர் முதலில் வடக்கு, கிழக்கின் அபிவிருத்தி மற்றும் தமிழ் மக்களின் அன்றாட பிரச்சினைகள், அடிப்படை கட்டுமானங்கள் குறித்து விசேட சிரத்தை எடுத்து கவனித்தோம்.

அதை தொடர்ந்து தேசிய இனப்பிரச்சினைக்கு இணக்கமான தீர்வு காணும் முயற்சியை ஆரம்பிக்க முயன்றோம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை நானே அழைத்து பேசினேன். ஆனால், இணக்கமாக பேசி தீர்வு காணும் எண்ணத்தில் கூட்டமைப்பினர் செயற்படவில்லை. எனது அழைப்பை உதாசீனப்படுத்தி நடந்து கொண்டனர்.

யுத்தத்தின் போது கைது செய்யப்பட்ட 12,000 முன்னாள் போராளிகளை விடுவித்தல், வட மாகாணசபைக்கான ஜனநாயகபூர்வ தேர்தலை நடத்துதல் முதலிய ஆக்கபூர்வமான பல சமிக்ஞைகளை நான் வெளியிட்டேன்.

ஆனால், கூட்டமைப்பினர் அதற்கு சாதகமான பிரதிபலிப்பை காட்டவேயில்லை. அதிகாரத்தில் இருந்தும் எங்களை அகற்றும் திட்டத்திற்கு அவர்கள் துணைபோனார்கள். இப்போது அவர்களுக்கு யதார்த்தம் விளங்கியிருக்கும்.

கைதிகள் பிரச்சினை, காணி விடுவிப்பு, தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வினை காணுதல் எதுவுமே சரிவர நடக்கவில்லை.

வெறும் பேச்சு மட்டும்தான் நடக்கின்றது. இந்த அரசினால் எந்த தீர்மானமும் எடுக்க முடியாது. எடுத்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்தவும் இயலாது.

வெறுமனே பேசிக் கொண்டிருக்க வேண்டியதுதான். அதற்கு மேல் எதுவும் நடக்காது என்பது கூட்டமைப்பினருக்கும் இப்போது புரிந்திருக்கும்.

கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கு என்ன? அவர் விரும்பியபடி எதிர்க்கட்சித் தலைவர் பதவியும், அதற்கான பவிசுகளும் கிடைத்துள்ளன. எதிர்க்கட்சித் தலைவராக அவர் தேசிய பிரச்சினைகளையும் சரிவர பிரதிபலிக்கவில்லை.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதற்கான ஆக்கபூர்வமான முயற்சிகளை எடுக்கவில்லை.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த கோத்தபாய ராஜபக்ஷ அமெரிக்க ஆட்சி முறை பற்றி நன்கு அறிந்துள்ளவர்.

அங்குள்ளமை போன்று சமூக பொலிஸ் முறைமையை வடக்கு, கிழக்குக்கு அதிகாரப் பகிர்வாக வழங்குவதற்கு அவர் பரிந்துரைத்திருந்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒத்துழைப்புக் கிடைக்காமையால் அதைச் செய்ய முடியவில்லை.

விரைவில் ஆட்சி மாற்றம் வரும். தகுதியற்ற இந்த அரசு தூக்கியெறியப்படும். நாம் விரைவில் மீண்டும் அதிகாரத்திற்கு வருவோம்.

வந்த கையோடு தமிழ் மக்களின் அன்றாட உடனடிப் பிரச்சினைக்கு நியாயமான தீர்வையும், நிவாரணத்தையும் முன்வைப்போம். கைதிகள் பிரச்சினைக்கு நியாயமான, நீதியான தீர்வு விரைந்து எட்டப்படும்.

மக்களின் காணிப் பிரச்சினை, வேலைவாய்ப்பின்மை, அபிவிருத்தி நடவடிக்கைகளில் பிரதேச பாகுபாடு போன்ற சிக்கல்களுக்கு ஆக்கபூர்வமான இணக்கத் தீர்வு காணப்படும்.

எட்டப்படும் தீர்வு வெறும் பேச்சில் அல்லாமல் செயலில் நடைமுறைப்படுத்தப்படும். அதன் மூலம் நல்லிணக்கமும், தேசிய ஒருமைப்பாடும் உறுதி செய்யப்படும்.

கசப்புணர்வுகளை மறந்து ஒன்றித்துச் செயற்படவும், தேசத்துக்காகப் பணியாற்றவும் முன்வருமாறு எனது தமிழ் சகோதரர்களுக்கு அழைப்பு விடுக்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.

SHARE