வவுனியாவில் பதட்ட நிலை : பாதுகாப்பு பணியில் பொலிஸார்

126

வவுனியா பாரதிபுரம் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட விக்ஸ்காட்டு கிராமத்தில் இன்று பிரதேச செயலகத்தினால் பதிவு செய்யப்பட்ட 47 குடும்பங்களுக்கு காணி அளவீடு செய்யப்பட்டு வழங்கி வைக்கப்பட்டது.

நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக 2000 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பல்வேறு பகுதிகளிலிருந்து அகதிகளாக வந்த மக்கள் விக்ஸ்காட்டுப்பகுதியில் குடியேறிய நிலையில் 2009 ஆம் ஆண்டில் வன இலாகாவினர் விக்ஸ்காட்டுப் பகுதியானது தங்களுக்கு சொந்தமானது என தெரிவித்து அப்பகுதியிலிருந்து மக்களை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொண்ட நிலையில் விக்ஸ் காட்டுப்பகுதியில் குடியேறிய மக்கள் 2016 ஆம் ஆண்டுவரை தொடர் போராட்டங்களை மேற்கொண்டிருந்தனர்.

இதன் காரணமாக பிரதேச செயலகமானது ஆரம்பத்தில் குடியேறிய 47 குடும்பங்களுக்கு காணி பெற்று தருவதாக வாக்களித்திருந்த நிலையில் இன்றையதினம் காணிகள் அளவீடு செய்யப்பட்டு அம்மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் குடியிருக்காத  ஏழு குடும்பங்களுக்கு காணி வழங்கும் நடவடிக்கை இடைநிறுத்தி வைக்கப்பட்டதால் அக்குடும்பத்தினர் பிரதேச செயலகத்தின் காணி உத்தியோகத்தருடன் முரண்பட்ட நிலையில் நெளுக்குளம் பொலிஸாரின் பாதுகாப்புடன் காணிகள் அளவீடு செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

பாதிக்கப்பட்ட மக்களிடம் பொலிஸார் மற்றும் பிரதேச கிராம உத்தியோகத்தர் பேச்சுவார்த்தை நடத்தியதுடன் குறித்த 47 குடும்பங்களில் எவராவது குடியேறாமல் இருந்தால் அக்காணியை பாதிக்கப்ட்டவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் காணிப்பிரச்சனை முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

SHARE