திருடர்களின் குகை போன்று காட்சியளிக்கும் வடக்கு மாகாண சபை

47

திருடர்களின் குகை போன்றே வடக்கு மாகாண சபை காட்சியளிப்பதாக சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர் தவநாதன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

வடக்கு மாகாண சபையின் 133ஆவது அமர்வு நேற்று கைதடியிலுள்ள பேரவை செயலகத்தில் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

மாகாண அமைச்சர் குணசீலன் மீதான குற்றச்சாட்டு தொடர்பான விவாதத்தின் போதே தவநாதன் மேற்கண்டவாறு கூறினார். மேலும் தெரிவிக்கையில்,

“வடக்கு மாகாண சபை ஆரம்பிக்கப்பட்ட போது நாங்கள் எதிர்க்கட்சியாகவே வந்தோம். அவ்வாறு இரண்டு வருடங்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கையில் அதன் பின்னர் ஆளும் கட்சிக்குள்ளேயே எதிர்க்கட்சியொன்று வந்துவிட்டது.

அவ்வாறு ஒரு கட்சி மாற்றம் ஏற்பட்டு அந்தக் கட்சியே தற்போதும் தொடர்கின்றது.

இந்த சபையில் உட்கட்சி முரண்பாடுகள் பற்றியே அதிகம் பேசப்படுகின்றது. அதற்கே இங்கு முன்னுரிமையும் கொடுக்கப்படுகின்றது.

இவ்வளவு காலமும் அந்த உட்கட்சி விடயங்கள் தொடர்பில் பேசி வந்திருக்கின்ற போதிலும் இறுதி நேரங்களிலும் அந்த விடயங்களே முதன்மைப்படுத்தப்படுகின்றன.

இப்போதும் அதைப் பற்றி பேசி எத்தகைய நடவடிக்கைகளை எடுக்கப் போகின்றீர்கள்? இங்கு நடைபெறும் விடயங்களை பார்க்கின்ற போது திருடர்களின் குகை போன்றுதான் இந்தச் சபை உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

SHARE