சிங்களப் பெரும்பான்மைக் கட்சியைச் சேர்ந்த விஜயகலா மகேஸ்வரன், 30 வருட ஆயுதப் போராட்டத்தை தனது சொந்த அரசியல் தேவைக்காகவும் சிங்களப் பெரும்பான்மை கட்சிளுக்கும் விலை பேசுகி்ன்றார்

61

 

இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சராகப் பதவி வகித்த ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் கடந்த யூலை மாதம் 2 ஆம் திகதி இடம்பெற்ற இலங்கை அரசாங்கத்தின் நிகழ்வொன்றின்போது விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாக வேண்டும் என கூறியிருந்தார். இதனால் இலங்கைக் குற்றப்புலனாய்வுப் பிரிவிவு நடத்திய பல கட்ட விசாரணைகளின் பின்னர் இன்று திங்கட்கிழமை முற்பகல் கைதுசெய்யப்பட்டார். இந்த விவகாரம் குறித்து வாக்குமூலம் வழங்குவதற்காக இலங்கைப் பொலிஸ் திட்டமிட்ட குற்றத் தடுப்புப் பிரிவுக்கு சட்டத்தரணிகளுடன் சென்றிருந்தார். அங்கு வாக்குமூலம் வழங்கியபோதே அவர் கைதுசெய்யப்பட்டார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சரான நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன், கொழும்பு புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்போது ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் அவரை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

விஜயகலா மகேஸ்வரனை விடுவிப்பதற்கு இலங்கைப் பொலிஸார் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காத நிலையில், அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதுடன் இந்த வழக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற இலங்கை அரசாங்க நிகழ்வின்போது, இலங்கை அமைச்சர்கள் முன்னிலையிலேயே, விடுதலைப்புலிகளின் மீள் உருவாக்கத்தின் அவசியம் குறித்து வலியுறுத்தியிருந்தார்.

இதனால் கொழும்பு அரசியலில் பெரும் பதற்றமும் விஜயகலா மீது சந்தேகமும் ஏற்பட்டது.

உடனடியாக அமைச்சுப் பதவியிலிருந்து நீக்குமாறு மஹிந்த ராஜபக்சவை மையப்படுத்திய கூட்டு எதிர்க்கட்சி உள்ளிட்ட சிங்களக் கட்சிகள் அனைத்தும் மைத்திரி- ரணில் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்திருந்தன.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கியதேசியக் கட்சி ஆகியவற்றின் அமைச்சர்களும் விஜயகலா மீது தமது விசனத்தை வெளிப்படுத்தினர்.

இதனையடுத்து விஜயகலா தாமாகவே முன்வந்து தனது அமைச்சுப் பதவியில் இருந்து விலகினார். அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய குழுவும் இது தொடர்பில் ஆராய விசாரணைக் குழுவொன்றை அமைத்திருந்தது.

இலங்கை நாடாளுமன்ற சபாநாயகா் கரு ஜயசூரியவும் நடாளுமன்ற சிறப்புக் குழுவொன்றை அமைத்து விசாரணை நடத்தினார்.

அதன் பின்னர் விஜயகலாவின் உரை தொடர்பாக சட்டமா அதிபரின் ஆலோசனையின் பிரகாரம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நாடாளுமன்றில் சபாநாயகர் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று விசாரணைக்குச் சென்றபோது அவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

ஆனால், எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலை மையமாக வைத்து, ஐக்கியதேசியக் கட்சி நடத்திய நாடகமே விஜயகலா மகேஸ்வரன் கைதான விவகாரம் என தமிழ் அரசியல் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

புலிகளுக்கு ஆதரவாக யார் பேசினாலும் கைது செய்யப்படுவார்கள் என்பதை தென்பகுதி சிங்கள மக்களுக்குக் காண்பித்து, புலி எதிர்ப்புப் பிரச்சாரத்தின் மூலம் சிங்கள பௌத்த பேரினவாத வாக்குகளை பெற்றுக்கொள்ள இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எடுத்த முயற்சி என்றும் தமிழ்க் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

அதேவேளை, புலிகளுக்கு ஆதரவாகப் பேசி கைது செய்யப்பட்டதாகக் கூறி விஜயகலாவும் வடமாகாணத்தில் பிரச்சாரம் செய்து, வாக்குகளைப் பெற்றுக்கொள்ள முற்படுவார்.

ஆகவே தமிழ் மக்களின் வாக்குகளை ஐக்கியதேசியக் கட்சிக்கு விஜயகலா மூலமாகப் பெற்றுக் கொள்ளவும் இந்தக் கைது விவகாரத்தை ரணில் விக்கிரமசிங்க பயன்படுத்தியதாகவும் தமிழரசுக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

உண்மையில் தனது உரையில் தமிழ் மக்களுக்காகவே பேசியிருந்தால், விஜயகலா மகேஸ்வரன் ஐக்கியதேசியக் கட்சியில் இருந்து விலகி, தமிழ் கட்சி ஒன்றில் இணைந்திருக்க வேண்டும். அல்லது முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன் இணைந்தாவது செயற்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் அவர் இதுவரை கட்சியில் இருந்து விலகவில்லை. அமைச்சுப் பதவியில் இருந்து விலகினாலும் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து இன்று வரை விலகவில்லை.

இதனால் அவர் மீண்டும் ரணில் விக்கிரமசிங்கவுக்கே விசுவாசமாகச் செயற்படவுள்ளார் என்று தெரிகின்றது.

புலிகள் பற்றிப் பேசியதையும் அதனால் விசாரணைக்கு உள்ளாகி கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலையான சம்பவங்கள் அனைத்தையுமே, விஜயகலா, தமிழ் மக்களுக்குச் செய்த பெரும் தியாகமாகக் காண்பித்து ஐக்கிய தேசியக் கட்சிக்குரிய வடமாகாணத்துக்கான வாக்குகளை அதிகரிக்கத் திட்டதிட்டமிட்டுள்ளார் என்று தமிழ்த் தரப்புக்கள் குற்றம் சுமத்துகின்றன.

இதுதான் கைது செய்யப்பட்டு பினையில் விடுவிக்கப்பட்டதான் உண்மைக் கதை என்று இடதுசாாரி முன்னணியின் மூத்த உறுப்பினர் ஒருவர் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.

இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தின் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கூறிய கருத்து, முன் சிந்தனையில்லாத தனிப்பட்ட அரசியல் நோக்கம் கொண்டது என்பதை தென்னிலங்கையில் உள்ள சில பிரதான சிங்கள அரசியல்வாதிகளுக்குப் புரியும்.

ஆனாலும் இது சிங்கள பௌத்த நாடு என்பதைக் காண்பிக்கும் நோக்கில் விஜயகலா மீது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என பௌத்த பிக்குமார் கூட அப்போது கூறியிருந்தனர்.

அரசியல் கட்சிகளின் ஆதரவுகள் இன்றி போரினால் பாதிக்கப்பட்ட தமிழர் தாயகப் பிரதேச மக்கள், போரினால் ஏற்பட்ட பக்க விளைவுகளுக்குத் தீர்வு வழங்குமாறு கோரி, 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் ஜனநாயக வழியில் போராடி வருகின்றனர்.

இந்த நிலையில், சிங்களப் பெரும்பான்மைக் கட்சியைச் சேர்ந்த விஜயகலா மகேஸ்வரன், 30 வருட ஆயுதப் போராட்டத்தை தனது சொந்த அரசியல் தேவைக்காகவும் சிங்களப் பெரும்பான்மை கட்சிளுக்கும் விலை பேசுகி்ன்றார் என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர் சங்கம் அப்போது குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

SHARE