விபத்தில் சிக்குண்டு உயிர் தப்பினேன் – மெத்தியு ஹெய்டன்

20

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஆரம்பதுடுப்பாட்ட வீரராகவும் முன்னணி வீரராகவும் திகழ்ந்த மெத்தியு ஹெய்டன், குயின்ஸ்லாந்தில் நடைபெற்ற விபத்தில் சிக்குண்டு உயிர் தப்பினேன் என்று காயங்களுடன் சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமல் புகைப்படத்தை பதிவேற்றியுள்ளார்.

46 வயதாகும் ஹெய்டன், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 103 டெஸ்ட் போட்டிகளிலும், 161 ஒரு நாள் போட்டிகளிலும் 09 இருபதுக்கு 20 போட்டிகளிலும் அவுஸ்திரேலிய அணிக்காக விளையாடியுள்ளார்.

அது மாத்திரமல்லாமல் ஐ.பி.எல். போட்டித் தொடரிலும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்காக விளையடிய இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்று, தற்போது கிரிக்கெட் வர்ணனையாளராக செயற்பட்டு வருகின்றார்.

இந்நிலையில் குவின்ஸ்லாந்தில் தனது மகனுடன் அலைச்சறுக்கல் விளையாட்டில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது தொடர்பான புகைப்படத்தை ஹெய்டன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

இன்ஸ்டா கிராமில் பதிவேற்றம் செய்யப்பட்ட ஹெய்டனின் புகைப்படத்துக்கு பல்வேறு கிரிக்கெட் நட்சத்திரங்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

குறிப்பாக தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஜொன்டி ரொட்ஸ், “ மெத்தியு ஹெய்டன், உங்கள் தலையில் ஏன் இந்தியாவின் வரைபடத்தை வரைந்துள்ளீர்கள். உங்கள் கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா?.” என்று கூறியுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற ஹெய்டன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். அதனை சுட்டிக்காட்டி, இந்த கருத்தை ஜொன்டி ரொட்ஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜொன்டி ரொட்ஸ் ஓய்வுக்கு பின்னர் ஐ.பி.எல். அணிகளுக்கு பயிற்சியாளராக செயற்பட்டு வருவதுடன் இந்தியாவின் மீது மிகுந்த ஈர்ப்புடையவர். இதனால் தனது மகளுக்கு “இந்தியா” என்று பெயர் சூட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

SHARE