அனைத்து எம்.பிக்களும் ஆதரவளிக்க வேண்டும்! ஜே.வி.பி கோரிக்கை

45

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை முழுமையாக இல்லாதொழிக்க கோரும் அரசமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு அனைத்து கட்சிகளும் ஆதரவளிக்க வேண்டும் என ஜே.வி.பியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலவரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அரசமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூலத்திலுள்ள பல சரத்துகளை நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையும், சர்வஜன வாக்கெடுப்பும் அவசியம் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இத்தீர்ப்பை நாம் மதிக்கின்றோம்.

இலங்கையில் தற்போது நடைமுறையிலுள்ள அரசமைப்பு சர்வஜன வாக்கெடுப்புக்கு உட்படுத்தப்படவில்லை. அது 19 தடவைகள் திருத்தப்பட்டுள்ளன. நாட்டிலுள்ள சட்டத்துக்கு அனைவரும் அடிபணியவேண்டும்.

அப்படியென்றால் 20ஆவது திருத்த சட்டமூலம் மீது நிச்சயம் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அவ்வாறு நடைபெற வேண்டுமென்றால் நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆதரவை நாம் வழங்க வேண்டும்.

அதற்கு அனைத்து எம்.பிக்களும் ஆதரவளிக்க வேண்டும். அவ்வாறு ஆதரவளிக்காமல், எதிர்ப்பு தெரிவிப்பார்களாயின், மக்கள் ஆணையை எதிர்கொள்ள அவர்கள் தயாரில்லை என்பதே வெளிச்சத்துக்கு வரும்” என குறிப்பிட்டுள்ளார்.

SHARE