விரைவில் வவுனியாவுக்கு செல்லவுள்ள வடமாகாண சபை உறுப்பினர்கள்

41

வவுனியா மாவட்டத்தின் மீள்குடியேற்றம், காணி அபகரிப்புகள் தொடர்பில் ஆராய்வதற்காக வடக்கு மாகாண சபையின் உறுப்பினர்கள் குழுவொன்று எதிர்வரும் 17 ஆம் திகதி வவுனியாவுக்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக வடமாகாண அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று ஊடகவியலாளர்கள் வினவிய போதே சீ.வீ.கே.சிவஞானம் இதை கூறியுள்ளார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

அண்மையில் நடைபெற்ற வடக்கு மாகாண சபையின் 133 ஆவது அமர்வின் போது சபையின் வவுனியா மாவட்ட உறுப்பினரான ஜி.ரி.லிங்கநாதன், வவுனியாவில் வனவளத் திணைக்களத்தின் அடாவடிகள் தொடர்பில் சுட்டிக்காட்டி இந்த விடயத்தில் சபை விசேட கவனமெடுத்து கள விஜயமொன்றை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து கால நேரத்தை பின்னர் அறிவிப்பதாக அன்றைய தினம் அவைத் தலைவர் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் யாழ்ப்பாணத்தில் நேற்று ஊடகவியலாளர்கள் வினவிய போது,

“வவுனியா மாவட்டத்திலுள்ள காஞ்சிரமோட்டைக் கிராமத்துக்குச் செல்வதற்கும் அங்கு மக்கள் மீள்குடியமர்வதற்கும் வன இலாகாவினர் தடையேற்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.

ஆகவே, அந்தப் பகுதிக்கு வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் கள விஜயமொன்றை மேற்கொண்டு உண்மை நிலையைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கும் வேண்டுமென்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய எதிர்வரும் 17ஆம் திகதி மாகாண சபையின் உறுப்பினர்கள் யாவரும் அடங்கிய குழு அங்கு சென்று நிலைமைகளைப் பார்வையிட்டு நடவடிக்கைகளை எடுக்க இருக்கின்றோம் எனவும் ” தெரிவித்துள்ளார்.

SHARE