துபாயில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தானின் அறிமுக சுழற்பந்து வீச்சாளர் பிலால் ஆசிப் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், அவுஸ்திரேலிய அணி 202 ஓட்டங்களில் சுருண்டது.
பாகிஸ்தான்- அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 482 ஓட்டங்கள் குவித்தது.
அந்த அணியில் முகமது ஹபீஸ் 126 ஓட்டங்களும், ஹரிஸ் சோஹைல் 110 ஓட்டங்களும் எடுத்தனர். பின்னர் முதல் இன்னிங்ஸை துவங்கிய அவுஸ்திரேலிய அணி, 2ஆம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 30 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
அதனைத் தொடர்ந்து, நேற்று 3வது நாள் ஆட்டம் தொடங்கியது. முதல் சர்வதேச டெஸ்டில் ஆடிய ஆரோன் பிஞ்ச் 95 பந்துகளில் அரைசதம் அடித்தார். அவருடன் தொடக்க வீரராக களமிறங்கிய கவாஜாவும் அரைசதம் கடந்தார்.
இவர்களின் கூட்டணியால் அவுஸ்திரேலிய அணி 100 ஓட்டங்களை கடந்தது. அணியின் ஸ்கோர் 142 ஓட்டங்களாக இருந்தபோது ஆரோன் பிஞ்ச் 62 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் களம் இறங்கிய ஷான் மார்ஷை, பாகிஸ்தானின் அறிமுக வீரர் பிலால் ஆசிப் 7 ஓட்டங்களில் வெளியேற்றினார்.
அதன் பின்னர், பிலால் ஆசிப் சுழலில் சிக்கிய அவுஸ்திரேலியா அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. மறுமுனையில் பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளார் முகமது அப்பாஸின் தாக்குதல் பந்துவீச்சினால் நிலைகுலைந்த அவுஸ்திரேலியா 202 ஓட்டங்களில் சுருண்டது.
பாகிஸ்தான் தரப்பில் பிலால் ஆசிப் 36 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகளையும், முகமது அப்பாஸ் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
அதன் பின்னர் 2வது இன்னிங்ஸில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, 3ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 45 ஓட்டங்கள் எடுத்தது.
இமாம் உல் ஹக் 23 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளார். இதுவரை பாகிஸ்தான் அணி 325 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது.

