தமது அதிரடி ஆட்டத்தால் கிண்ணத்தை தம்வசப்படுத்திய சென்றலைட்ஸ் அணி!

53

சிறப்பான பந்துவீச்சு மத்திய வரிசை துடுப்பாட்டம் கைகொடுக்க கிண்ணம் வென்ற சென்றலைட்ஸ்

மயூரனின் சிறப்பான பந்துவீச்சு, ஜெரிக்துசாந்தின் சகலதுறையாட்டம் மற்றும் டர்வினின் அதிரடி துடுப்பாட்டம் என்பன கைகொடுக்க ஜொலிஸ்ரார்ஸ் வெற்றிக்கிண்ணத்தை சென்றலைட்ஸ் அணி தம்வசப்படுத்தினர்.

தொடரின் சிறந்த வீரனாக கொக்குவில் மத்திய சனசமூக நிலைய அணியின் ஜெயரூபன் தெரிவு செய்யப்பட்டார்.

ஜொலிஸ்ரார்ஸ் விளையாட்டுக்கழகம், யாழ்.மாவட்ட துடுப்பாட்டச் சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட கிரிக்கெட் அணிகளுக்கிடையில் 30 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட சுற்றுப்போட்டியொன்றை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடத்தியது.

இந்தச் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியானது 40 ஓவர்களைக் கொண்ட போட்டியாக சென்றலைட்ஸ் அணிக்கும் கொக்குவில் மத்திய சனசமூக நிலைய அணிக்கும் (கே.சி.சி.சி) இடையில் 30 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

நாணயச் சுழற்சியில் வென்ற சென்றலைட்ஸ் அணித்தலைவர் ஜெரிக்துசாந் முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தார்.

அதற்கிணங்க களமிறங்கிய கொக்குவில் மத்திய சனசமூக நிலைய அணி, தொடக்கத்திலிருந்து சீரான இடைவெளியில் விக்கெட்களை பறிகொடுத்து வந்தது.

மத்திய வரிசையில் களமிறங்கிய சத்தியன் மற்றும் சாம்பவன் ஆகியோர் அணிக்கு நம்பிக்கை தந்தனர்.

கே.சி.சி.சி அணி, 33.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 153 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் சத்தியன் 55 ஓட்டங்களையும், சாம்பவன் 40 ஓட்டங்களையும், பிரதாபன் மற்றும் ஜெயரூபன் ஆகியோர் 23 மற்றும் 14 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் மயூரன் 7.3 ஓவர்கள் பந்துவீசி 37 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும், ஜெரிக்துசாந்த் 3 விக்கெட்களையும், சாள்ஸ், தசோபன் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

154 ஓட்டங்கள் என்ற இலகுவான வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய சென்றலைட்ஸ் அணி, ஓட்டமெதனையும் பெறாமல் முதல் விக்கெட்டையும், 5.1 ஓவர்களில் 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை இழந்து ஒரு கட்டத்தில் தடுமாறியது.

அதன் பின்னர் களமிறங்கிய செல்ரன், ஜெரிக்துசாந்த் மற்றும் டர்வின் ஆகியோர் அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர்.

சென்றலைட்ஸ் அணி, 30.3 ஓவர்களில் 5 விக்கெட்களை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

துடுப்பாட்டத்தில் டர்வின் ஆட்டமிழக்காமல் 58 ஓட்டங்களையும், ஜெரிக்துசாந்த் 41 ஓட்டங்களையும், செல்ரன் 33 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் கே.சி.சி.சி அணி சார்பாக, பிரதீஸன் 3 விக்கெட்களையும், சாம்பவன் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

கே.சி.சி.சி அணியின் ஏலாளசிங்கம் ஜெயரூபன் இந்தத் தொடரின் நாயகனாகவும்,

சென்றலைட்ஸ் அணியின் அணித்தலைவர் ஜி.ஜெரிக்துசாந்த் இறுதிப்போட்டியின் நாயகனாகவும்,

கே.சி.சி.சி அணியின் ரி.சத்தியன் சிறந்த துடுப்பாட்ட வீரராகவும்,

சென்றலைட்ஸ் அணியின் எம்.மயூரன் சிறந்த பந்துவீச்சாளராகவும்,

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அணியின் துவாரகசீலன் தொடரின் சிறந்த துடுப்பாட்ட வீரனாகவும் தெரிவு செய்யப்பட்டனர்.

 

SHARE