ஆட்கடத்தல் படகுகளை தடுக்க வான் கண்காணிப்பை அதிகரித்திருக்கும் அவுஸ்திரேலியா!

39

ஆட்கடத்தல், புகலிட கோரிக்கையாளர்களின் படகுகளை அவுஸ்திரேலியா எல்லைக்குள் நுழைவதை தடுக்கும் விதமாக அவுஸ்திரேலிய எல்லைப்படை வான் மற்றும் கடல் கண்காணிப்பை அதிகரித்துள்ளது.

இதனை சுட்டிக்காட்டியிருக்கும் அந்நாட்டின் உள்துறை அமைச்சகத்தின் செய்திக்குறிப்பில்,

“2013ல் கடுமையான எல்லைப் பாதுகாப்பு கொள்கைகளை நடைமுறைப்படுத்தியது முதல் ஆட்கடத்தல் முயற்சிகள் கண்டறியப்பட்டு, இடைமறிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறான முயற்சிகள் குறைந்தும் உள்ளன. இந்த கொள்கை நடைமுறைக்கு வந்தததிலிருந்து 33 ஆட்கடத்தல் படகுகள் கடலிலேயே மறிக்கப்பட்டுள்ளன, 827 பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

கணக்கிலடங்கா பலர், அவுஸ்திரேலியாவை நோக்கிய சட்டவிரோத படகு பயணத்தை மேற்கொள்வதிலிருந்து தடுக்கப்பட்டுள்ளனர்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமீபத்தில், கடுமையான கண்காணிப்புகளை கடந்து புகலிட கோரிக்கையாளர்களை கொண்ட வியாட்நாம் படகு ஒன்று அவுஸ்திரேலிய எல்லைக்குள் நுழைந்தது.

இந்த நுழைவை ஆட்கடத்தல் நிகழ்வாக அணுகிய அவுஸ்திரேலியா, அதிலிருந்த 17 பேரையும் மீண்டும் வியாட்நாமுக்கே நாடு கடத்தியது.

இந்த படகு வருகை, கண்காணிப்பின் தேவையை நினைவூட்டிருப்பதாக அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

இதன் தொடர்ச்சியாக, அவுஸ்திரேலிய எல்லையை பாதுகாக்கும் வகையில அவுஸ்திரேலிய எல்லைப்படை, ரோயல் அவுஸ்திரேலிய கடல்படை, ரோயல் அவுஸ்திரேலிய விமானப்படை கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

“இப்படைகள், அவுஸ்திரேலிய எல்லைக்குள் வர முயற்சிக்கும் சந்தேகத்துக்குரிய எந்த படகினையும் இடைமறிக்கும்” எனக் கூறப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவை அடையும் முயற்சியில் நடுக்கடலில் 1200க்கும் மேற்பட்ட மக்கள் இறந்து போன நிகழ்வுகளும் உண்டு.

அந்த சூழ்நிலைகளுக்கு மீண்டும் திரும்புவதை அவுஸ்திரேலியா அரசு ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்தியா, இலங்கை, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து கடந்த காலங்களில் அவுஸ்திரேலியாவை நோக்கிய ஆபத்தான படகு வழி பயணங்களை தமிழ் அகதிகளும், ரோஹிங்கியா அகதிகளும் மேற்கொண்டு இருக்கின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

SHARE