புல்மோட்டை பிரதேச முஸ்லிம்களின் காணிகளை பகுதியளவில் விடுவிக்க அரசாங்க அதிபர் இணக்கம்

33

யுத்த காலத்தில் தமது வாழ்விடங்களையும், விவசாயக் காணிகளையும் இழந்த திருகோணமலை மாவட்டத்திலுள்ள குச்சவெளி சேருவில பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட பொது மக்களின் காணிகள் யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னரும் உரிமையாளர்களுக்கு மீண்டும் வழங்குவதிலும் அல்லது அவர்கள் பயிர்ச்செய்கை மேற்கொண்ட காணிகளை விடுவிப்பதிலும் இதுவரை காலமாக நிலவிய இழுபறி நிலைக்கு நிரந்தரத்தீர்வை எட்டும் விதத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீமின் ஏற்பாட்டில் காணி அமைச்சர் கயந்த கருணா திலக மற்றும் சம்பந்தப்பட்ட உயரதிகாரிகளுடன் நடைபெற்ற கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டது.

கிழக்கு மாகாணத்தின் காணிப்பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள செயலணிக்கும் மாகாண ஆளுநருக்குமிடையிலான விசேட கூட்டம் அடுத்த வாரத்தில் நடைபெறவுள்ளது.

அதில் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம் கயந்த கருணாதிலக, கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட உயரதிகாரிகளும் கலந்து கொண்டார்கள்.

மேலதிக காணிகளையும், விவசாய நிலங்களையும் விடுவிப்பது தொடர்பில் வனபரிபாலன திணைக்களத்துடனான பேச்சுவார்த்தைகளின் பின்னர் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படுமென இந்தக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

காணிகளுக்கான அனுமதிப்பத்திரங்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு உரிய முறையில் காணிகளைப் பகிர்ந்தளிப்பது தொடர்பிலும் ஏலவே காணிக்கச்சேரி நடாத்தப்பட்டு அடையாளங்காணப்பட்ட விண்ணப்பதாரிகளுக்கும் பகிர்ந்தளிப்பது தொடர்பிலும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சரினால் அரசாங்க அதிபருக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.

இக்கலந்துரையாடலின் போது புல்மோட்டை பிரதேசத்தில் இடம்பெற்று வரும் காணிப்பிரச்சினை தொடர்பாக,

 

01. காணி அனுமதி பத்திரத்துக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் காணி அனுமதி பத்திரம் வழங்க நடவடிக்கை எடுத்தல்.

02. காணி அனுமதி பத்திரம் வழங்கப்பட்ட காணிக்குள் வன பரிபாலன திணைக்களத்தால் இடப்பட்டுள்ள கற்களை அகற்றி மக்களுக்கு குடியிருக்க மற்றும் பயிர் செய்ய அனுமதித்தல்.

03. மக்களின் காணிகளுக்குள் புதை பொருள் காணிகள் என்பதை ஆராய்ந்து மக்களிடம் கையளித்தல்.

04. படையினரால் பிரதேச செயலாளரால் மேலதிகமாக வழங்கப்பட்ட காணிகளுக்கு மேலதிகமாக உள்ளவற்றை விடுவித்தல்

05. பிரதேச உரிமையாளரின் காணிகளை சுத்தம் செய்ய அனுமதித்தல்.

06. புல்மோட்டை,குச்சவெளி பிரதேசத்தில் ஒவ்வொரு பௌத்த கோவிலுக்கும் 500 ஏக்கர் வீதம் அளவிட வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.

இதேவேளை

07. குச்சவெளி மகா ஆலங்குளம் முஸ்லிம்களின் காணிகளை சுத்தப்படுத்த அனுமத்தித்தல் போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டதாகவும்தெரிவிக்கப்படுகின்றது.

இக்கூட்டத்தில் பிரதியமைச்சர் பைசல் காசிம், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ்.தெளபீக், ஏ.எல்.நசீர், எம்.ஐ.எம்.மன்சூர், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர், குச்சவெளி பிரதேச சபைத்தவிசாளர் ஏ.பி.முபாரக், மாவட்ட அரசாங்க அதிபர் புஸ்பகுமார, குச்சவெளி பிரதேச செயலாளர் தனேஸ்வரன், சேருவில பிரதேச செயலாளர் பி.ஆர்.ஜயரத்தன, காணி அமைச்சின் மேலதிகச்செயலாளர், பிரதேச சபை உறுப்பினர்களான மீஸான், அமீன் பாரிஸ், புல்மோட்டை பிரதே ஜம்இய்யத்துல் உலமா சபைத்தலைவர் மௌலவி அப்துல் சமத், பிரதேச பள்ளிவாசல்களின் தலைவர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

 

 

 

 

SHARE