தமிழ் மக்களின் அஹிம்சைப் போராட்டங்கள் மீண்டும் தமிழீழத்திற்கான எச்சரிக்கை சமிக்ஞைகளா?-– இரணியன்

155

யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டங்கள் உணர்த்தி நிற்பது என்ன?

தமிழ் அரசியல்கைதிகளின் விடுதலையும், அதில் குளிர்காயும் தமிழ் அரசியல் தலைமைகளும்

தமிழ் அரசியல்கைதிகளின் விடுதலை விவகாரம் தொடர்பில் பல்வேறு தரப்பட்ட தரப்பினராலும் அடையாள உண்ணாவிரதம், உண்ணாவிரதம், சத்தியாக்கிரகப்போராட்டம், மௌனப் போராட்டம் என பல பல போராட்டங்களை பல அரசியல் சார்ந்த கட்சிகள், அமைப்புக்கள் என நடத்தி முடித்திருக்கின்றன. தொடர்ந்தும் நடக்கின்றன. இவர்களது போராட்டங்கள் என்பது ‘எட்டாக் கனிக்கு கொட்டாவி விட்ட கதை’ யினைப் போன்றதே.

அரசியல்கைதிகளின் விடுதலை தொடர்பில் மேற்கொள்ளப் படவேண்டிய நடைமுறைகள் பல இருக்கின்றன. பயங்கரவாதத் தடைச்சட்டம் இந்நாட்டில் இருந்து நீக்கப்படவேண்டும். அதன் பின்னர் தான் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளோருக்கான சிவில் வழக்குகளை முன்னெடுத்துச் சென்று அவர்களை விடுதலை செய்வதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது. இந்நிலையில் என்னதான் நடவடிக்கைகளை தமிழ்த் தரப்பு மேற்கொண்டாலும் சட்டம் அதனை அனுமதிக்காது. சட்டத்திற்கு முரனான ஒரு செயற்பாட்டை இவ்வரசாங்கம் முன்னெடுக்கின்றபோது தென்னி லங்கை அரசியல் நிலைமைகள் மாற்றமடையும். அந்த மாற்றத்தை மாறி மாறி வந்த அரசுகளும், தற்போதைய அரசும் விரும்பவில்லை.

நீண்டகாலமாக தமிழ் மக்களது தீர்க்கப்படாத பிரச்சினைகள் பல இருக்கின்றது. அதில் வட-கிழக்கு இணைப்பு, பொலிஸ் மற்றும் காணி அதிகாரம், பயங்கரவாதத் தடைச்சம். இம் மூன்றையும் வைத்து மாறி மாறி வருகின்ற அரசாங்கங்கள் அரசி யலை நடத்திக்கொண்டிருக்கின்றன. இதனை முற்றாகத் தீர்த்துவிட்டால் அரசியலில் பேசுவதற்கோ அல்லது தமது கட்சி அரசியலை வளர்த்துக்கொள்வதற்கோ சிங்கள பேரினவாத அரசுகளுக்கு ஒவ்வாத காரியமாக அமைந்துவிடும். கடந்த காலத்தில் ஜே.வி.பியினருக்கு பொது மன்னிப்பு வழங்கி அவர்கள் தற்போது பாராளுமன்றச் செயற்பாடுகளில் அமர்த்தப்பட்டுள்ளதைப் போன்று விடுதலைப் புலிகளுக்கும் அவ்வா றானதொரு பொதுமன்னிப்பு வழங்கப்படவேண்டும்.

இதற்கிடையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தரப்பு என்ன கூறுகிறது எனில், 11000 போராளி களுக்கு புனர்வாழ்வளித்து விடுதலை செய்ய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு முடி யுமாகவிருந்தால் ஏன் தற்போதைய ஜனாதிபதிக்கு இவர்களை விடுதலை செய்ய முடியாதுள்ளது என்பதே. மேற்கூறப்பட்ட விடயம் உண்மையாகவிருந்தாலும் பயங்கர வாதத் தடைச்சட்டத்தை நீக்குவதன் ஊடாக ஏனைய விடயங்களை சுமு கமான முறையில் தீர்த்துக்கொள்ள முடியும். இச்சட்டத்தை நீக்குவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து வாதிடவேண்டும். இதன் ஊடாக தமிழ் மக்களது தீர்வுத்திட்ட விவகாரங்களை துரிதகதியில் முன்னெடுப்பதற்கான வழிவகைகள் பிறக்கும். ஆகவே இதனைக் கருத்திற்கொண்டு தமிழ் அரசியல் பிரதிநிதிகள் செயற் படுவதன் ஊடாக தமிழ் மக்களது பிரச்சினைகளுக்கான தீர்வுகளில் படிப்படியான முன்னேற்றத்தைக் கொண்டுவர முடியும்.

யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் துணிச்சலான போராட்டங்கள்

போராட்ட வரலாற்றில் கடந்த கால விடயங்களை எடுத்துக் கொண்டால் யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் பங்களிப்பு மகத்தானது. விடுதலைப்போராட்டம் மௌனிக்கப்படுவதற்கு முன் னரும் அதற்குப் பின்னரும்; விடுதலைப் புலிகளது சிறப்பு நிகழ்வுகள் அனைத்தும் யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறுவது வழக்கம். இதன்போது பல மாணவர்கள் அச்சுறுத்தப்பட்டும், கடத்தப்பட்டும், காணாமற்போயும், சுடப்பட்டும் இருக்கிறார்கள். பல்கலைக்கழக மாணவர்களை ஆர்ப்பாட்டம் செய்வதற்கு ஒரு சிலர் தூண்டு கிறார்கள் என்ற குற்றச்சாட்டு பலரால் முன்வைக்கப்படுகின்ற போதிலும் அடக்குமுறைக்கு எதிராக மாணவர்களுடைய பேரெழுச்சியானது சர்வதேச மட்டத்திலும் தமிழ் மக்களுக்கான ஒரு ஆதரவினை, தீர்வினை பெற்றுக்கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

மாணவர்களது போராட்டத்தின் பின்னணியில் தமிழ் அரசியல்வாதிகள் தமது அரசியல் இலாபம் கருதிய செயற்பாடுகளையே முன்னெடுத்து வந்துள்ளார்கள் என்பது வரலாறு. மாணவர்களது போராட்டத்தினுள் அரசியலும் கலந்து செயற்படுவதன் ஊடாகவே மாணவர்கள் பழி வாங்கப்படுகின்றார்கள்.

யுத்தம் நடந்துகொண்டிருந்த காலப்பகுதியில் மாத்திரம் பல பல்கலைக்கழக மாணவர்கள் கடத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டு காணாமல் போயுள்ளனர். இதைவிட பாடசாலை மாணவ, மாணவியரும் கூட யாழ் செம்மணி, கோப்பாய், வல்லவெளி, கொடிகாமம் போன்ற பல பிரதேசங்களிலும் காணாமல் போயும் கொலையும் செய்யப்பட்டுள்ளனர்.

யுத்தத்திற்குப் பின்னர் மறை முகமான இனவழிப்பு இலங்கையில் இடம்பெற்று வருகின்றது. பாலியல் வன்முறை, போதைப்பொருட்கள் என்பன தமிழர் பகுதிகளில் பரவவிடப்பட்டு அதனோடு தமிழ் மக்களது கலை கலாச்சாரத்தை குழிதோண்டிப் புதைக்கும் நடவடிக்கைகளும் தீவிரமாக இடம்பெறுகிறது.

இவ்வாறான செயற்பாடுகளைக் கண்டறிந்த யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இதயசுத்தியுடன் தமது உடலை வருத்தி பல போராட்டங்களை மேற்கொள்வது பாராட்டத்தக்கது. போராட்டத்தின் ஆரம்பகட்டத்தை நோக்கும்போது, கல்வியில் தமிழருக்கு துரோகம் இழைக்கப்பட்டதற்காக போராட்டங்கள் வெடித்தது. மாணவர்களது போராட்ட சக்தி என்பது சாதாரணமானதொன்றல்ல. குறிப்பாக பாரிய போராட்டங்களை யாழ் பல்கலைக்கழக மாணவர்களே நடத்தியிருக்கிறார்கள். அதேவேளை தமிழ் மக்களுக்கு எதிரான எந்தவொரு போராட்டங்களை எடுத்துக்கொண்டாலும் சரி யாழ் அரசியல் தலைமைகளே போராட்டங்களைத் தீர்மானிக்கும் சக்தியாகத் திகழ்ந்து வருகின்றது. வன்னி பிரதிநிதிகளோ அல்லது கிழக்கு பிரதிநிதிகளோ அரசியலி லும் போராட்டங்களிலும் யாழ் தலை மையை மிஞ்சி செயற்பட்டதாக இல்லை. இவ்வாறான நிலைமைகள் மாற்றப்படவேண்டும்.

பொங்கு தமிழ், எழுக தமிழ்; இவ்வாறு பல போராட்டங்கள்; நடைபெற்றது. அபிவிருத்தி நடவடிக்கைகளில் சிக்கல்கள் ஏற்படுகின்றபோது அதனையும் தீர்மானிக்கும் சக்தியாக யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் செயற்படுகின்றனர். வன்னியிலும் கிழக்கிலும் இருக்கும் தமிழ் பிரதி நிதிகள் ஓரங்கட்டப்படுகின்றனரா அல்லது திராணியற்றவர்களா என்றும் கேள்விகள் எழுப்பப்படுகின்றது.

இவ்வாறான பாகுபாட்டின் நிமித்தம் தான் தமிழ் மக்களுக்காக ஆயுதமேந்திப்போராடிய வீரர் களின் போராட்டங்கள் மழுங் கடிக்கப்படுவதற்கு மிகப் பிரதான காரணமாகும். ஒற்றுமையை வலுச்சேர்க்கும் வகையில் செயற்படுகின்றோம் எனக்கூறிக் கொண்டு பிரதேச வாதத்தையும், ஜாதி வாததத்தையும் தூண்டுவதன் ஊடாக யாழ் தலைமை அதில் வெற்றி கண்டுள்ளது. தற்போது வட-கிழக்கில் வசித்துவருகின்ற மலை யகத் தமிழர்களையும் தற்போது தேசிய அரசியல் கட்சிகள் பிரித்தாளும் ஒரு தந்திரோபாயத்தை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக வன்னிப் பிரதேசத்தில் வாழ்ந்து வரும் மலையகத் தமிழர்களை வேறுபடுத்திக் காட்டும் ஒரு செயற்பாடாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் நடராஜா அவர்கள் செயற்படுகிறார் எனப் பலரும் கண்டித்துள்ளனர்.

இவ்விடயங்களைக் கூறுவதற்கான காரணம் தமிழ் மக்களது ஒற்றுமை என்பது பல்வேறு விதமாகப் பிரித்தாளப்படுகின்றது. தமிழ் மக்களது பலம் எது பலவீனம் எது என்று பார்க்கும்போது மேற்குறிப்பிடப்பட்ட விடயங்கள் ஊடாக அதனை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி சிங்கள இனவாத அரசானது மிகத் தந்திரோபாயமாக தேசியத்தின் பால் போராடிய போராட்டத் தலைமை களைப் பிளவுபடுத்தியது. அதன் பின்னர் தமிழீழ கனவுடன் போரா டிய தமிழீழ விடுதலைப்புலிகளது போராட்டத்தையும் சிதைத்து, பிரதேச வாதத்தையும் தூண்டி இலங்கையரசு வெற்றி கண்டது.

தற்போது கட்சி அரசியல் செய்வதன் ஊடாக தமிழ் அரசி யல் கட்சிகளுக்கிடையில் நானா? நீயா? என்ற போட்டியை உருவாக்கி தமிழினத்தை அழித்தொழிப்பதற்கு துணைபோன ஆயுதக்கட்சிகள் தங்களைத் தேசியவாதிகள் என்று தற்போது மக்களின் முன் வெளிக்காட்ட முனைகின்றனர்.

இவ்வாயுதக்கட்சிகள் பெரும் பாலும் கொலை, கொள்ளை, கப்பம் போன்றவற்றில் ஈடுபட்டனர். இதனை இவர்கள் மறுக்கமுடியாது. தமிழ் மக்களுக்கான தீர்வுகள் தற்போதும் வழங்கப்படாத நிலை யில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பை பிளவுபடுத்தும் நோக்கில் சிங்கள பேரினவாத அரசாங்கம் தொடர்ந்தும் செயற்படுகிறது. அவர்கள் விரித்த வலையில் தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிக்கித் தவிக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் கடந்த காலங்களில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, தமிழர் விடுதலைக்கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எவ் போன்ற கட்சிகள் கூட்டாக இணைந்து செயற்பட்டது. இக்கட்சிகளுக்குள் முரண்பாடுகளை ஏற்படுத்தி பிள வுகள் ஏற்பட உடந்தையாக ரணில் அவர்கள் கச்சிதமாக செயற்பட்டார். இப்பொறிக்குள் இறுதியாக விழுந்தவர் ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் தலை வர் சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்கள். இக்கட்சிகளுக்குள் ஒற்றுமையின்மை இருக்கிறது.

அதாவது பாலகுமார் அவர்களைத் தலைமையாகக்கொண்ட ஈரோஸ் கட்சியில் இருந்துதான் பத்மநாபாவின் தலைமையில் ஈ.பி.ஆர்.எல்.எவ் – வரதர் மணி, சுரேஸ் அணி, டக்ளஸ் தேவானந்தாவின் ஈ.பி.டி.பி எனப் பிளவுபட்டது.

இவ்வியக்கங்கள் ஒன்று சேர்ந்தால் மாபெரும் சக்தியாக செயற்பட்டிருக்க முடியும். ஆனால் தற்போது தமிழ்த் தேசியக்கூட்டமைப்பை பிளவுபடுத்தும் நோக்கில்; ஈ.பி.ஆர்.எல்.எவ் அணி செயற்படுகிறது. இந்த நிலைமைகள் மாற்றப்படவேண்டும். 2009 யுத்தத்திற்குப் பின் பல்வேறு போராட்டங்களை முன்னெடுக்கும் பின்னணியில் ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்களே செயற்பட்டார். அதிலும் குறிப்பாக அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்கள் தீவிரமாகச் செயற்பட்டார். இவ்போராட்டங்கள் அனைத்தும் வரவேற்கத்தக்கது. ஆர்ப்பாட்டங்களைப் பொது மக்கள் முன்னெடுக்கும் போது ஊடகங்களுக்கு தம்மைத் வெளிப்படுத்தும் முகமாக மக்கள் முன் நின்று பல்வேறு ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டு பயனற்ற செயற்பாடுகளை இவ்வாயுதக்கட்சிகள் செய்து வருகின்றன. தமிழ் அரசியல்கைதிகள் விவகாரம், காணாமல் போனோர் விவகாரம் போன்றவற்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக அனைவரும் இணைந்து செயற்படுவதன் ஊடாக பாரிய வெற்றியினைப் பெறமுடியும்.

தமிழ்ப் பிரதிநிதிகளை பிரித்தாளும் தந்திரோபாயத்தை மாறி மாறி வந்த அரசுகள் செய்கின்றன என்ற சூத்திரத்தை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். மாற்றுவழிகளை கையாள வேண்டும் அல்லது நம்மையே நாம் மாற்றிக்கொள்ளவேண்டும். அஹிம்சைப் போராட்டங்கள் தோல்வியுற்ற போது தான் ஆயுதப்போராட்டம் உருவாகியது.

படித்தவர்கள் ஆயுதம் ஏந்தினால் அதன் நிலைமைகள் மோசமானது என்பதை அரசும் நன்கு அறியும். தேசிய அரசாங்கமானது வட-கிழக்கைக் கையகப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. போர்க்குற்ற விசார னைகளில் இருந்து இராணுவத்தைப் பாதுகாக்கும் ஒரு செயற்பாடாவே தமிழ் அரசியல்கைதிகளை விடுதலை செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. மீண்டும் தமிழினம் ஆயுத கலாச்சாரத்திற்குள் தள்ளப்படுகின்றார்கள் என்பதையே குறித்த போராட்டங்கள் சான்று பகர்கின்றன.

நடைபவனியாகச் சென்ற யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மாணவர்கள் நேற்றைய தினம் அனுராதபுரம் சிறைச் சாலைக் கைதிகளை பார்வையிடச் சென்றபோது அங்கு குழுமிய சிங்களவர்கள் கடும் இனவாதக் கருத்துக்களை வெளிப்படுத்துமுகமாக பேசியிருந்தனர். குறிப்பாக சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் மற்றும் பொலிஸார் ஆகியோர் நிற்கத்தக்கதாகவே இந்த இனவாதக் கருத்துக்கள் மாணவர்களை நோக்கி கூறப்பட்டமை அவதானிக்கக்கூடியதாக இருந்தது. அரசியல் கைதிகள் என்றபெயரில் சிறைச் சாலைக்குள் இருப்பவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் என்றும் அவர்களை விடுவிக்கக்கூடாதென்றும் பல்வேறுபட்ட இனவாதக் கருத்துக்கள் கூறப்பட்டன. மாணவர்களை சூழ்ந்துகொண்ட சிங்களவர்கள் அவர்களை அசுறுத்துமுகமாக செயற்பட்டனர்.

இதன்போது ஸ்தலத்தில் நின்ற சில அரசியல்வாதிகள் ஏதும் பேசாமல் இருந்ததாகவும், அப்போது வவுனியாவை சேர்ந்த  ஆகிய ஊடகவியலாளர்கள் சிலரே மாணவர்களது கோரிக்கையின் நியாயத்தன்மையை சிங்களத்தில் அவர்களுக்கு விளங்கப்படுத்தியதாகவும் நேரில் நின்றவர்களால் கூறப்படுள்ளது.

இந்த நிலையில் மாணவர்களது போராடத்தில் கலந்துகொள்வதாகக் கூறி அவர்களது போராட்ட நியாயத்தன்மையை சிங்களவர்களுக்கு எடுத்துக்கூறுமளவுக்கு அவ்விடத்தில் நின்ற தமிழ்த் தரப்பைச் சார்ந்தோரால் முடியாமற்போனதுடன் ஒதுங்கி நின்றமை வேதனைக்குரிய விடயம் என பலரும் கூறிவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இப்போராட்டங்களை உற்றுநோக்கும் போது தமிழ் மக்களின் அஹிம்சைப் போராட்டங்கள் மீண்டும் தமிழீழத்தை நோக்கிய சமிக்ஞைகளாகவே தென்படுகிறது எனலாம்.

– இரணியன் –

 

SHARE