பௌத்த கோட்பாடுகளை சர்வதேசத்திற்குகொண்டு செல்ல அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் – ஜனாதிபதி

19

தேரவாத பௌத்த கோட்பாடுகளை பாதுகாத்து, அதனை சர்வதேசத்திற்கு கொண்டுசெல்வதற்கு அதன் பிராந்திய நாடுகளுடனும் ஒன்றிணைந்து அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

தாய்லாந்து அரசாங்கத்தின் தம்மசக்க ராஜகீய விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட கலாநிதி வண.கொடகம மங்கல நாயக்க தேரரை வரவேற்கும் முகமாக இன்று பிற்பகல் கண்டி அஸ்கிரிய ஸ்ரீ சந்திரானந்த பௌத்த வித்தியாலயத்தில் இடம்பெற்ற வைபவத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வண.கொடகம மங்கல நாயக்க தேரர் நாட்டிற்கும் பௌத்த சாசனத்திற்கும் ஆற்றிவரும் சேவைகளையும் சர்வதேச ரீதியில் தேரவாத பௌத்த தர்மத்தை பரப்புவதற்காக மேற்கொள்ளும் சேவைகளையும் பாராட்டி தாய்லாந்து அரசாங்கத்தினால் இந்த ராஜகீய விருது வழங்கப்பட்டுள்ளது.

நிகழ்வில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி வண.கொடகம மங்கல நாயக்க தேரருக்கு வழங்கப்பட்டுள்ள இந்த விருது, அவருக்கு மட்டுமன்றி நாட்டிற்கும் கிடைத்த பெரும் கௌரவமாகும் என தெரிவித்தார்.

பௌத்த கோட்பாடுகளை மதித்து, அதற்கமைய சேவையாற்றிவரும் சிறந்த கல்விமானாகிய வண கொடகம மங்கல தேரரின் செயற்பணிகளை ஜனாதிபதி இதன்போது பாராட்டினார்.

வண.கொடகம மங்கல நாயக்க தேரருக்கு தாய்லாந்து அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட ராஜகீய விருதினை ஜனாதிபதி இதன்போது தேரரிடம் கையளித்தார்.

அஸ்கிரிய மகா விகாரை பிரிவின் மகாநாயக்கர் அதிவண.வரகாகொட ஸ்ரீ ஞானரத்தன தேரர், மல்வத்து மகா விகாரை பிரவின் அநுநாயக்கர் வண.திம்புல்கும்புரே விமலதம்ம தேரர், மல்வத்து மகா விகாரை பிரிவின் அநுநாயக்கர் வண.நியங்கொட விஜிதசிரி தேரர், வண.வெடருவே உபாலி அநுநாயக்க தேரர், வண. ஆனமடுவே தம்மதஸ்ஸி அநுநாயக்க தேரர், அஸ்கிரிய மகா விகாரை பிரிவின் வண. கலாநிதி மெதகம ஸ்ரீ தம்மானந்த நாயக்க தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினரும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ், அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ.திசாநாயக்க உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் இலங்கைக்கான தாய்லாந்து தூதுவர் சுலாமணி சார்க்சுவான் அம்மையார் உள்ளிட்ட உள்நாட்டு வெளிநாட்டு அதிதிகள் பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

SHARE