பெண்ணொருவர் உட்பட மூவர் கைது

17

கொழும்பு நகரில் நேற்று மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்புகளில் 173 கிராம் 493 மில்லிகிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் உட்பட மூவர் கொழும்பின் பல்வேறுபட்ட பிரதேசங்களிலிருந்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜயசுமனாராம வீதி ரத்மலானை பகுதியில் வைத்து 10 கிராம் 885 நிறையுடைய ஹெரோயினுடன் பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அதே பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதுடைய சுனேத்ரா மல்காந்தி என்பவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கல்கிஸ்ஸை ஊழல் தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இவரை இன்றைய தினம் கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவிருந்த கல்கிஸ்ஸை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சர்பன்டெயின் வீதி பகுதியில் வைத்து திட்டமிட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் 152 கிராம் நிறையுடைய ஹெரோயினுடன் ஆணொருவர் கைதுசெய்யப்பட்டார். 48 வயதுடைய தேவாலய வீதி பத்தரமுல்ல பகுதியில் வசித்து வரும் வஜிர குமார மதநாயக்க என்பவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டார்.

இவரை இன்று மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவிருந்த திட்டமிட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இவர்களுடன் மேலும் ஒருவர் கிராண்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வதுள்ளவத்த பகுதியில் வைத்து மேல்மாகாண ஊழல் தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார். அவரை கைதுசெய்த வேளையில் அவரிடமிருந்து 10 கிராம் 608 மில்லிகிராம் நிறையுடைய ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் வெள்ளவத்த வெல்லம்பிட்டியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவரே கைதுசெய்யப்பட்டார். இவரை இன்று மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவிருந்த மேல்மாகாண ஊழல் தடுப்பு பிரிவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

SHARE