புலிகளின் அரசியல் பலம் திட்டமிட்டு சிதைக்கப்பட்டுவருகிறது,எச்சரிக்கிறார்புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் க.இன்பராசா 

25

 

புலிகளின் அரசியல் பலம் திட்டமிட்டு சிதைக்கப்பட்டுவருகிறது,எச்சரிக்கிறார் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள்  கட்சியின் தலைவர் க.இன்பராசா

தற்கால தமிழ் அரசியல் கட்சிகளின் தவறான தலைமைத்துவங்களாலும்,வழிகாட்டுதல்கள் ஊடாகவும் தாம் ஒருங்கிணைத்து உலகத்திற்கு காட்டிய தமிழ்த்தேசியம் எனும் ஒற்றுமை இன்று சிதைக்கப்பட்டுவருவதாக பு.த.வி.புலிகள் கட்சியின் தலைவர் அவர்கள் கூறியதுடன் இவ்வாறான அவலமான அரசியல் சூழ்நிலைகளை தேசியத்தை ஒருங்கிணைத்த நாம் ஒருபோதும் வேடிக்கை பார்க்கமுடியாதென கூறியதுடன் மேலும் இது தொடர்பாக தனது காட்டமான கண்டனத்தையும் இன்று அவர் வெளியிட்டுள்ளார்.அன்று எமது இராணுவ மற்றும் அரசியல் பலத்தில் நாம் இருந்தவாறு சர்வதேசத்தின் எம்மீதான சந்தேகங்களை தீர்ப்பதற்காக இலங்கை அரசியலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை எமது சார்பாக களமிறக்கி அவர்களுக்கு நாம் இரத்தம்சிந்தி பெற்றுவைத்திருந்த எமது மக்களின் இலட்சிய வாக்குகளை கொடுத்து சர்வதேசத்தின் எம்மீதான தவறான சந்தேகங்களை அன்று அடியோடு அழித்திருந்தோம்.இவைகள் அனைத்தும் அன்று நிகழ்ந்தபோது எமது இராணுவ மற்றும் அரசியல் பலங்களும் வன்னியில் எமது தலைமையில் இருந்ததென்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

நாம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை எமது மக்களின் தலைவர்களாகவோ,அன்றி எமது அமைப்பின் தலைவர்களாகவோ கருதி அன்றைய சந்தர்ப்பத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை ஒருபோதும் உருவாக்கவில்லை.

இருந்தும் நாம் வன்முறையாளர்கள் என்ற இலங்கை அரசின் போலியான பிரச்சாரங்களை அவர்களின் பாராளுமன்றம் ஊடாகவே உடைத்து சர்வதேசத்திற்கு காட்டும் முகமாகவே அதுவரை இலங்கை அரசோடு கைகோர்த்து எமது விடுதலைப் போராட்டத்திற்கு அரசியல் தடைகளை போட்டுவந்த மாற்றுக்கருத்துக்கொண்ட தமிழ் கட்சிகளை நாம் ஒருங்கிணைத்து “எம்மை ஏகப்பிரதிநிதித்துவப்படுத்தி” ஓர் தற்கால அரசியல் தலைவர்களாக அவர்களை எமது தலைமையில் அன்று நிறுத்தியிருந்தோம்.

அத்துடன் இவர்களின் அரசியல் தலைமைத்துவங்களை முடிவுசெய்யும் சக்திகளாகவும் நாமே இருந்துவந்தோம். ஆனால் எதிர்பாராத விதமாக எமது இராணுவபலம் அழிவினை சந்தித்ததால் எமது நேரடி கட்டுப்பாட்டை இழந்திருந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் தாம் திணறிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் “எமது இயக்கத்தின் மக்கள் சக்தியை எமது மக்கள் தாமாகவே சிந்தித்து” எமது இயக்கத்தால் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பை 2010 நடந்துமுடிந்த தேர்தலில் இலகுவாக தாம் தெரிவுசெய்திருந்தார்கள்.

ஆனால் மக்களின் அன்றைய தெரிவானது இலங்கை அரசின் கோரமான யுத்த முகங்களை சர்வதேசத்நிற்கு வெளிக்கொணர்வதற்கான ஓர் அரிய சந்தர்ப்பமாகவே நிகழ்ந்திருந்தது.

ஆனாலும் எமது மக்களின் உண்மையான எதிர்பார்ப்புகளுக்கு முற்றிலும் மாறாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் இன்றுவரை அதாவது சுமார் ஒன்பது வருடங்கள் தாண்டியும் எந்தவித முன்னேற்றகரமான அரசியல் செயற்பாடுகளையும் எமது மக்களுக்காகவோ,அன்றி எமது தேசியம் சார்ந்த கொள்கைகளுக்காகவோ தாம் சிறிதளவும் முன்னெடுக்கவில்லை என்பதை எமது மக்களும் நன்கு அறிவார்கள்.

இந்த சந்தர்ப்பத்தில்தான் போரில் அகப்பட்டு சிறைமீண்ட எமது போராளிகளும் கூட்டம் கூட்டமாக வெளிவர ஆரம்பித்தார்கள். அவர்கள் அனைவரையும் தமது அரசியல் பித்தலாட்டங்களை தடுக்கப்போகும் சக்திகளாக உணர்ந்துகொண்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் தம்மை நரிகளாக்கி எமது போராளிகளை தமது எதிரிகளாக கருதியதுடன் அவர்களை புறமொதுக்கும் சதிகளையும் மிகவும் தந்திரமாக செயற்படுத்தினார்கள்.

இதற்காக தேசியப்பட்டியல் ஊடாக தம்மால் உள்நுழைக்கப்பட்ட புலிகளின் பரம விரோதி ஒருவரை சரிவர த.தே.கூட்டமைப்பும் பயன்படுத்திக்கொண்டது.

அத்துடன் புலிகளின் தமிழ்த் தேசிய மக்களை சிதறடிக்கும் நோக்கோடு தமக்கு இசைவான தமிழ் கல்விமான் ஒருவரையும் த.தே.கூட்டமைப்பு கொழும்பில் இருந்து தமிழர் தாயகத்திற்கு இறக்குமதி செய்தது.

ஆனாலும் அதிகம் படித்துவிட்டவர்களை தமது கட்டுக்குள் இலகுவில் வளைத்துப்போடமுடியாததால் இருதலை கொள்ளியெறும்பின் அவலமான நிலையினை த.தே.கூட்டமைப்பு தாம் சந்தித்ததுடன், மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தமது தலையால் பல குழிகளை தாம் தோண்டுவதற்கு முயற்சித்தும் இதுவரை அது பிரயத்தனப்படுவதை தவிர வேறெவற்றையும் அதனால் சாதிக்கமுடியவில்லை.

மேலும் மேற்குறிப்பிட்ட இந்த கால இடைவெளிக்குள்தான் த.தே.கூட்டமைப்பு தனது அரசியல் இழப்புக்களை சந்திக்கத்தொடங்கியது.

எங்கு பார்த்தாலும் தமக்கெதிராக மக்கள் கொந்தளிப்பதை அவதானித்து அவற்றை தடுப்பதற்காக எமது தலைவரைப்பற்றிய தமது நற்சான்று அறிக்கைகளையும்,எமது இயக்கத்தின் அரசியல் சக்திகளையும் தமது தொடர் அரசியல் இருப்புக்காக பயன்படுத்தும் நரித்திட்டத்தோடு எமது இயக்கத்தின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளர் எழிலன் அவர்களின் மனைவியை தமது சார்பாக மாகாணசபை தேர்தலில் களமிறக்கி அவரை தேசியத்தின்பால் வெற்றியடையச்செய்து தமது அரசியல் இருப்புக்கள் உறுதியானபின்னர் அவரையும் ஒதுக்கிவைத்தது.

ஆகமொத்தத்தில் புலிகளின் மக்கள் செல்வாக்கினை தமது தனிப்பட்ட கட்சிகளின் செல்வாக்காக மாற்றியமைத்துவிட்டு புலிகளையும் மக்களையும் தமது காலடியில் போட்டு பந்தாடும் தந்திரத்தையே தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தற்போதுவரை செவ்வனே செய்துவருகின்றது.

இதனால் விரக்தியுற்றுவரும் எமது போராளிகளும் மக்களும் தமக்கான மாற்றுவழிகளற்று திணறிவருவதும்,போக்கிடமற்று வீதிகளில் அலைவதுமாக நிற்கதியான சூழ்நிலையில் தவித்துவருகிறார்கள்.

இப்படியான அவர்களின் திட்டமிடப்பட்ட அரசியல் சிதைப்புகளிலிருந்தும்,திணறல்களிலிருந்தும் எம்மையும் எமது மக்களையும் விடுவிக்கவே நாம் எமது போராளிகளை ஒருங்கிணைத்து ஓர் அரசியல் கட்சியாக பதிவுசெய்து எமது கடந்தகால தியாகங்களை நிலைநிறுத்தி எமது தலைமையில் எமது மக்களை நேர்மையான அரசியலின்பால் வழிநடத்த நாம் முயற்சித்துவருகின்றோம்.

எனவே புலிகளின் அரசியல் மீட்சியால் மட்டுமே இனிவரும் காலங்களில் எமது தமிழ்த் தேசியம் சகலவழிகளிலும் தம்மை தலைநிமிர்ந்த முடியுமேயன்றி தற்போதுவரை தொடர்ந்துவரும் குழுவாத அரசியல் தலைமைகளாலோ,அன்றி புலிகள் தவிர்ந்த புதிய புதிய அரசியல் கட்சிகளாலோ ஒருபோதும் எமது மக்களுக்கான நேர்த்தியான அரசியல் தலைமைத்துவத்தை வகிக்கமுடியாதென்பதே எமது நிலைப்பாடாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

 

SHARE