பொருளாதார சவால்களுக்கான தீர்வு குறித்து ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்

17

உலக சந்தையில் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற நிலை காரணமாக தற்போது இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார சவால்களுக்கு தீர்வாக இறக்குமதியை கட்டுப்படுத்தக்கூடிய பொருட்கள் குறித்து கண்டறிந்து ஒரு வாரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிதியமைச்சுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

ஜனாதிபதியின் தலைமையில் நேற்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் தேசிய பொருளாதார சபை ஒன்று கூடியபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

சர்வதேச சந்தையில் டொலரின் பெறுமதி அதிகரித்ததன் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார சவால்களை எதிர்நோக்குவதற்காக இலங்கை மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்த கூட்த்தின் போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.

அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை தற்காலிகமாக மட்டுப்படுத்தி உள்நாட்டிலேயே அவற்றின் உற்பத்தியை ஊக்கப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்பாக தேசிய பொருளாதார சபையில் விசேடமாக கவனம் செலுத்தப்பட்டது.

தற்போது இலங்கையில் இறக்குமதி செய்யும் பொருட்களில் அத்தியாவசிய பொருட்கள் அல்லாத பொருட்கள் தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள எல்லைகளை இற்றைப்படுத்தி, சுற்றாடல் ரீதியிலும் தேசிய கைத்தொழிலுக்கும் தாக்கம் செலுத்தும் பொலித்தீன் இறக்குமதியை கட்டுப்படுத்துவது தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது.

அத்துடன் அத்தியாவசிய பொருட்கள் அல்லாத பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்துவதன் மூலமும் இறக்குமதிப் பொருட்களுக்கு உரியவாறு சுங்க வரியை அறவிடுவதன் ஊடாகவும் நாட்டின் விற்பனை மீதியின் பற்றாக்குறையை நிவர்த்திக்க முடியும் எனவும் ஜனாதிபதி தேசிய பொருளாதார சபையில் தெரிவித்தார்.

உள்நாட்டு வர்த்தகர்களும் உற்பத்தியாளர்களும் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பாகவும் இன்று தேசிய பொருளாதார சபை கவனம் செலுத்தியது. சீனி இறக்குமதியாளர்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பாக  கவனம் செலுத்தப்பட்டதுடன், தற்போதைய கட்டுப்பாட்டு விலைக்கு சீனியை வழங்குவதால் அதிகளவு நட்டம் ஏற்படுவதாகவும் இதன்போது சுட்டிக் காட்டப்பட்டது.

மேலும் உள்நாட்டு பழச்சாறு உற்பத்தியாளர்களின் பிரச்சினை தொடர்பாகவும் தேசிய பொருளாதார சபை கவனம் செலுத்தியது. பழச்சாறுகளில் அடங்கியுள்ள சீனியின் அளவின் அடிப்படையில் விதிக்கப்பட்டுள்ள வரி தொடர்பாகவும் உள்நாட்டு பழச்சாறு உற்பத்தியாளர்கள், பயிர் செய்கையாளர்கள், பான உற்பத்தியாளர்கள் ஆகியோரை ஊக்கப்படுத்தி, அவர்களுக்கு அதிக வாய்ப்புகளை பெற்றுக்கொடுப்பதற்கான உரிய முறையொன்றினை இனங்காண்பதற்கு குழுவொன்றினை நியமித்து, அதன் அறிக்கையை தேசிய பொருளாதார சபையில் சமர்ப்பிக்குமாறு இதன்போது வலியுறுத்தப்பட்டது.

இறக்குமதி செய்யப்படும் சுபர் பொஸ்பேற்று உரத்திற்கு மாற்றீடாக எப்பாவல அப்பற்றைற்றினை உபயோகித்து மொனோ பொஸ்பேற்றுக்களை உற்பத்தி செய்வதற்கான முறை தொடர்பாகவும் தேசிய பொருளாதார சபையில் கவனம் செலுத்தியதுடன், இதனூடாக உர கொள்வனவிற்காக செலவிடப்படும் அந்நிய செலாவணியை மீதப்படுத்த முடியும் என விசேடமாக வலியுறுத்தப்பட்டது.

துறைமுகத்திற்கு கொண்டுவரப்படும் பொருட்களை பரிசோதனை செய்தல் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டதுடன், எழுமாறாக மாதிரிகளை பெற்று ஸ்கேன் செய்வதற்கு பதிலாக பூரணமாக மாதிரிகளை பரிசோதனை செய்ய வேண்டியதன் முக்கியத்துவமும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.

அதற்கமைய தற்போதைய நிலை தொடர்பில் அறிக்கையொன்றினை விரைவில் பெற்றுத்தருமாறு ஜனாதிபதி அவர்கள் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். களுகங்கை பள்ளத்தாக்கு பகுதிகள் எதிர்நோக்கியுள்ள வெள்ளப்பெருக்கு அனர்த்தம் தொடர்பிலும் தேசிய பொருளாதார சபை கவனம் செலுத்தியது.

இரத்தினபுரி, களுத்துறை நகரங்கள் உள்ளிட்ட பள்ளத்தாக்கு பிரதேசங்களின் வெள்ளப்பெருக்கு அனர்த்தத்தை கட்டுப்படுத்துவதற்கு உரிய செயற்திட்டமொன்று அவசியமாகும் எனவும் அது நீண்டகாலமாக தாமதப்படுத்தபட்டுவரும் விடயம் எனவும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார். அதற்கான செயற்திட்டமொன்றை விரைவில் அமுல்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, அந்த நீரினை வடக்கிற்கும் வடமேற்கிற்கும் கொண்டுசெல்வதற்கான செயற்திட்டம் தொடர்பில் சகல தரப்பினர்களையும் உள்ளடக்கிய குழுவொன்றினை நியமித்து சாத்திய வள ஆய்வொன்றினை நடத்தவும் பணிப்புரை விடுத்தார்.

இந்த அமர்வில் அமைச்சர்கள் மங்கள சமரவீர, ராஜித சேனாரத்ன, கலாநிதி சரத் அமுனுகம, துமிந்த திசாநாயக்க, மஹிந்த அமரவீர, மஹிந்த சமரசிங்ஹ, மலிக் சமரவிக்ரம உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன, தேசிய பொருளாதார சபையின் பொதுச்செயலாளர் பேராசிரியர் லலித் சமரகோன், நிதியமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்க, இலங்கை மத்திய வங்கியின் சிரேஷ்ட பிரதி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்ஹ உள்ளிட்ட அதிகாரிகள் ஆகியோரும் பங்குபற்றியதுடன், உள்நாட்டு கைத்தொழிலாளர்களும் வர்த்தகர்களும் இம்முறை தேசிய பொருளாதார சபை கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

SHARE