பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பில் உச்ச நீதிமன்றில் மனு தாக்கல்

43

பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் அரசியல் அமைப்பிற்கு முரணானது என தெரிவித்து தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச உச்ச நீதிமன்றில் நேற்று மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

அரசாங்கத்தினால் கடந்த 9ஆம் திகதி பயங்கரவாத எதிர்ப்பு சட்ட வரைவு நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த சட்டமானது அரசியல் அமைப்பிற்கு முரணானது என தெரிவித்து விமல் வீரவன்ச, உச்ச நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

தற்பொழுது அமுலில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்துவிட்டு அதற்கு பதிலீடாக புதிதாக பயங்கரவாத எதிர்ப்பு சட்டமொன்றை அறிமுகம் செய்ய அரசாங்கம் உத்தேசித்துள்ளது.

இந்த புதிய சட்டத்தில் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கும், நாட்டின் இறைமைக்கும் ஆபத்தான தாக்கம் ஏற்படும் என விமல் வீரவன்ச தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

பயங்கரவாத சம்பவங்கள் தொடர்பில் நாட்டின் பாதுகாப்பு தரப்பினர் மேற்கொள்ளும் விசாரணைகளின் போது, சர்வதேச மனித உரிமை ஆணைக்குழு தேவையற்ற தலையீடுகளை செய்வதற்கு ஏதுவான வகையில் இந்த உத்தேச சட்ட மூலத்தின் 33, 34, 43, 48, 62 மற்றும் 69ஆம் சரத்துக்கள் அமைந்துள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உத்தேச சட்டத்தின் பல்வேறு சரத்துக்கள் இலங்கை அரசியல் அமைப்பின் 1,2,3,4,12(1),30,35 மற்றும் 83 ஆகிய சரத்துக்களை மீறும் வகையில் அமைந்துள்ளன. எனவே இது குறித்து சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென விமல் வீரவன்ச மனுவில் கோரியுள்ளார்.

இந்த சட்டத்தின் ஆபத்தான நிலைமை குறித்து சட்டத்தரணி ஒருவர் ஊடாக எதிர்வரும் காலங்களில் விளக்கம் அளிப்பதற்கு உத்தேசித்துள்ளதாக விமல் வீரவன்ச மனுவில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

SHARE